Skip to main content

அந்த அச்சம் இருக்கும்வரையில், அண்ணாதான் ஆளுகிறார்... இதுவே சாட்சி!!!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

1968ல் நடந்த தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவில் அண்ணா சொன்னார்... என்னை மருத்துவர்கள் தடுத்தார்கள்; என் தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதைவிட, நான் வீட்டிலிருந்து என்ன பயன்? இந்த உடல் இருந்து என்ன பயன்? மூன்று பெரும் சாதனைகளை எங்களுடைய அரசு - திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்திருக்கிறது.

 

anna



*தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம்.

*சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம்.

*இருமொழிக் கொள்கை - தமிழ் - ஆங்கிலம் மட்டும்தான் மும்மொழிக்கு இடமில்லை.


இந்த மூன்றும் மிக முக்கியமானது. எங்கள் ஆட்சியையே மாற்றவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று எனக்குச் செய்தி வந்தது. அவர்களால் முடியுமா? என்று நான் சவால் விடமாட்டேன். இன்றைய அரசியல் அமைப்புச் சட்டப்படி, அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால், அப்படியே வேறு யார் வந்து உட்கார்ந்தாலும், நாங்கள் செய்த இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தாலோ, அந்த நேரத்தில் அதை மாற்றினாலோ, மக்கள் நிலை என்னாகும்? தமிழ்நாடு எப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் என்று நினைக்கின்ற நேரத்தில், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்றவரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள் என்று.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததுமுதலே தமிழ்நாட்டிற்கு சோதனைகாலம் ஆரம்பித்துவிட்டது எனக்கூற தொடங்கிவிட்டனர் மக்கள். அதைப்போலவே புதிய கல்விக்கொள்கை வெளியானது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் அதனுடன் ஒரு விருப்ப மொழியை தேர்வு செய்து படிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக்கொள்கை இந்தியைத் திணிப்பதாகவே இருக்கிறது. இந்தியை திணிப்பதற்காகவே இதையெல்லாம் செய்கிறார்கள் என்று எதிர்கட்சிகள் உட்பட அனைவரும் விமர்சித்தனர், கண்டனங்களை எழுப்பினர்.  

இதைத்தொடர்ந்து அந்த கல்விக்கொள்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. நேற்றுமுன்தினம் முதல்வர் மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யவேண்டுமென ட்விட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்தார். இது மறைமுகமாக மும்மொழிக்கொள்கையை ஆதரிப்பதாக உள்ளது என கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக்கொள்கைதான், மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை எனவும் முதல்வர் நேற்று தெரிவித்தார்.  இப்படியாக இந்தி திணிப்பிற்கு ஒரு சிறு வழிகூட விடாமல் மக்களும், எதிர்கட்சிகளும் செய்தனர். ஆட்சியாளர்களாலும் அதை தொடரமுடியாமல் கைவிட்டனர். 


இன்று மத்தியில் தனிப்பெரும்பான்மையில் பாஜக இருக்கின்றபொழுதும், அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி இருக்கின்ற பொழுதும் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முடியவில்லை, மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை. அண்ணா அன்று சொன்னது இன்றும் நிகழ்வாகியிருக்கிறது. ஆம் தற்போதும் அண்ணாதான் ஆளுகிறார். என்றும் அண்ணாதான் ஆள்வார். தமிழ்நாட்டு மக்கள் இதை ஏற்பார்களா என்ற பயத்தின் வழியாக அண்ணா நாட்டை ஆள்கிறார்.
 

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.