![g](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pznvzw2WfhsjQtTf8nfbCtvPsI4TN5oETKIGA_AGYEU/1590477043/sites/default/files/inline-images/gh_20.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கரூர் எம்பி ஜோதிமணி பிரதமர் குறித்து பேசியதை பாஜக சர்ச்சையாக்கியது. இதுதொடர்பான கேள்விக்கு வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது,
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பிரதமர் பற்றியும், ஆளும் அரசைப் பற்றியும் ஒரு கருத்து முன்வைக்கிறார். அதற்கு எதிர்விமர்சனம் வைத்த பா.ஜ.க.வை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் கரு.நாகராஜன் ஜோதிமணி குறித்து ஒரு தவறான வார்த்தையை உபயோகிக்கிறார். ஒரு பிரதமரை இப்படிப் பேசலாமா என்று ஜோதிமணிக்கு எதிர் தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பிரதமரைப் பற்றியோ அல்லது அவர்களின் கட்சியைப் பற்றியோ யாரும் பேசக்கூடாது என்பதே பா.ஜ.க. மற்றும் அவர்களது ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்ளும் நபர்கள் அமைத்துள்ள திட்டம். அந்தத் திட்டத்தின் படி இந்த அரசையோ அரசில் இருக்கும் அமைச்சர்களையோ யாரும் குற்றம் சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அந்த விவாதத்தில் என்ன சொல்லியிருகிறார்கள், நாங்கள் எல்லாம் மக்களோடு மக்களாக இருக்கின்றோம். அவர்களுக்குத் தேவையானவற்றைத் தந்து கொண்டு இருக்கின்றோம். நாங்கள் அப்படிச் செய்து கொண்டு இருப்பதால்தான் மக்கள் உங்களைக் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மக்களை ஊர் விட்டு ஊர் அலைய விடுகின்ற போது அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுங்கள் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். மக்களை இதே நிலையில் விட்டால் நாட்டில் கொலை, கொள்ளைகள் கொடிய குற்றங்கள் நடக்கும் என்று கூறினால், இதை எல்லாம் செய்ய நீங்கள்தான் தூண்டுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் அவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மக்களுக்காகக் கவலைப்படுவதில்லை. கவலைப்படுபவர்களின் மீதும் அவதூறு கருத்துகளைப் பேசுகின்றனர் அல்லது மக்களைத் தூண்டுகிறார் என்ற பொய்யைக் கூறி அவர்களை முடிக்கப் பார்க்கிறார்கள்.
சின்ன குழந்தைகள் முதல் வயதானவவர்கள் வரை சாலைகளில் தொடர்ந்து நடக்கிறார்கள். இதற்கெல்லாமல் மத்திய அரசு பொறுப்பு ஏற்காதா? இல்லை எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றாவது அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். ஏன் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கமாட்டேன் என்கிறார்கள். சாலையில் செல்பவர்கள் எல்லாமல் மனிதர்கள் இல்லையா, அவர்களுக்குப் பசிக்காதா, மத்திய அரசு அவர்களை ஏன் மனிதர்களாகவே மதிக்க மாட்டேன் என்கிறது. உங்கள் கணக்குகளில் 500 ரூபாய் பணம் போட்டுவிட்டோம் என்று சொல்வதெல்லாம் அவர்களை மேலும் காயப்படுத்தாதா?
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
மத்திய அரசு ரயில்களில் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் ஊருக்கு அனுப்புகிறதே என்று எதிர்கேள்விகளை கேட்பவர்களுக்கு நாம் ஒன்றைக் கூற வேண்டும். இவர்களை எத்தனை நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு அனுப்புகிறீர்கள், இத்தனை நாள் அவர்களை யார் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அனாதை போல்தானே அவர்கள் தினந்தோறும் நாட்களை நகர்த்தினார்கள். அவர்களை எல்லாம் பெரும்பான்மை இந்துக்கள் தானே, சாலையில் நடப்பவர்களில் கொஞ்சம் பேர்தானே முஸ்லிம்கள். அப்புறம் ஏன் அவர்களை இத்தனை நாட்கள் எதுவுமே செய்யாமல் துன்பப்படுத்தினீர்கள். உங்களை ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கு நீங்கள் என்ன செய்து கொடுத்துள்ளீர்கள். இதை எல்லாம் பார்த்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோபம் வராதா? அரசின் இந்தத் தவற்றைக் கேட்டதனால் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வீர்களா? இது நாட்டிற்கும் மக்களுக்கு நல்லதல்ல, அவர்களின் போக்கு அவர்களுக்கே அழிவைத்தரும்,என்றார்.