Skip to main content

அசத்தும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்! முதல்வரை அழைத்த மாணவர்கள்! அதிகாரிகள் ஆய்வு! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Awesome Government School Headmaster! Students invited Chief Minister

 

தமிழக முதல்வர் விரும்பும் தரமான கட்டமைப்புடன் தமிழ்நாட்டில் தலைசிறந்த சில அரசுப் பள்ளிகள் உள்ளன. அதாவது கல்வி மட்டுமின்றி கணினி, இணையம், கலை, இலக்கியம், விளையாட்டு, சிலம்பம், பரதம், நடனம், நாட்டியம், நாடகம், எழுத்து, பேச்சு என்று ஒரு மாணவன் என்னவெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அத்தனையும் ஒரே இடத்தில் அத்தனை மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது என்றால் அது தான் முன்மாதிரிப் பள்ளி.

 

அப்படியான இரு பள்ளிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ளன. அதில் பச்சலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் தமிழக முதலமைச்சரை ஒருமுறை எங்கள் பள்ளிக்கும் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்கள்.

 

நக்கீரன் வாசகர்களுக்கு அந்தப் பள்ளிகளைப் பற்றி நன்கு தெரியும். நாம் சொல்லப் போகும் பள்ளிகள் பற்றி ஏற்கனவே நக்கீரன் செய்திகள், வீடியோக்களை வெளியிட்டிருக்கிறது. இத்தனை கட்டமைப்புகளையும் உருவாக்கி மாணவர்கள் செதுக்கி வரும் தலைமை ஆசிரியர் ஜோதிமணி பற்றியும் நக்கீரன் வாசகர்கள் நன்கு அறிந்ததே. 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வளமாக்கிய தலைமை ஆசிரியர் ஜோதிமணியை பாராட்டி தமிழக அரசின் முதல் புதுமைப் பள்ளி விருதை தலைமை ஆசிரியர் அப்போதைய முதலமைச்சரிடம் பெற்றார். சுமார் 15 ஆண்டுகள் பார்த்துப் பார்த்து இந்த கட்டமைப்பை உருவாக்கி இருந்தார்.

 

2019ம் ஆண்டு இடமாறுதல் பெற்று மாங்குடியிலிருந்து விடைபெற்று பச்சலூர் செல்லும் போது மொத்த மாணவ, மாணவிகளும் தலைமை ஆசிரியர் ஜோதிமணியை கட்டிப்பிடித்து போகவேண்டாம் என்று கதறினார்கள். சக ஆசிரியர்கள், பெற்றோர்களும் ஜோதிமணி காலில் விழுந்து போகவேண்டாம் என்று அழுதனர். இடமாறுதல் பெற்ற பிறகு போகாமல் இருக்க முடியாது என்ற நிலையை சொன்ன போது "மாங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதலில் பச்சலூர் செல்கிறார். அந்தப் பள்ளியையும் மாங்குடி போல உருவாக்கட்டும்" என்று கரும்பலகையில் எழுதி கண்ணீரோடு வாழ்த்தி அனுப்பினார்கள் மாணவர்கள். தற்போது மாங்குடி பள்ளி மாணவர்களின் வாழ்த்துகளும் எண்ணங்களும் போல பச்சலூர் பள்ளியையும், மாணவர்களையும் பன்முகத்திறனோடு செதுக்கி வைத்திருக்கிறார்.

 

Awesome Government School Headmaster! Students invited Chief Minister

 

பல பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், இளைஞர்களும் தினசரி 50 க்கும் மேற்பட்டோர் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்விச் சுற்றுலா வந்து பார்த்து வியப்பதுடன் தங்கள் ஊரிலும் இதுபோன்ற கட்டமைப்பை உருவாக்குவோம் என்று உறுதி ஏற்று செல்கின்றனர்.

 

பள்ளி இறுதி நாளான மே 13ந் தேதி, திருவரங்குளம் ஒன்றியம் வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஆசிரியை, பெற்றோர்கள் கல்விப் பயணமாக காலை 10.30க்கு சென்ற போது முதலில் இன்முகத்தோடு சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றனர் பள்ளி மாணவிகள். இருபுறமும் சீராக வெட்டப்பட்ட செடிகளுக்கிடையே உள்ள நடைபாதை முதலில் வியக்க வைத்தாலும் தலைமை ஆசிரியர் அறை ஒரு பள்ளியின் முழு கட்டுப்பாட்டு அறையாக காட்சியளிக்கிறது. வகுப்பறைகள், நடைபாதை, மைதானம், கலையரங்கம் என அனைத்துப் பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் திரை தலைமை ஆசிரியர் அறையில். அனைத்து அறைகளையும் இணைத்து மைக், ஸ்பீக்கர் மொத்தத்தில் இது ஒரு கட்டுப்பாட்டு அறை தான்.

 

அருகில் உள்ள முழு ஏசி வகுப்பறை, கணினி ஆய்வகம். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஸ்மார்ட் போர்ட், வெள்ளை போர்டு, (இங்கு சாக்பீஸ் பயன்படுத்துவதில்லை) பில்டர் வாட்டர், சீப்பு கண்ணாடி, மாணவர் மனசு தபால் பெட்டி, மின்சாரம் நின்றாலும் கணினி இயக்கத்தை நிறுத்தாமல் இருக்க இன்வெர்ட்டர், குளுகுளு ஏசி காற்று வெளியே போகாமல் இருக்க கண்ணாடி ஜன்னல்கள், புத்தக சுமையை குறைக்க மாணவர்கள் புத்தகம் வைக்க அலமாரி இப்படி ஏராளம்.

 

Awesome Government School Headmaster! Students invited Chief Minister

 

ஒரு வகுப்பறைகளுக்கான ஏ.சி யை கடும் வெயிலில் நூறு நாள் வேலை செய்யும் 8 பெண்கள் தலா ரூ.5 ஆயிரம் கொடுத்து வாங்கிக் கொடுத்த போது.. நாங்கள் வெயிலில் வாடினாலும் எங்கள் குழந்தைகளுக்கு வியர்க்காமல் குளு குளு ஏசியில இருந்து படிக்கனும் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளனர். மாணவ, மாணவிகளின் பன்முகத்திறனை வெளிகாட்டுவதில் ஒன்றாக மாணவர்கள் எந்தப் பாட்டு போட்டாலும் உடனுக்குடன் நடனம் ஆடினார்கள்.


ஒவ்வொரு செயலையும் செய்ய, கண்காணிக்க லீடர்கள். பள்ளி வளாகத்தை கூட்டும் துடைப்பங்கள் கூட அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மதிய உணவை ஒவ்வொரு மாணவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப தாங்களே எடுத்துக் கொள்ளும் வசதி இப்படி ஒரு நாள் முழுக்க பார்த்தும் முழுமையாக பார்க்க முடியவில்லை என்றனர் புள்ளாச்சி குடியிருப்பு மக்கள். 

 

Awesome Government School Headmaster! Students invited Chief Minister

 

எங்கள் தொடக்கப்பள்ளியையும் இப்படி உருவாக்க வேண்டும் என்று எங்கள் பள்ளி விழாவிற்கு வந்த அமைச்சர் மெய்யநாதன் நிதி வழங்கியுள்ளார். முழுகட்டமைப்பையும் உருவாக்க உங்கள் ஆலோசனை வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற தலைமை ஆசிரியர் ஜோதிமணி, புள்ளாச்சிகுடியிருப்பு பள்ளி கல்வி வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் நிதியும் வழங்கி மக்களை நெகிழச் செய்தார். தொடர்ந்து புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி கட்டமைப்பு பணிகளையும் தினசரி ஆய்வு செய்து மாற்றி வருகிறார். இதைப் பார்த்த திருவரங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன் பல கிராமங்களிலும் அரசுப் பள்ளிகளை ஹைடெக்காக மாற்ற நினைத்தால் மாற்றுங்கள் என்று பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புதுக்கோட்டைவிடுதி, சேந்தன்குடி தொடக்கப்பள்ளிகளிலும் கிராமத்தினர் ஒத்துழைப்போடு பணிகள் தொடங்க உள்ளது. வரும் கல்வியாண்டிலேயே திருவரங்குளம் வட்டாரத்தில் 10 அரசுப் பள்ளிகள் பச்சலூர் போல நவீனமயமாகிறது. 


முதலில் மாங்குடி, இப்போது பச்சலூர் இது போல இன்னும் எல்லா பள்ளிகளும் உருவாக வேண்டும் என்பதே நம் எண்ணமும். அதனால் தான் தமிழக முதல்வரை, ‘ஒரு முறை வாருங்கள் அய்யா’ என்று அழைத்திருக்கிறார்கள் மாணவர்கள். இந்த செய்தியை நக்கீரன் இணைய பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தோம். இந்த வீடியோ பதிவு பலதரப்பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஜோதிமணியால் உருவாக்கப்பட்டுள்ள பச்சலூர் மற்றும் மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை திடீர் ஆய்வு செய்துள்ளார். மேலும் பள்ளியின் சிறப்புகளை படங்களாகவும் பதிவு செய்துள்ளனர். சில நாட்களில் மாவட்ட ஆட்சியர் உள்பட பல அதிகாரிகளும் பள்ளியை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

 

Awesome Government School Headmaster! Students invited Chief Minister

 

ஜூன் மாதம் தமிழக முதல்வர் புதுக்கோட்டை வருகை இருக்கும் பட்சத்தில் திடீரென ஜோதிமணியால் கட்டமைக்கப்பட்டுள்ள நம்பர் ஒன் அரசுப் பள்ளிகளான பச்சலூர், மாங்குடி பள்ளிகளுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. பச்சலூரைப் பார்த்து புள்ளாச்சிகுடியிருப்பு, புதுக்கோட்டைவிடுதி, சேந்தன்குடி, கீரமங்கலம், செரியலூர் பள்ளிகள் மாற்றப்படுவது போல முதல்வர் வந்து சென்றால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் பச்சலூர் பள்ளியைப் போல மாற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Education of poor students questioned!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தன்னார்வல நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH - NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது. 

ஆனால், 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றது. அங்கு இலவச கல்வி பயின்று வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது. மேலும், பதினாறு கோடி மதிப்பிலான பள்ளியின் சொத்தை ஆலிவர் சாலமன் என்பவருடன் இணைந்து மேரு மில்லர் சட்ட விரோதமாக விற்று ஊழல் செய்துள்ளார். 

இதனை வன்மையாக கண்டித்து பத்திரிக்கையாளர் சிவராமன், மேரு மில்லரை பணி நீக்கம் செய்ய வேண்டி ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புதிய செயலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், கேள்விக்குறியாக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் கல்விநலன் காக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.