Skip to main content

480 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கல்வெட்டும் செப்புப் பட்டயமும் கண்டுபிடிப்பு

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
ancient inscriptions and a copper plate dating back 480 years were discovered

இந்துசமய அறநிலையத்துறையின் திருக்கோயில் சுவடித்  திட்டப்பணியின் மூலம் திருக்கோயில்களில் உள்ள பழமையான அரிய ஓலைச்சுவடிகள் பரிமரித்துப் பாதுகாப்பதோடு நூலாக்கம் செய்யும் பணியும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருக்கோயில் சுவடித் திட்டப்பணிக்குழுவினர் புதிதாக 480 ஆண்டுகள் பழமையானச் செப்புப் பட்டயம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

அதுகுறித்து சுவடித் திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: இந்துசமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் சீரிய பணியின் முன்னெடுப்பால் உருவான திருக்கோயில் சுவடித் திட்டப்பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இச்சுவடித்திட்டப்பணியின் மூலம் புதிதாக இராதாபுரம் வரகுணீச்சுரமுடைய நயினார்- கல்யாண சவுந்தரி நாச்சியார் அம்மன் திருக்கோயிலில் இருந்த செப்புப் பட்டயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செப்புப் பட்டயத்தில் உள்ள செய்தி கோயில் கருவறையின் மேற்கு பக்க மணிமண்டபத்தின் மேல்பகுதியில் கல்வெட்டாகவும் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. செப்புப் பட்டயமும் கல்வெட்டும் கோயில் சந்திப்பூசைக்கு வழங்கப்பட்ட நிலதானம் குறித்த  செய்தியைப் பேசுகின்றன. செப்புப் பட்டயமும் கல்வெட்டும் கி.பி.1534ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளன.

இராஜா பூதலவீர ஸ்ரீ இரவிவர்மன் அளித்த நிலதானம்: 

ancient inscriptions and a copper plate dating back 480 years were discovered

ராஜா இரவிவர்மனின் முழுப்பெயர் புலி பூதள வீர உதயமார்த்தாண்டன் என்று வரலாறு வழி அறியமுடிகிறது. இவன் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை ஆட்சி செய்ததாக வரலாற்று வழி அறியமுடிகிறது. இவன் சுசீந்திரம், தோவாளை, தாழக்குடி ஆகிய ஊர்களின் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியுள்ளான். இவன் கி.பி.1522 முதல் 1544 வரை ஆண்டதாக வரலாற்று வழி தெரிந்துகொள்ள முடிகிறது.

நமக்கு கிடைத்துள்ள செப்புப் பட்டயமும் கல்வெட்டும் ராஜா  இரவிவர்மன் முர்த்தா நாடு பகுதியை ஆண்டதாகக் குறிப்பிடுகிறது. மூர்த்தா நாடு என்பதில் பணகுடி உள்ளிட்ட பகுதிகள் அடங்கி  இருந்துள்ளன.இரவிவர்மன் பூசங்குடியான் என்று அழைக்கப்பட்டுள்ளான். மேலும் இவன் செய்துங்க நாட்டை ஆண்ட சங்கரநாராயணன் என்பவனை வென்றதாகவும் அறியமுடிகிறது. இத்தகைய சிறப்புடைய இராஜா ரவிவர்மன் தன் பெயர் விளங்க வரகுணீச்சுரமுடைய நயினார் - கலியாண சவுந்தரி அம்மன் கோயிலுக்கு சந்திப்பூசை நடக்க நிலதானம் செய்துள்ளான்.

இரவிவர்மன் வழங்கிய நிலதான எல்லை விவரம்:

இராஜா இரவிவர்மன் முர்த்தா நாட்டில் உள்ள இருக்கன் துறை என்று இன்று இன்று அழைக்கப்படும் சீவலப் பாடி நகர் பற்றில் சான்றான் குளம் (சாணான்குளம் என்று இன்று வழங்கப்படுகிறது.) உள்ளிட்ட பற்றிலுள்ள நஞ்சையும்  புஞ்சையும் கரைப்பற்றும் வழங்கியுள்ளான்.அவன் வழங்கிய தான நிலத்தின் பெரிய நான்கு எல்லைகள் விவரம் தெளிவாகப் பட்டயத்திலும் கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளன.

ancient inscriptions and a copper plate dating back 480 years were discovered

அதாவது:கீழ் எல்கை உப்பிலிகுளத்து நீர்நிலைக்குங் குளுவாஞ்சேரி குளத்து நீர்நிலைக்கும் மேற்கு பகுதி என்று கூறப்பட்டுள்ளன.  தென் எல்லைப்பகுதி கூடன்குளத்து வகைக்கு வடக்கு பகுதி என்று சுட்டப்பட்டுள்ளது. அதுபோல  மேல் எல்லை சங்கநேரிக்குளத்து எல்கைக்கு கிழக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு எல்லை இராதாபுரத்து எல்லைக்கு தெற்கு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவ் பெரிய நான்கு எல்லைகளுக்குட்பட்ட குளமும் புரவும் கரைப்பற்றும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் பூசங்குடியான இராசராசபுரம் பற்றுக்கு கீழ்ப் பால் இளையனார் குளத்து பற்று (இன்றைய வழக்கு இளையநயினார் குளம்) பகுதியில் வழங்கப்பட்ட நிலதான விவரமும் பெருஎல்லை விவரமும் சுட்டப்பட்டுள்ளன. கீழெல்கை முறக்குளப் பற்று எல்லைக்கு மேற்குத் தென் எல்லை கன்னியார் விளாகத்து நீர்நிலைக்கு வடக்கு என்று நவிலப்பட்டுள்ளது. மேலெல்லை கூற்றுவனேரிக் கரைக்கு கிழக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. வடக்கு எல்லை கோட்டைக் கருங்குளம் பற்றுவகைக்கு தெற்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த நான்கு பெருஎல்லைக்கு உட்பட்ட குளமும் புரவும் கரைப்பற்றுமட்டுமல்லாமல் குள மிரண்டிலுள்ள நஞ்சையும் புஞ்சையும் கரைப்பற்றும் மேல்நோக்கின மரமும் கீழ்நோக்கிய கிணறும் தானம் செய்யப்பட்டதாக சுட்டப்பட்டுள்ளது. இச்செய்தி கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்ட செய்தியினையும் செப்புப் பட்டயம் தெளிவாகச் சுட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Next Story

தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு‌!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
discovery of the Zamindar inscription of the Ore Pancha period

கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயலில் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார்  கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, கள ஆய்வாளர், கா. சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா‌. காளிராசா, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது. கல்லலை அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த  ஊராகும். இங்குள்ள மும்முடீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும், மேலும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாயில் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனக்கண்மாய்;

அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடர்வண்டிப் பாதையை ஒட்டிய ஒரு பகுதியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.

அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்;

சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப் பெற்று சசிவர்ணதேவர் அவர்களால் 1730 இல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம், உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 03.09.1801ல் இருந்து இஸ்திமிரிங் ஜமீன்தாராக கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்று முதல் ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது. கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். இவர் வேறு சமூகத்தை சார்ந்தவர். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தாராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோவிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படி இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வெட்டு அமைப்பு;

சீனக் கண்மாயில் நீர் நிறைந்து வெளியேறும் கலுங்கு மடை கரைப்பகுதிகள் செம்புராங்கல்லாலும்.. நீர் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி  அகலமும் உடையதாகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி;

உ 1876 ஆம் வருஷம் மே மாதம் எட்டாம் தேதி தாது வருஷம் சித்திரை மாதம் 28ஆம் தேதி சிவ- சப்-கட்டணூர் ஜமீன்தார் முத்து வடுகு முத்துராமலிங்க தேவர்வர்கள்.என்று எழுதப்பட்டுள்ளது. சிவ - சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாய்க் கல்வெட்டின் வழி கண்மாயை முத்து வடுகு என்ற முத்துராமலிங்க  ஜமீன்தார் அவர்கள் கண்மாய், மற்றும் கலுங்கை சீர் செய்தமையை அறிய முடிகிறது.

தாது பஞ்சம் காலம்;

1876 ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று சொன்னாலும் இதற்கு முன்னும் பின்னும் சேர்த்து ஏழு ஆண்டுகள் மழை இல்லாமல் மிகுந்த வறட்சியாக இருந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கர்நாடகா மகாராஷ்டிரா வரை இப்பஞ்சம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது.

தாது பஞ்சம் பற்றி பல இலக்கியங்கள் குறிப்பிட்டாலும் சிவகங்கை பகுதியில் கண்மாய்களை தூர்வாரி பராமரிப்பு பணியை செய்து இருப்பதன் மூலம் அடுத்த மழைக்கு தயாராக இருந்ததை அறிய முடிகிறது.

பஞ்ச லட்சண திருமுக விலாசம்;

சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவைப் புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பாடிய எள்ளல் சுவை மிகுந்த நூல் பஞ்சலட்சன திருமுக விலாசம் ஆகும். இந்நூலில், மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவரோ சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கம் அவர்களிடம் முறையிட அனுப்பி வைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது.

சிவகங்கை தொல்நடைக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர், தாது பஞ்ச காலத்தில் இலங்கையில் தொழில் செய்த தனிநபர் ஒருவர், குளம் மற்றும் வரத்துக் காலை சீர் செய்து உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய கல்வெட்டை சிவகங்கை அருகே உள்ள இடைய மேலூரில் கண்டுபிடித்தது, குறிப்பிடத்தக்கது.

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.