Skip to main content

கோட்டையில் எலும்பாலான பழங்காலக் கருவி கண்டுபிடிப்பு! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Ancient bone tool found in the fort!

 

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் எலும்பாலான பழங்காலக் கருவி, பானையோட்டுக் குறியீடு, சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிப்பு.

 

சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா. சரவணன் ஆகியோர் காளையார்கோவில் பாண்டியன் கோட்டைப் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் எலும்பாலான பழங்காலக் கருவி, பானையோட்டுக் குறியீடு, சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.

 

Ancient bone tool found in the fort!

 

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாவது; காளையார்கோவிலில் சங்க காலத்தோடு தொடர்புடைய பாண்டியன் கோட்டை பழமையான தொல்லியல் மேடாக அமைந்துள்ளது. இங்கு சிவகங்கை தொல்நடைக் குழுவினர் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்ச்சியாகப் பழங்காலப் பொருட்கள் கிடைத்து வருகின்றன‌‌.

 

வட்ட வடிவிலான கோட்டை


பழங்கால கோட்டை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 33 ஏக்கர் பரப்பளவில் நடுப்பகுதியில் நீராவி குளத்துடன் புறநானூற்றிலே சொல்லப்படுகிற 21 ஆவது பாடலின்படி 'குண்டுகண் அகழி' ஆழமான அகலமான அகழியை உடையதாக இக்கோட்டை அமைத்திருந்ததை எச்சங்களின் வழி அறிய முடிகிறது. கோட்டையின் இலக்கணங்களோடு கிழக்கு பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவிலும் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. இவை கோட்டை காவல் தெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றன.

 

தொடர்ந்து கிடைக்கும் தொல் எச்சங்கள்


மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாகத் தொன்மையான எச்சங்கள் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன‌. இதில் வட்டச் சில்லுகள், பானை ஓட்டு எச்சங்கள், பானை ஓட்டுக் கீறல்கள், குறியீடுகள், சங்ககால செங்கற்கள், எடைக்கல் போன்றவை கிடைத்துள்ளன.

 

தமிழி எழுத்து


தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. அதில் பழங்கால சங்க காலப் புலவர் மோசுகீரனார் போன்று மோசிதபன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது.

 

எலும்பு முனைக்கருவி


தற்போது வட்டச் சில்லுகள், பானை ஒட்டுக் குறியீடுகள், எலும்பாலான முனையை உடைய கருவி, பழங்கால கூரை ஓட்டு எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் எலும்பாலான முனையை உடைய கருவி அரிதானதாகும்.

 

Ancient bone tool found in the fort!

 

எலும்பைத் தேர்வு செய்து அதன் முனையைக் கூர்மையாக்கி அம்பு போன்ற பயன்பாட்டிற்காகவோ அல்லது நெசவு செய்யும் கருவியாகவோ இக்கருவியைப் பயன்படுத்தி இருக்கலாம். இவ்வாறான பொருள் கீழடி போன்ற அகழாய்வு இடங்களில் கிடைத்திருக்கின்றன. இவை மனிதனின் வாழ்விடப் பகுதி என்பதை உறுதிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

 

ஓரிரு மாதங்களுக்கு முன் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் காளையார் கோவில் எனப்படும் கானப் பேரேயிலின் பழங்கால ஈமக்காட்டு கல்வட்ட எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவகங்கை தொல்நடைக் குழு மேற்கொண்ட முயற்சியின்படி இவ்விடம் தொல்லியல் துறையால் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் முறையான தொல்லியல் துறை அகழாய்வு செய்யும்போது பழமையான சங்க கால கோட்டை அமைப்பு மனித வாழ்வியல் பகுதி வெளிப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று தெரிவித்தார்.

 

 

 

Next Story

ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புப் பட்டயங்கள் கண்டுபிடிப்பு!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

alwarthirunagari temple discovered thirumalai naicker copper plate

 

திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு நூலாக்கத் திட்டத்தின் பணிக் குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணை ஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 4 செப்புப்பட்டயங்களையும் கண்டறிந்தனர். இதில் இரண்டு மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது ஆகும். செப்புப் பட்டயங்கள் இவ்வூரிலுள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமானவை ஆகும்.

 

இச்செப்புப்பட்டயங்களைப் படித்து ஆய்வு செய்த சுவடியியல் அறிஞர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, "இவை கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் இரண்டு பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும் மற்ற இரண்டு பட்டயங்கள் கோயில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டவை ஆகும்.

 

முதல் பட்டயம் கி.பி.1637-ம் ஆண்டைச் சேர்ந்தது. இது திருமலை நாயக்கர், வடமலையப்ப பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாக காந்தீஸ்வரம் இறைவன் ஏகாந்த லிங்கத்துக்கு சிறு காலைச் சந்திப் பூசையில் அபிஷேகமும் நைவேத்தியம் செய்யப்பட்ட வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின்படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தது ஆகும். 1944-ல் வெளியிடப்பட்ட "திருமலை நாயக்கர் செப்பேடுகள்" என்ற நூலில் இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2-வது பட்டயத்தில் கி.பி.1671-ல் காந்தீஸ்வரம் சுவாமி ஏகாந்த லிங்கத்துக்கு பிரதிநாமமாகவும், மகாஜனங்கள், திருமலை நாயக்கர், வடமலையப்ப பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாகவும் விளங்க தர்மதானப் பிரமாணம் வழங்க வல்லநாட்டு நாட்டவருக்கு வடமலையப்ப பிள்ளை கட்டளையிட்டமையால் அவர்கள் கோயிலுக்கு வழங்கிய நில தானம் மற்றும் அதன் எல்லை பற்றி கூறப்பட்டுள்ளது. இரு பட்டயங்களிலும் வழங்கப்பட்ட தானத்தை கெடுக்க நினைப்பவர்கள் நதிக்கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என இறுதியில் குறிப்பிடப்படுகிறது. இவற்றை சிதம்பரநாதன், தன்மகுட்டி முதலியார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

 

3-வது பட்டயம் கி.பி.1866 ஜனவரி 23-ல் எழுதப்பட்டுள்ளது. இதில் இக்கோயில் தர்மகர்த்தா ஆழ்வார்திருநகர் கோகில சங்கரமூர்த்தி முதலியாரின் மகள்கள் அங்கரத்தையம்மை, ஆவுடையம்மை ஆகிய இருவரும் அவர்களின் சந்ததியினரும் கோயிலில் நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் நாலாம் திருநாள் மண்டகப்படியை தொடர்ந்து வழங்கி நடத்திட வழிவகை செய்யப்பட்டதையும், இக்குடும்பத்தார் ஏகாந்தலிங்க சுவாமிக்கு வெள்ளித் தகடு பதித்த ரிஷப வாகனம் செய்து கொடுத்ததையும், ரிஷப வாகனம் பாதுகாப்பு அறையின் திறவுகோல் ஒன்று ஆவுடையம்மையின் வளர்ப்பு மகன் தானப்ப முதலியார் என்ற சங்கரமூர்த்தி முதலியாரின் வசம் இருந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டயம் 2 படிகள் உருவாக்கப்பட்டதையும், இதை நயினான் ஆசாரி மகன் சுவந்தாதி ஆசாரி எழுதியதையும் தெரிவிக்கிறது.

 

4-வது பட்டயம் கி.பி.1868 பிப்ரவரி 3-ல் எழுதப்பட்டுள்ளது. இது காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலின் விசாரணை கர்த்தாக்களும், ஊர் மக்களும் ஆழ்வார் திருநகரில் இருக்கும் பிச்சன் செட்டியார் குமாரர் நல்லகண்ணு செட்டியார், சர்க்கரை சுடலைமுத்து செட்டியார் குமாரர் ஆழ்வாரய்யன் செட்டியார் ஆகிய இருவரின் பரம்பரையினர் ஏழாம் திருநாள் முதற் கால மண்டகப்படியை வழங்கி நடத்தவும் பட்டு கட்டும் மரியாதை பெற்றுக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது குறித்து கூறுகிறது. மேற்படி குடும்பத்தார் சபாநாயகர் (இறைவன்) எழுந்தருள சப்பரம் செய்து கொடுத்தது பற்றியும் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்ட அறையின் 2 சாவிகள் மேற்படி குடும்பத்தார் வசம் இருந்தது பற்றியும் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. இதை அச்சு பத்திரமாக எழுதியவர் ஆதிநாதரையர் குமாரர் சுப்பையர் என்றும் தெரிவிக்கிறது" என அவர் தெரிவித்தார்.

alwarthirunagari temple discovered thirumalai naicker copper plate

 

மேலும், "பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் பட்டயங்களைப் பாதுகாக்கும் இத்திட்டப் பணி தடையின்றி நடந்திட நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, பதிப்பாசிரியர் ஜெ.சசிக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக"  கூறினார். 

 

 

Next Story

‘தமிழ் வேதம்’ எனும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி உரை; ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

tamil vedam thiruvaimozhi text composed by nammalvar discovery palm leaf text 

 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பதோடு நூலாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

 

இத்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் 12 சுவடியியல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இக்குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து முதற்கட்டமாக அட்டவணைப்படுத்தி வருவதோடு பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 199 கோயில்களில் கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் சுவடி கள ஆய்வாளர் ம.பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படி கள ஆய்வு செய்தார். கள ஆய்வில் கோயிலில் அரிய ஓலைச்சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்து இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பாசிரியர் முனைவர் ஜெ.சசிகுமார்,  இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் கே.வி.முரளிதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிபிரியா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவையடுத்து சுவடி திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர், சுவடியியல் ஆய்வாளர் க.தமிழ்ச்சந்தியா தலைமையிலான ஒரு குழு கோயிலில் இருந்த சுவடிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

 

tamil vedam thiruvaimozhi text composed by nammalvar discovery palm leaf text 

 

இக்கோயிலில் நடைபெறும் சுவடி பராமரிப்புப் பணி குறித்து ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, "ஆழ்வார்திருநகர் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் 19 ஓலைச்சுவடிக்கட்டுகள் கண்டறியப்பட்டன. இச்சுவடிக்கட்டுகளில் ஒரு கட்டு தமிழ் வேதம் என்று போற்றப்படும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி எனும் நூலின் இரண்டாம் பத்துக்கும் மூன்றாம் பத்துக்கும் உரை மட்டும் உள்ள ஓலைச்சுவடி ஆகும். இச்சுவடியில் உரை சற்று சிதைந்த நிலையில் முழுமையற்று காணப்படுகிறது.

 

tamil vedam thiruvaimozhi text composed by nammalvar discovery palm leaf text 

 

எனினும் இச்சுவடி ஆய்வுக்குரிய அரிய சுவடி ஆகும். மேலும் இக்கோயிலின் வெஞ்சினப் பண்டாரக் குறிப்புகள் அடங்கிய 18 சிறிய ஓலைச்சுவடிக்கட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இச்சுவடிக்கட்டுகளில் கோயிலின் பழமை வரவு செலவு கணக்குக் குறிப்புகள் உள்ளன. இச்சுவடிகள் பழமையானவை என்பதாலும் சுவடிகள் பூச்சிகள் அரித்து செல்லரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவற்றை பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோயிலில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் ஆகியோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்" என்றார்.