சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நடப்பு அரசியல் குறித்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "தேர்தல் வர இருக்கின்ற நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களைத் தற்போது அறிவித்து வருகிறார். இதற்குப் பின்புலம் என்ன இருக்கிறது என்பதை நாம் நன்கு ஆராய வேண்டும். உதாரணமாக, விவசாயக் கடனை அவர் தள்ளுபடி செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘தற்போதைய சூழ்நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது தேவையில்லாத ஒன்று. நல்ல நீர்வளம், விவசாயம் செய்கின்ற சூழ்நிலை தற்போது அதிகம் இருப்பதால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை’ என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அது சட்டப்படி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எங்களுடைய தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அவர் அவ்வாறு தெரிவித்த பிறகு, தற்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த நெருக்கடியைக் கொடுத்தது நாங்கள்.
கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறியது நாங்கள். நாங்கள் அவ்வாறு கூறியதும் நெருங்கடி தாங்க முடியாமல் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்று அறிவிக்கிறார். இன்று தமிழக அரசு ஏதாவது நலத்திட்டங்களை ஒன்றிரண்டு அறிவித்துள்ளது என்றால் அதற்கு எடப்பாடி பழனிசாமியின் சொந்தப் புத்தி காரணமல்ல, அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தந்த புத்திதான் இருக்கிறது. இப்போது மும்முனை மின்சாரம் என்று ஒன்று இருக்கிறது. அதைத் தற்போது 24 மணி நேரமும் கொண்டு வரப் போகிறேன் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அடித்துக்கொண்டிருக்கும் ஊழல் சொல்லி மாளாது. இந்த ஆட்சி மாறியதும் சிறைக்குச் செல்லக்கூடிய நபர்களில் மிக முக்கியமான நபராக அமைச்சர் தங்கமணி இருப்பார். இன்றைக்கு ஒரு யூனிட் 7 ரூபாய் என்ற அளவில் மின்சாரத்தை வெளியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த மும்முனை மின்சாரத் திட்டத்தில் தற்போது அடிக்கின்ற கொள்ளை போல அதிகம் அடிப்பதற்கான திட்டம் உள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
கலைஞர் முதல்முறை ஆட்சி செய்தபோது, அந்த ஐந்தாண்டு காலத்தில் 5.5 லட்சம் மோட்டார்களுக்கு மின் இணைப்பு கொடுத்தார். இந்த 10 ஆண்டுகளில் நீங்கள் கொடுத்திருக்கும் பம்புசெட் மின் இணைப்புகள் எத்தனை? இதுவரை நீங்கள் கூறிய கணக்கு 1.5 லட்சம் என்று சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், 5 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்கு மனு போட்டுவிட்டு அனுமதிக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். 5 லட்சம் குடும்பங்களுக்கு விளக்கேற்ற உங்களுக்கு யோக்கிதை இல்லை. அவர்களுக்கு வழங்க மின்சாரம் இல்லை. ஆனால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள், மின் மிகை மாநிலம் என்கிறீர்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த மும்முனை மின்சாரத் திட்டத்தை திமுக வரவேற்றாலும், இதன் பின்னால் பெரிய ஊழல் திட்டங்களுக்கு அரசு வழிகோல பார்க்கிறது என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. எனவே மின்சாரம் கேட்பவர்களுக்கு முதலில் அதை வழங்குவதற்கு வழி செய்யாமல், கொள்ளையடிப்பதற்கு வழி தேட வேண்டாம் என்று இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.