Skip to main content

விளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்!!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

ஹிட்லர் ஒன்னும் பெரிய விளையாட்டு ஆர்வலர் அல்ல. 1936ல் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒலிம்பிக் நடத்த 1931ல் அனுமதி கிடைத்தது. அந்தச் சமயத்தில் ஹிட்லரின் யூதப் படுகொலைகள் அவருடைய அரசுக்கு எதிர்ப்பை உருவாக்கி இருந்தன.
 

olympic


பெர்லின் ஒலிம்பிக்ஸை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில்தான், ஹிட்லரின் பொய்ப் பிரச்சார அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியை எப்படியும் நடத்த வேண்டும். அப்போதுதான் ஜெர்மனியின் மரியாதை காப்பாற்றப்படும் என்று வலியுறுத்தினான்.

1916 ஆம் ஆண்டிலேயே பெர்லின் ஒலிம்பிக்ஸ் போட்டி நடந்திருக்க வேண்டும். முதல் உலகப்போர் தொடங்கியதால் அந்தப் போட்டி கேன்சலானது. அதனால்தான் ஜெர்மனிக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தினால், ஜெர்மனியின் புதிய அவதாரம் உலகுக்கு தெரியவரும் என்று கோயபல்ஸ் ஹிட்லரிடம் கூறினான். பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஜெர்மனிக்கு உலக நாடுகளில் இருந்து விளையாட்டுகளை பார்க்க வரும் பயணிகள் ஏராளமான வெளிநாட்டு பணத்தை கொண்டுவருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
 

olympic


1அன்றைக்கு 4 கோடியே 20 லட்சம் ரெய்ச்மார்க் எனும் ஜெர்மன் பணத்தைச் செலவிட்டு, பெர்லின் நகருக்கு கிழக்கே ஐந்து மைல் தூரத்தில் 325 ஏக்கரில் ஒலிம்பிக் விளையாட்டு வளாகத்தை உருவாக்கினார்கள்.

1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய ஸ்டேடியம் கட்டப்பட்டது. உள்ளே, இதுவரை உலகில் எந்த ஸ்டேடியத்திலும் கட்டப்படாத வகையில் ஹிட்லரும் உயர்பொறுப்பில் உள்ள நாஜித் தலைவர்களும் அமரக்கூடிய வகையில் மிகப்பிரமாண்டமான இருக்கை வசதி செய்யப்பட்டது.

விளையாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஜெர்மனி அணியில் யூதர்கள் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது தந்தை வழி பாட்டி யூதர் என்பதால் ஒலிம்பிக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தியோடர் லெவல்ட் அறிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் இருந்து யூத வீரர்கள் அனைவரும் வெளியேறி, பல்வேறு நாடுகளுக்குச் சென்றனர். யூதர்களை மட்டுமின்றி, ஜெர்மன் அணியிலிருந்த ஜிப்ஸி இனத்தவரையும் ஒலிம்பிக் கமிட்டி வெளியேற்றியது. ஆரியர்கள் மட்டுமே அணியில் இருக்க வேண்டும் என்று ஹிட்லர் உத்தரவிட்டார்.
 

olympic


ஆரியர்கள் அல்லாதவர்களை மட்டுமே ஜெர்மனி டீமில் அனுமதிக்கும் ஹிட்லரின் முடிவுக்கு உலக நாடுகள் பல கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. அமெரிக்கா அணி இந்த போட்டியில் பங்கேற்கக்கூடாது என்று மிகப்பெரிய குரல் எழுந்தது. ஆனால், அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி தலைவரான ஆவெரி ப்ரண்டேஜ் என்பவரும் கடுமையா எதிர்த்தார். ஜெர்மனியில் யூதர்கள் விளையாடவே அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்திகள் வேறு அமெரிக்கர்கள் ஆத்திரமடையச் செய்திருந்தது. சமத்துவத்தையும், நாடுகளிடையே நம்பிக்கையையும், இனவெறிக்கு எதிராகவும் நடத்தப்படும் ஒலிம்பிக்கில் இனவெறியை ஹிட்லர் புகுத்தியது பல நாடுகளுக்கு எரிச்சலூட்டியது. அமெரிக்காதான் அதிக வீரர்களை அனுப்பி அதிக பதக்கங்களை வென்ற நாடு என்பதால், ஆவெரி ப்ரண்டேஜை ஜெர்மன் அழைத்தது. அவரை சிறப்பாக கவனித்து அனுப்பியதைத் தொடர்ந்து, அவர் ஒலிம்பிக்கில் அமெரிக்கா பங்கேற்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

ஆனால், தடகள வீரர்கள் சங்கம் சார்பில் ஜெரமய்யா மஹோனி என்பவர் ஜெர்மனியை புறக்கணிக்க வேண்டும் என்றார். அவரை பல தரப்பினரும் ஆதரித்தனர். இதையடுத்து, ஜெர்மனி ஒரு பகுதி யூதர்களை தனது அணியில் சேர்க்க அனுமதி கொடுத்தது. தலைவர் பதவியலிருந்து விலகிய தியோடர் லெவல்டை ஆலோசகராகவும் நியமித்தது.

அப்படியும் பங்கேற்பது தொடர்பாக ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் புறக்கணிப்பு முடிவு தோற்றது. எனவே அமெரிக்கா பங்கேற்றது. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதை ரஷ்யா தவிர்த்தது. அமெரிக்க அணியில் கருப்பர்களை அனுமதிப்பதாகவும், வெளிநாட்டு யூதர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜெர்மனி அரசு கூறியது. கருப்பர்களுக்கு உரிய மரியாதை கொடுப்போம் என்றும் ஹிட்லர் அரசு அறிவித்தது.
 

olympic


வெளிநாட்டு அணிகளில் இடம்பெற்றிருந்த யூத விளையாட்டு வீரர்கள் ஸ்டேடியத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இப்படியாக பல திறமையான வெளிநாட்டு விளையாட்டு வீரர்களை ஹிட்லர் அரசு போட்டியில் பங்கேற்க விடாமல் தடுத்துவிட்டது.

அமெரிக்கா தனது வரலாற்றி முதல் முறையாக 312 பேரை பங்கேற்க அனுப்பியது. ஜெர்மனியோ 348 பேரை தயாரித்திருந்தது. வெளிநாட்டுப் பயணிகளை கவர்வதற்காகவும், நாஜி நிர்வாகத்தை சிறப்பாகக் காட்டவும் பெர்லின் நகரம் மிகச் சுத்தமாக பராமரிக்கப்பட்டது. தேவையற்ற ஆட்கள் கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

51 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். ஜெர்மன் அணி வரும்போது அனைவரும் கையை உயர்த்தி அணிவகுத்தனர். ஜெர்மன் போர் விமானமான ஹிண்டர்பர்க் தாழ்வாக பறந்து ஒலிம்பிக் வளையங்களை பறக்கவிட்டு சாகசம் நிகழ்த்தியது.

தடகளப் போட்டிகள்தான் முதலில் தொடங்கும் என்பதால், 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அமெரிக்காவின் கருப்பின வீரரான ஜெஸ்ஸே ஓவன்ஸ் தங்கப் பதக்கங்களை வென்றார். அவரை நீக்ரோ ஓவன்ஸ் என்றும், அமெரிக்க அணியில் இடம்பெற்ற மற்ற 18 கருப்பின வீரர்களை அமெரிக்காவின் கருப்பு உதிரிகள் என்றும் ஜெர்மன் பத்திரிகைகள் அழைத்தன.

அதிக தங்கப் பதக்கங்களை வென்ற ஜெஸ்ஸே ஓவன்ஸ் பெர்லினில் உடனடியாக சூப்பார் ஸ்டார் ஆனார். அவரிடம் கையெழுத்துப் பெற ஜெர்மன் ரசிகர்கள் போட்டிபோட்டனர். முதல்நாள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று அமெரிக்க வீரர்களில் இருவர் கருப்பர்கள். அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்கூறாமல் ஹிட்லர் தவிர்த்தார். இது ஒலிம்பிக் அதிகாரிகளுக்கு அதிர்ச்சிளித்தது. இதையடுத்து, எல்லோரையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் யாரையும் சந்திக்காமல் தவிர்க்க வேண்டும் என்று ஹிட்லரிடம் அறிவுறுத்தினார்கள்.

அடுத்து வந்த நாட்களில் ஹிட்லர் யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், இந்த போட்டி முழுக்க ஹிட்லர் மிக அமைதியாக இருந்து பார்த்தார். ஜெர்மனி வீரர்கள் மொத்தமாக 89 பதக்கங்களையும், அமெரிக்கர்கள் 56 பதக்கங்களையும் வென்றனர். நம்பிக்கையின் வெற்றி அல்லது ட்ரையம்ப் ஆஃப் தி வில் என்ற தலைப்பில் இந்த போட்டிகள் முழுமையும், சினிமாவாக எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

நாஜி அரசாங்கத்தின் நிதியுதவியுடன் லெனி ரீய்ஃபென்ஸ்டால் என்ற பெண் இயக்குனர், அந்த காலத்திலேயே 33 கேமராக்களை்க் கொண்டு, 10 லட்சம் அடி பிலிமில் படம்பிடித்தார். 18 மாதங்கள் அதை எடிட் செய்து நான்கு மணிநேர திரைப்படமாக 1938 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்த ஒலிம்பிக் போட்டிகள்தான் உலகில் முதல்முறையாக பெர்லின் நகரில் 18 இடங்களில் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.