Skip to main content

“ஜெயலலிதா மரணம்; விஜயபாஸ்கர் சிக்குவது உறுதி...” - அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர்

 

Bengaluru Pugazhendi about Arumugasamy commission

 

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், 600 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டது. அந்த அறிக்கையை கடந்த 29-ஆம் தேதி கூடிய தனது அமைச்சரவையில் வைத்து விவாதித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

அதனடிப்படையில் சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு கொடுக்கப்படும் விபர அறிக்கையுடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இதனை தனது அறிக்கையாக தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கும் நிலையில், சசிகலா தண்டிக்கப்படுவாரா? ஆணையத்தின் பரிந்துரைகளை வல்லுநர் குழு ஏற்குமா? என்றெல்லாம் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நாம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், விசாரணை ஆணைய வழக்குகளில் அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடினோம். 

 

அந்த வகையில் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவரான வழக்கறிஞர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் விவாதித்த போது, "ஆணையத்தின் முன்பு ஆஜராகும்படி வி.கே.சசிகலாவுக்கு, செக்சன் 8 பி-யின்படி சம்மன் அனுப்பினார் ஆறுமுகசாமி. அது ஒரு முக்கியமான நோட்டீஸ். அதன்படி சசிகலா ஆஜராகி, ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கறிஞர்களின் யோசனையைக் கேட்டு அவர் நேரில் ஆஜராகாமல் தனது பதில்களை மனுவாக சமர்ப்பித்தார் சசிகலா. இளவரசி, ஓ.பி.எஸ். எல்லாம் ஆஜராகிய நிலையில், சசிகலா வராமல் போனதுதான் அவருக்கு மைனஸ் பாயிண்ட். ஆணையத்தில் நான் ஆஜராகி, ‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ என எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொன்னேன். நான் கொடுத்த வாக்குமூலத்தை வலிமையானதாக எடுத்துக் கொண்டார் ஆறுமுகசாமி.

 

சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில்தான் அப்பல்லோ மருத்துவமனை இருந்தது. அவர்தான் ஆதிக்கம் செலுத்தியவர். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அப்பல்லோவில் நடந்த ரகசியங்கள் என அனைத்தையும் அறிந்த ஒரே நபர் விஜயபாஸ்கர்தான். காரணம், மருத்துவ சிகிச்சை பற்றி சசிகலாவுக்கு என்ன தெரியும்? அவர் டாக்டர் இல்லையே! அதனால், ஆணையத்தின் பரிந்துரைகள்படி பார்த்தால் விஜய பாஸ்கர் சிக்குவது உறுதியாகிறது.

 

அதேசமயம், இந்த ஆணையத்தின் அறிக்கையை வைத்து, தி.மு.க. அரசுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை சட்ட வல்லுநர்கள் வழங்குவார்கள் என்பதும், அதன் மீது என்ன விசாரணையை மேற்கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை. காவல்துறை விசாரணையா? சி.பி.சி.ஐ.டி. விசாரணையா? சி.பி.ஐ. விசாரணையா? என்று எந்த கோணத்தில் தி.மு.க. அரசு விசாரிக்கப்போகிறது? அதனால், எதுவாக இருந்தாலும் விரைவான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும். அரசு எடுக்கப்போகும் அந்த விசாரணை வளையத்தில் நிச்சயம் விஜயபாஸ்கரும் மேலும் சிலரும் தப்பிக்க முடியாது என்றுதான் தெரிகிறது. சசிகலா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தால் ஒருவேளை அவருக்கு சாதகமாகக் கூட அறிக்கை அமைந்திருக்கும்” என்கிறார் அதிரடியாக.