மதுரையைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் எல்லையில் வீரமரணம் அடைந்து, அவரது உடல் நல்லடக்கத்திற்கு அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்துவரப்பட்டது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்றிருந்தார். அங்கு பாஜகவினர் தகராறில் ஈடுபட்டு, அமைச்சரின் வாகனத்தை மறித்து அதன் மீது காலணி வீசினர். இதில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், இந்த சம்பவத்திற்கு பிறகு மதுரை பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளர் சரவணன் கட்சியிலிருந்து விலகி அன்று இரவே அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், நாம் அவரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம் சில பிரத்யேகமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
எதனால் இந்த அளவுக்கு மனமாற்றம் ஏற்பட்டது?
ஆரம்பத்திலிருந்தே நிறைய இருக்கிறது. மாவட்டச் செயலாளர் நியமனத்திலேயே பிரச்சனைகள் இருக்கிறது. நாம் ஒரு சிலரை பரிந்துரைத்தால் அதனை அண்ணாமலையும் செய்கிறேன் என்பார். ஆனால், அது நடக்காது. பாஜகவில் இரட்டைத் தலைமை இருக்கிறது. பாஜகவின் மாநிலத் தலைவராக நாம் அண்ணாமலையை நினைத்திருப்போம். ஆனால், அவர் செய்தித் தொடர்பாளர் போல் பேட்டி கொடுக்க மட்டுமே பயன்படுத்துவார்கள். அமைப்புச் செயலாளரென ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலிருந்துகொண்டு அவர்கள் கட்சியை வழிநடத்துவார்கள். அண்ணாமலைக்குமே அசௌகரியமான நிலையே இருக்கிறது என்று நினைக்கிறேன்.
மேலூரில் இந்து மதத்தை சார்ந்த பெண்ணும், இஸ்லாம் மதத்தை சார்ந்த இளைஞரும் திருமணம் செய்துகொள்கின்றனர். அதில் இறுதியாக இறப்பு நடந்துவிடுகிறது. பாஜகவினர் அதை மத ரீதியாக கடுமையாக எடுத்து செல்கின்றனர். இதில், சில வழிகாட்டுதல்களை வழங்குவது உள்ளிட்ட விஷயங்களை செய்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு ஒரு அப்பாவி பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று, கிருஸ்துவத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என புகார் கொடுக்க இருந்தனர். அது அங்கு ஒரு பெரும் போராட்டமாக மாறி பெரும் செய்தியாக இருந்தது. அதற்குள் நான் அங்கு அவசரவசரமாக சென்று சமாதானம் செய்து அனுப்பிவைத்தேன்.
அவர்களுக்கு இதுபோல், ஏதோவொன்று மதப் பிரச்சனையாக மாறி, சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டு, செய்தியாகவேண்டும். இது அண்ணாமலையின் உத்தியாக இருக்கிறது. இதனால், அங்கு தொடர்ந்து என்னால் இயங்க முடியவில்லை. அங்கிருந்து ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே வெளியேற திட்டமிட்டேன். ஆனால், அவர்கள் அழைத்து நல் அரசியலை மட்டும் செய்வோம் எனப் பேசி சமரசங்கள் செய்தனர். ஆனால், அனைத்திற்கும் உச்சமாக தமிழ்நாடு அமைச்சர் வாகனத்தின் மீது செருப்பு வீசியதை கண்டு இதற்கு மேல் இருக்க முடியாது என அங்கிருந்து வெளியேறி அமைச்சரை சந்தித்தேன்.
முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். விநாய்க் என்பவரின் கட்டுபாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறதே?
இது உண்மை. பாஜகவை அமைப்பு செயலாளர் தான் வழிநடத்துவார், கட்டுப்படுத்துவார். சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்கூட ’நாளைய முதல்வர்’ என போஸ்டர் ஒட்டக்கூடாது, அவர் மேடைக்கு வரும்போது, அண்ணாமலை வாழ்க எனக் கோஷமிடக்கூடாது. ’பாரத் மாதாகி ஜெ’னு கோஷம் மட்டுமே எழுப்பவேண்டும். இந்த கட்சியில் தனிமனித துதி கிடையாது என்றனர்.
திமுகவிலிருந்து நிறைய வாழ்த்து வந்ததா?
திமுக மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்தும், இயக்கங்களிலிருந்தும் வாழ்த்துவந்தது. குறிப்பாக பலர் நீங்கபோய் செட்டில் ஆனதும் சொல்லுங்க நாங்களும் வந்துவிடுகிறோம் என்கின்றனர். குறிப்பாக இரண்டு முக்கிய புள்ளிகள், நீங்கள் போய் தலைவரிடம் பேசிவிட்டு சொல்லுங்கள் நாங்க வந்துவிடுகிறோம் என்றனர்.
நாம் திராவிடத்தில் இருந்து போனதால், வெறுப்பு அரசியல் வராது. நுழைந்த பின்பே எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்களின் சிந்தனையாக இருக்கும். இன்னும் ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் பெரும் மாற்றம் தமிழ்நாட்டில் நிகழும். பாஜகவிலிருந்து பலர் வெளியேறுவர்.
அடுத்து முதல்வரை எப்போது சந்திக்கிறீர்கள்?
நிறைபேர் கேட்டார்கள் அடுத்தது திமுகவில் இணைகிறீர்களா என. ஏன் இணையக்கூடாது அது என் தாய் கட்சி. 15 வருடத்திற்கு மேல் இருந்திருக்கிறேன். தலைவருக்கு கீழ் பணி செய்திருக்கிறேன். எனக்கு எம்.எல்.ஏ.வாக இருக்க வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாங்க திராவிடத்தில் தான் இருக்கிறோம். இது என்னோடு தவறுதானே” என்று தெரிவித்தார்.