Skip to main content

அன்றே சொன்ன நக்கீரன்; வெளிவரும் அண்ணாமலை ‘ஹனி ட்ராப்’ இரகசியங்கள்! 

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Annamalai video strategy

 

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பெண்களை வைத்து ஆண்களை வலையில் வீழ்த்தும் ஹனி ட்ராப் வீடியோக்களை உருவாக்குகிறார். இதற்கு மத்திய அமைச்சரான முருகன் துணை புரிந்தார் என கே.டி.ராகவன் ஆபாச வீடியோ வரும்போதே 'முருகன் உருவாக்கிய வீடியோ' எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது நக்கீரன்.

 

அந்த ஹனி ட்ராப் வீடியோக்கள் இப்பொழுது எதிர்ப்புறமாகச் சுழன்று அதை உருவாக்கிய அண்ணாமலையைப் பதம் பார்த்துள்ளது என்கிறார்கள் சமீபத்தில் பா.ஜ.க. பற்றி ஊடகங்களில் வெளியான வீடியோக்களைப் பற்றி பேசும் பா.ஜ.க. தொண்டர்கள். கே.டி.ராகவனுக்கும், செம்பாக்கம் வேதா என்கிற காஞ்சி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கும் இடையே கட்சிப் பதவிகள் வழங்குவதில் பிரச்சனை இருந்தது. கே.டி.ராகவன் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞரின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார். செம்பாக்கம் வேதா, அந்த வழக்கறிஞர் மற்றும் முருகனால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட சென்னை மாநகர வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் முருகன் ஆகியோர் இணைந்து கே.டி. ராகவனை ஹனி ட்ராப் செய்ய முடிவெடுத்தார்கள்.

 

இந்த ஹனி ட்ராப் என்பது கர்நாடக அரசியலில் கடைப்பிடிக்கக்கூடிய டெக்னிக். எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபொழுது அவருக்கு எதிராகச் செயல்பட்ட எட்டு அமைச்சர்களை ஒரு சமூக சேவகர் மூலம் ஹனி ட்ராப்பில் சிக்க வைத்தார் அடுத்த முதல்வர் பதவிக்கு தான் வரவேண்டும் என ஆசைப்பட்ட பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் பி.எல். சந்தோஷ். கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஹனி ட்ராப் வேலைகளை பி.எல்.சந்தோஷுக்காக செய்து கொடுத்தது அப்போது கர்நாடகத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை. அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவராகவும், முருகன் மாநிலத் தலைவராகவும் இருந்த காலகட்டத்தில்... பா.ஜ.க.வின் தேசிய முகமாக அறியப்பட்டவர் கே.டி.ராகவன். அவரை அரசியலில் இருந்து காலி செய்யத் திட்டமிட்ட அண்ணாமலையும் முருகனும் சேர்ந்து கே.டி.ராகவனை பெண்களிடம் வீடியோ காலில் பேச வைக்க ஒரு திட்டம் தீட்டினார்கள். அதை, முருகனுக்கு நெருக்கமான கே.டி.ராகவனால் பழிவாங்கப்பட்ட ஒரு வழக்கறிஞரை வைத்து செம்பாக்கம் வேதா மூலம் ஒரு பெண்ணைப் பிடித்து தூண்டில் போட்டு அரங்கேற்றினார்கள்.

 

அதை வெற்றிகரமாக அவர்கள் அரங்கேற்றியதும் பி.எல்.சந்தோஷ் களத்திற்கு வந்தார். கே.டி.ராகவனின் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அண்ணாமலை, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரானார். அத்துடன் ஹனி ட்ராப் விசயங்கள் நின்றுவிடவில்லை. அப்பொழுது பா.ஜ.க.வின் பிரபலமாக இருந்த கேசவ விநாயகம் போன்ற பதினைந்து தலைவர்களின் வீடியோக்கள் இருக்கிறது என்று, இந்த வீடியோக்களை வழக்கறிஞர் உதவியுடன் எடுத்த டீம் அறிவித்தது. ஒட்டுமொத்த பா.ஜ.க.வுமே இன்றுவரை அண்ணாமலைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது எங்கே தங்களது லீலைகளை வீடியோக்கள் வடிவில் அண்ணாமலை வெளியிட்டு விடுவாரோ என்கிற பயத்தில்தான் என்கிற பா.ஜ.க.வினர், அந்த வீடியோக்கள் என் வசம்தான் இருக்கின்றது என அண்ணாமலை பிளாக்மெயில் செய்து வந்த கட்சியின் அவல நிலையை விளக்குகிறார்கள்.

 

சமீபத்தில் தினேஷ்ரோடி என்பவர் எடப்பாடியின் உருவ பொம்மையை கோவில்பட்டியில் எரித்தார். அண்ணாமலையின் ரகசிய ஆபரேஷன்களில் பங்குபெற்று அமர்பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்து அண்ணாமலைக்கு பணம் வசூல் செய்து கொடுத்த தினேஷ்ரோடிக்கு எதிராக எடப்பாடி அமித்ஷாவிடமும், நட்டாவிடமும் புகார் செய்தார். இது முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அண்ணாமலையின் கூட்டுச் செயல் என எடப்பாடி சொன்னதைக் கேட்டு டென்ஷனான அமித்ஷா, எடப்பாடிக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது என உத்தரவிட்டார். அதனால் கேசவவிநாயகம், தினேஷ்ரோடியை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். தினேஷ் ரோடி, அண்ணாமலையிடம் "என்னை நீக்கினால் நீங்கள் செய்த செயல்களை எல்லாம் பிரஸ்மீட் வைத்து சொல்வேன்'' என மிரட்ட, நீக்கப்பட்ட தினேஷ்ரோடி மறுநாளே மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில் பா.ஜ.க.வில் மத்திய அரசு நிறுவனங்களுக்கு டைரக்டர்களை நியமிக்கும் பணி தொடங்கியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கோவர்த்தன் மற்றும் ஆர்.ஜே.ஆனந்த் ஆகியோர் டைரக்டர்களாக நியமிக்கப்பட்டார்கள். இதில் கோவர்த்தன் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆர்.ஜே.ஆனந்த் மீதும் பல்வேறு விதமான புகார்கள் உள்ளன. இதில் கோவர்த்தன் முக்கியத் தலைவரான கேசவவிநாயகத்துக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் வீடு வாங்கிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதே போல தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் செந்தில் என்பவர் போலி நிதி நிறுவனங்களிடம் அண்ணாமலை டீம் வசூலிக்கும் பணத்தில் கோடிக் கணக்கில் லஞ்சம் பெறுகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொள்கை, சித்தாந்தம் போன்றவற்றைப் பேசுவார்கள். பணம் வாங்க மாட்டார்கள் என்கிற பிரச்சாரங்களை மீறி, செந்தில் வாங்கிக் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெரும் புகாராக எழுந்தது.

 

அதற்குப் பதிலளித்த அண்ணாமலை டீம், ஆர்.எஸ்.எஸ். செந்தில் மட்டுமா பணம் வாங்குகிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வந்த பி.எல்.சந்தோஷும் எங்களிடம் பணம் வாங்குகிறார் என கட்சிக்குள்ளேயே தம்பட்டம் அடித்தது. இப்படி புகார் மீது புகார் ஒருபக்கம் எழ, மறுபக்கம் ஊடகவியலாளர்களை ‘செட்டப்’ செய்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அண்ணாமலை கருத்துக்களை உருவாக்குகிறார். அதில் தி.மு.க.வை மிக மோசமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி பரப்புகிறார் என்கிற விசயமும் வெளிவந்தது. இதையெல்லாம் முன்கூட்டியே கணித்த மாநில அரசின் உளவுப்பிரிவுத் தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம், அவருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சிலரை வைத்து, அண்ணாமலைக்கு நெருக்கமான அமர்பிரசாத் ரெட்டியிடம் பேச வைத்தார்.

 

ஆர்.எஸ்.எஸ். செந்தில், அண்ணாமலை உட்பட பலரும் இப்படியெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என போட்டுடைத்ததோடு, பா.ஜ.க.வில் கொலைக் குற்றவாளிகளைக் கூட எப்படிச் சேர்க்கிறார்கள் என அந்த வீடியோவில் உளறிக்கொட்டினார். அத்துடன், ஊடகவியலாளர்களை ஒரு மது விருந்தில் சந்திக்க வைத்து சமூக வலைத்தளங்களில் எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்துக்கள் பணம் கொடுத்து உருவாக்கப்படுகிறது என்பதை விவரிக்க வைத்தார். பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த அமைப்பும் அண்ணாமலையின் கிரிமினல் மூளையால்தான் இயக்கப்படுகிறது என புதிதாக வெளிவந்த வீடியோக்கள் தெளிவாக உணர்த்துகிறது. இவை அனைத்துமே ஏற்கெனவே நக்கீரனில் செய்தியாக வெளிவந்த விவகாரங்கள்தான். வெளியான புதிய வீடியோக்கள், எங்கே தங்களது ஆபாச வீடியோக்களையும் அண்ணாமலை வெளியிட்டு விடுவாரோ என பயந்துகொண்டிருந்த பா.ஜ.க. தலைவர்களை பேச வைத்துள்ளது. அண்ணாமலையை நீக்கிவிட்டு த.மா.கா. தலைவரான ஜி.கே.வாசனை பா.ஜ.க. தலைவராக்க பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானியும், பியூஸ் கோயலும் சில பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

 

கிரிமினல் வேலைகளும் கட்டிங் வாங்குவதும் பா.ஜ.க.வின் கொள்கையாகிவிட்டது என்கிற அலறல் பா.ஜ.க.வில் வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அன்று கே.டி.ராகவனுக்காக அண்ணாமலை கூர் தீட்டிய ஹனி ட்ராப் கத்தி, பூமராங் போல திரும்பி வந்து அண்ணாமலையையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்து எந்த வீடியோ வரும்? என்ன நடக்கும்?

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.