கோப்புப்படம்
சட்டமன்றத் தேர்தலையொட்டி, கடந்த 6ஆம் தேதி ஓட்டுப் போடுவதற்காக தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குச் சென்றார் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. பின்னர் அங்குள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்துவிட்டு சேலம் திரும்பிய அவர், சேலத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்தநிலையில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், உதயகுமார், கே.சி.வீரமணி ஆகியோர் சேலத்தில் தங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும் சில அமைச்சர்கள் ஃபோனிலும் பேசியுள்ளனர்.
ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம்... இந்த 4 பேரும் பாசிட்டிவ்வான ரிப்போர்ட்டை எடப்பாடி பழனிசாமிகிட்டே சொல்லிருக்காங்க. கடைசி 4 நாட்களில் ஆளுந்தரப்புக்குச் சாதகமா களம் மாறிடிச்சின்னும், பெண்கள் ஓட்டு வழக்கம்போல விழுந்திருக்குன்னும் சொல்லியிருக்காங்க. ஆனா, மற்ற மந்திரிகளின் பதிலில் சுரத்து இல்லையாம். அவங்களுக்கு கிடைச்ச ரிப்போர்ட்டால் ஷாக் ஆகியிருக்காங்களாம்.
அதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமியோ, “பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கையில் எடுத்த திமுக, நம்மையும் சேர்த்துக் கவுத்துடுச்சி. பாமக ஓட்டு நமக்கு விழுந்த மாதிரி தெரியலை. அதேபோல் நம்ம ஓட்டு பாஜகவுக்கும் பாமகவுக்கும் முழுசா போயிருக்குமாங்கிறதும் சந்தேகம்தான். அமைச்சர்களும் உங்க தொகுதிகளை மட்டும் பார்த்துக்கிட்டீங்க”ன்னு அப்செட் குரலில் பேசினாராம்.
பாமக தரப்பிடமும் தேர்தல் நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். ராமதாஸ்கிட்ட அவர் பேசுனப்ப, ரொம்ப நம்பிக்கையா பேசியிருக்காரு டாக்டர். “எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் அதிமுக ஓட்டு பாமகவுக்கும், பாமக ஓட்டு அதிமுகவுக்கும் டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு. அதனால 130 முதல் 150 இடங்கள் வரை நம்ம கூட்டணிக்குக் கிடைக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிதான்”னு சொன்னாராம்.
இதே பாசிட்டிவ் ரிப்போர்ட்டை எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் ஆலோசகரான சுனில் தரப்பும் சொல்லியிருக்கு. இரண்டு தடவை தொடர்ச்சியா ஆட்சியில் இருந்தால், மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் ஓட்டுப்போடுவது வழக்கம்தான். ஆனா, நம்மோட கடைசி நேர விளம்பரங்களாலும், வாக்காளர்களுக்கான கவனிப்பாலும் 120 சீட் வரை ஜெயிச்சி ஆட்சிக்கு வந்திடலாம்னு நம்பிக்கை கொடுத்திருக்காரு.
அதே நேரத்தில், தேர்தல் நிலவரம் குறித்து மற்றவர்களிடம் ஆலோசிக்கும்போது, 50 சீட்டிலிருந்து அதிகபட்சம் 80 வரை அதிமுகவுக்கு கிடைக்கும்னு சுனில் தரப்பு சொல்லுதாம். இப்படி உள்ளே - வெளியேனு டபுள் ரிப்போர்ட்டால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.