நக்கீரனில் ‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசிவருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. செய்தி தொடர்பு துணைத்தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி, டிடி தமிழ் அலுவலகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்தி மாத நிறைவு கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ஆளுநர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் அங்குள்ள நிலையத் தலைவர், நிகழ்ச்சி துறைத் தலைவர், மற்ற அதிகாரிகள் நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை சரியாக செய்யவில்லை என்பது பெரிய கேள்வியாக எழுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடு’ என்ற வரி பாடப்படாததற்கு விசாரணை அன்று இரவே 10 மணிவரை அங்கே நடைபெற்றிருக்கிறது. அதன் பிறகு மொட்டை கடிதத்தில் மன்னிப்பு கேட்டு இருக்கின்றனர். ஆனால் அது யார் மன்னிப்பு கேட்கின்றனர் என்று பெயர் குறிப்பிடவில்லை. அங்குள்ள அதிகாரிகள் பலருக்கு தவறை ஒப்புக்கொள்ள துணிச்சல் இல்லாமல் பாடலை பாடியவர்கள் மீது பழியை சுமத்தினர்.
அதே போல் தமிழிசை செளந்தர்ராஜன், எச்.ராஜா போன்றோர் குழந்தைகள் சரியாகப் பாடவில்லை என கருத்து தெரிவித்தனர். அந்த குழந்தைகளுக்கு எல்லாம் 50 வயது நிரம்பியவர்கள் என்பதுதான் வேடிக்கையானது. அலுவலகத்தில் இருக்கக்கூடிய மூன்று பெண்கள்தான் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியிருக்கின்றனர். குறிப்பிட்ட வரியை விட்டுவிட்டுதான் பாட சொல்லியிருகின்றனர். ஆனால் இயல்பாகவே அவர்கள் அந்த வரியை பாடும்போது அந்த இடத்தில் தடுமாறியிருக்கின்றனர். அங்கு நடந்த சம்பவம் தற்செயல் என்று சொல்லக்கூடிய திட்டமிட்ட செயல்தான். பொதுவாகவே டிடி அலுவகத்தில் பெண்கள் மீது நிறைய குற்றம் சுமத்துவார்கள். அங்கு பணியாற்றும்போது எனக்கும் அப்படித்தான் நடந்தது.
ஒன்றியத்தில் மோடி ஆட்சி வந்ததிலிருந்து என் மீது நிறைய புகார்கள் அங்கு எழுந்தது. நான் தமிழ், சமத்துவம் போன்ற கருத்துகளை பேசி வந்தேன். அதனால்தான் நான் அங்குள்ளவர்களால் குறி வைக்கப்பட்டேன். அவர்கள் எல்லோரும் நான் தந்தை பெரியார் பற்றி பேசிவிட்டேன், என்னுடைய நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார் என்று தினத்தோறும் புகார் கூறி மொட்டை கடிதத்தை டெல்லிக்கு அனுப்புவதையே வேலையாக தொடர்ந்து செய்து வந்தனர்.
தூர்தர்ஷன் தொடங்கடப்பட்ட நாளிலிருந்தே இந்தி தினக் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். இது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மற்றவர்கள் உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்காது. இந்தி நிகழ்வு ஒருபக்கம் அமைதியாக நடத்துவார்கள். ஆனால் இப்போது நடந்தது போல எந்த எதிர்வினையும் நடந்திருக்காது. காங்கிரஸ் ஆட்சியில் வராத எதிப்பு இந்த வருடம் ஏன் வருகிறதென்றால் இப்போது அங்கு சனாதனம் இருக்கிறது. காவி மயமாக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் எதையும் திணித்தது கிடையாது. எல்லாமே இயல்பாக இருந்தது. இப்போது பொதிகை என்ற தமிழ் பெயரை மாற்றி நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் இந்தியில்தான் நடைபெறுகிறது. லோகோ காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்தளவிற்கு திணிப்பு இப்போது அதிகமாக இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் எந்த நிகழ்ச்சியிலும் தலையிட மாட்டார்கள். சனாதனத்தை உயர்த்திப் பிடியுங்கள் என்ற தலையீடு இருக்காது. மத்திய அரசைப் பற்றிய செய்திகள் சரியாக வெளியிடப்படுகிறதா? என்றுதான் பார்ப்பார்கள். மிகவும் சுதந்திரமாக அப்போது செயல்பட்டோம். இப்போது சுதந்திரப் போராட்டத்தில் கூட பங்கு பெறாத சாவர்க்கரை கொண்டாடும் வகையில் இங்குள்ள தயாரிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். அவருடைய முக்கியமான வேலையும் பிறர் பற்றிய புகார்களை மொட்டை கடிதத்தில் தெரிவிப்பதுதான்.
நான் அங்கு நிகழ்ச்சி துறைத் தலைவராக இருந்தபோது ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் குணசேகரன் என்ற சிந்தனையாளரை வைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தி வந்தேன். அவர் பெயருக்கு முன்பு ஸ்டாலின் என்ற பெயர் வந்ததால் ஒன்றியத்திலிருந்து அந்த நிகழ்ச்சியை நிறுத்தச் சொன்னார்கள். நான் நிறுத்த முடியாது என்று சொன்னதால் என்னை புதுச்சேரிக்கு பணியிடை மாற்றம் செய்தனர். 2016-ல் என் கணவர் அங்கு நிகழ்ச்சி துறைத் தலைவராக இருந்தார். அவர் தந்தை பெரியார் பற்றி நிகழ்ச்சி செய்து வந்தார். அப்போது எச்.ராஜா அந்த நிகழ்ச்சிக்கு எதிராக தலையிட்டு நடத்தக்கூடாது.
விநாயகர் சதூர்த்திக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றார். நான் அங்கிருக்கும் போது ‘பொதிகை சமூகத்தின் மகிழ்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு விளம்பர ஏற்பாடு செய்தேன். சமூகம் என்ற வார்த்தை கிறிஸ்தவத்தை முன் நிறுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதை நிறுத்த சொன்னார்கள். அவர்களின் கருத்துக்கு நான் முரண்பட்டதால்தான் எனக்கு எதிராகவே அவர்கள் செயல்பட்டு வந்தனர். இப்போது தீவிரமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் இணை அமைச்சர் எல்.முருகன் தலையிட்டு வருகிறார். மக்கள் வரிபணத்தில் செயல்படும் தூர்தர்ஷன் முன்பு பொதுமக்களுக்கானதாக இருந்தது இப்போது மோடியைப் பற்றி மட்டும்தான் பேசி வருகின்றனர்.