- தெ.சு.கவுதமன்
பா.ஜ.க.வின் திருச்சி சூர்யா இன்னொரு பா.ஜ.க. பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமாகப் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டில் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையை வைத்து பாஜக தலைவர்கள் அரசியல் செய்யத் தொடங்கினார்கள். தாசி என்று வைரமுத்து குறிப்பிட்டதை வேசி என்று திரித்துப்பேசி, ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் போன்ற பாஜக தலைவர்கள் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டிவிட்டனர். தனது கருத்து திரிக்கப்பட்ட போதிலும் அதுகுறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். எனினும், அதை வைத்து போராட்டத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்த பாஜக, ஆண்டாள் மீது பக்தியுள்ள பெண்களையெல்லாம் வீதியிலிறக்கி வைரமுத்துவுக்கு எதிராகப் போராட வைத்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், நான் சோடா பாட்டில் தூக்கி வீசவும் தயங்கமாட்டேன் என்று பேசினார்.
ஹெச்.ராஜா, வைரமுத்துவின் குடும்பப் பெண்களுக்கு எதிராகக் கொச்சையாகப் பேசினார். நயினார் நாகேந்திரனோ வைரமுத்துவுக்கு எதிராக ஆவேசமாக, “வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்” என்றும், “இந்து மதத்தைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்றும் கொலை மிரட்டலோடு பேசினார். இத்தகைய பேச்சுக்கள் அனைத்தையும் பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆன்மீக அரசியலென்ற போர்வையில் இந்துக்கள் மத்தியில் கலவர உணர்வைத் தூண்டும் நோக்குடனேயே பேசினார்கள். இன்றுவரை பதுங்கி வாழும் நித்தியானந்தாவின் பிடியிலிருக்கும் பெண்கள் கூட்டமும் வைரமுத்துவை மோசமாக வசைபாடத் தவறவில்லை. இப்படிப் பேசிப்பேசியே ஆண்டாளை அவமதித்துவிட்டார் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க முயன்றனர். நீதிமன்றங்கள் பலவற்றில் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்குத் தடைகோரியும், தனது பக்கத்து நியாயத்தை எடுத்துக்கூறியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் வைரமுத்து பேசியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்ற கருத்தை வெளியிட்டது.
வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் ஆண்டாள் என்ற பெண்ணை கவிஞர் வைரமுத்து இழிவாகப் பேசிவிட்டார் என்ற கருத்தைப் பரப்பியே நடத்தப்பட்டன. இதே பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா, கனிமொழி தொடங்கி குஷ்பு வரை பல பெண்களை இழிவாகப் பேசியபோது அவர்மீது பா.ஜ.க. தலைமை நடவடிக்கை எடுக்கவேயில்லை. அதேபோல, பா.ஜ.க.வின் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிக மோசமாக எழுதியபோது அவரைக் கைது செய்யும்படி நீதிமன்றமே சொன்னபோதும் அவரை பா.ஜ.க. பாதுகாத்தது. அதேவேளை, சமீபத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் நடிகை குஷ்புவை இழிவுபடுத்தும்படி பேசியதற்கு பா.ஜ.க. தரப்பில் கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பிலிருந்து அவர்மீது வழக்குப் பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுத்தபோதும் அந்த விவகாரத்தை விடாமல் பெண்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
தற்போது பா.ஜ.க. கட்சிக்குள்ளேயே அதன் நிர்வாகிகளுக்குள்ளேயே மிகமோசமான வாக்குவாதம் நடந்து அதன் ஆடியோ வைரலாகியுள்ளது. பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் என்ற பதவியிலிருக்கும் திருச்சி சூர்யா, தி.மு.க.வின் திருச்சி சிவாவுக்கு எதிராகக் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். அவர் பா.ஜ.க.விற்குள் வந்ததிலிருந்தே சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருக்கிறார். ஏற்கெனவே வள்ளலாருக்குத் தமிழக அரசு விழா எடுத்தபோது வள்ளலாரின் நெற்றியில் திருநீறு இல்லாமல் இருப்பதாகத் தமிழக முதல்வரை அவர் விமர்சித்தபோது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழிபட்ட வள்ளலார் உருவிலும் திருநீறு இல்லாதது சுட்டிக்காட்டப்பட, ஏதேதோ சொல்லி மழுப்பினார். இவர்தான் சமீபத்தில் பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவர் டெய்சி சரணுக்கு போன் போட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவரை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். அந்த ஆடியோ லீக்கான விவகாரம் குறித்து ஏற்கெனவே நமது நக்கீரனில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.
அந்த வீடியோவில் திருச்சி சூர்யா, அந்தப் பெண் நிர்வாகியை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் தாக்கிப் பேசுகிறார். அந்தப் பெண் நிர்வாகி எவ்வளவு கேட்டுக்கொண்டும் அவரது நடத்தை குறித்தும் அவர் பா.ஜ.க.வில் பதவி பெற்றது குறித்தும் இழிவுபடுத்துவதோடு, பா.ஜ.க.வின் கேசவ விநாயகம் குறித்தும் மிகவும் மோசமாகப் பேசுகிறார். டெய்சியை அறுத்து விடுவேனென்றும், கொன்று விடுவேனென்றும், டெய்சி கொல்லப்பட்டால் அதற்குத் தான் தான் பொறுப்பென்றும் பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார். அவருக்கு டெய்சியும் பதிலுக்கு சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியிருந்தார். இந்த உரையாடல்கள் அனைத்துமே ஆடியோவாக வெளியேற சமூக வலைத்தளங்களில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் பதிவிட்டனர். அண்ணாமலையின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர். பா.ஜ.க. நிர்வாகியான காயத்ரி ரகுராம், ஏற்கெனவே அண்ணாமலை மீது முட்டல் மோதலிலிருந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை இல்லையா என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதையடுத்து, பிரச்சனைக்குரியவர்களை விட்டுவிட்டுக் கேள்வியெழுப்பிய காயத்ரி ரகுராமின் பதவிகளை அடுத்த 6 மாத காலத்துக்குப் பறித்துவிட்டார் அண்ணாமலை.
ஆடியோ விவகாரத்தில் பெண் நிர்வாகிக்கு எதிராக சூர்யாவின் மோசமான கொலை மிரட்டல் பேச்சுக்கள் அப்பட்டமாகத் தெரிந்தும்கூட அவர்மீது காவல்துறையில் புகாரளிக்காத முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, விவகாரம் குறித்து விசாரிப்பதற்காகக் கமிட்டி அமைப்பதாகவும், ஒரு வாரக் காலத்தில் விசாரணை முடிவு வந்ததும் அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆக, தனது கட்சிக்காரர் என்ற ஒரே காரணத்துக்காகப் படுமோசமாகப் பேசி கொலைமிரட்டல் விடுத்த திருச்சி சூர்யா மீது மேலோட்டமாக நடவடிக்கை எடுத்து இரட்டை வேடமிடுவதாக அண்ணாமலை மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை நடிகைகள் கஸ்தூரி, குஷ்பு, கௌதமி உள்ளிட்ட யாருமே கருத்து சொல்லாமல் மவுனமாக இருப்பதும் சமூக வலைத்தளத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மவுனம் கலைப்பார்களா?