Skip to main content

எனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சின் விளைவாகத்தான் போராட்டம் தீவிரமடைந்தது' என்கிறார். உண்மையில் என்ன நடந்தது என போராட்டக் களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாகின்பாக் பகுதியில் பொதுமக்கள் போராடி வருகிறார்கள். இதுபோல இந்தியாவில் ஐயாயிரம் ஷாகின் பாக்குகள் உருவாகும் என இந்திய அரசை மத்திய உளவுத்துறை எச்சரித்தது. சி.பி.எம். ஆளும் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்திற்கு பக்கத்தில் ஷாகின் பாக் ஸ்டைலில் ஒரு தொடர் போராட்டக்களம் ஒன்று உருவாக்குகிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளக்கூடிய மாநிலங்களான மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஷாகின்பாக் ஸ்டைலிலான போராட்டக் களங்கள் உருவாகின. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற பெரிதும் ஒத்துழைத்த அ.தி.மு.க. ஆளும் தமிழகத்தில் ஷாகின் பாக் ஸ்டைலில் ஒரு போராட்டக் களம் உருவானதற்கு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது என்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள்.

 

bjp"லாலாகுண்டா' என அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டை தங்க சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ளது இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பீடி சுற்றும் தொழிலாளர்கள், பிஸ்கட் தயாரிக்கும் கடைகள் நிறைந்துள்ள அந்தப் பகுதியில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கம்யூனிஸ்ட்கள் நிறைந்திருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷாகின் பாக்கில் தொடர் போராட்டம் தொடங்கியபோதே லாலாகுண்டாவில் போராட்ட நெருப்புத் துளிகள் எழுந்தன.

வண்ணாரப்பேட்டை துணைக் கமிஷனரான ஜூலியஸ் சீசர் என்பவர் அந்த போராட்டம் அனுமதியில்லாமல் நடத்தப்பட்டது என அதில் உபயோகித்த மைக்செட்டை பறிமுதல் செய்தார். இதுதான் போராட்டக் காரர்களுக்கும் போலீசுக்கும் ஏற்பட்ட முதல் மோதல். அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 7-ம் தேதியும் மக்கள் திரண்டு கோஷமெழுப்பினார்கள். அதையும் அனுமதியின்றி போராடக் கூடாது என ஜூலியஸ் சீசர் அதிரடியாக முடிவுக்கு கொண்டு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "தங்க சாலை பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்த அனுமதி கொடுங்கள்'' என கேட்டார்கள். முதலில் ஓ.கே. சொன்ன துணைக் கமிஷனர்கள் சுப்புலட்சுமி, ரவளி ப்ரியா பிறகு அதை மறுத்து விட்டனர்.
 

bjp14-ம் தேதி வெள்ளிக்கிழமை போராட்டம் நடக்கும் என காவல்துறையும், இந்த முறை நிறைய பேரை திரட்ட, காவல்துறையை திக்குமுக்காட செய்து விட வேண்டும் என போராட்டக்காரர்களும் திட்டமிட்டிருந்தனர். காலையில் இருந்தே போராட்டக்காரர்களை கைது செய்ய வாகனங்களில் காத்திருந்த போலீசாரின் எதிர்பார்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பெண்களை திரட்டினார்கள் போராட்டக்காரர்கள்.
 

bjpகாவல்துறை, கலைந்து செல்லக் கூறியும் கேட்காமல் போராட்டம் ஷாகின்பாக் ஸ்டைலில் முழக்கங்கள், பாட்டுகள் என தொடர்ந்தது. உருதுமொழியை தாய்மொழியாக கொண்ட மக்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கும் இந்தி கோஷமான "ஆசாதி ஆசாதி மோடி சே ஆசாதி'. (விடுதலை வேண்டும், மோடியிடமிருந்து விடுதலை வேண்டும்) என அவர்கள் எழுப்பிய முழக்கம் அதிர வைத்தது. இதைக் கேட்டதும் தமிழக உள்துறைக்கு முன்பாக அமித்ஷாவின் மத்திய உள்துறை விழித்துக் கொண்டது. தனது நேரடித் தேர்வான தமிழக டி.ஜி.பி.யை தொடர்பு கொண்டார் அமித்ஷா. அதன்பிறகே போலீசார் தங்களது அணுகுமுறையை மாற்றி, கடுமை காட்ட ஆரம்பித்தார்கள் என்கிறார்கள் வடசென்னையை சேர்ந்த காவல்துறை வட்டாரத்தினர். தமிழக முதல்வரையும் அமித்ஷா தொடர்பு கொண்டு "சென்னையில் ஒரு ஷாகின் பாக் உருவாகிறதாமே' என வருத்தப்பட்டார். டி.ஜி.பி.யும், அமித்ஷா தன்னிடம் பேசியதை முதல்வரிடம் பகிர்ந்து கொண்டார். முதல்வரும் டி.ஜி.பி.யும் சென்னை நகர கமிஷனருக்கு உத்தரவிட்டார்கள். எலியும் பூனையுமாக முதல்வரும் டி.ஜி.பி.யும் மோதிக் கொண்டிருந்தார்கள்.

 

incident"என்னை டி.ஜி.பி.யாக்கியது அமித்ஷா'' என முதல்வர், உள்துறை செயலாளர், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் கெத்தாக சொல்லி வந்தார் டி.ஜி.பி. திரிபாதி.

அவர் முதல்வருடன் ஒரே குரலில் பேசுகிறார் என்றால் உத்தரவு டெல்லியிலிருந்து வந்திருக்கிறது என புரிந்து கொண்ட சென்னை நகர கமிஷனர், வடசென்னை பகுதியின் கூடுதல் கமிஷனரான தினகரன், வடசென்னை இணை கமிஷனரான கபில்குமார் சரத்கர், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, மாதவரம் துணை கமிஷனர் ரவளி ப்ரியா ஆகியோரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தார். குட்கா ஊழலில் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்தில் இருப்பவர் தினகரன். தூத்துக்குடியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால் விசா ரணையில் இருப்பவர் கபில் குமார் சரத்கர். எட்டு வழிச் சாலைக்காக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் சேலம் எஸ்.பி.யாக இருந்த சுப்புலட்சுமி. இவர்களிடம் போராட்டக்காரர்களிடம் பேசுங்கள் என்றார் கமிஷனர்.


போராட்டத்தை முடித்து கலைந்து செல்லுங்கள் என அதிகார தொனியில் தினகரனும் கபிலும் பேச, போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களை தனியாக அழைத்து எச்சரித்தனர் எஸ்.பி.க்களான சுப்புலட்சுமியும், ரவளியும். போலீசாரின் எச்சரிக்கையை அவர்கள் ஏற்க வில்லை. போராட்டக்காரர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை.

அதன்பிறகு முதலில் சுப்புலட்சுமி ஒரு முதியவரை சட்டையைப் பிடித்து இழுத்து கைது செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் முப்பத்தைந்து பேரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். ஆண்களை தாக்கினால் பெண்கள் ஓடிவிடுவார்கள் என கூடுதல் கமிஷனர் தினகரன், கபில் குமார் சரத்கர் போட்ட கணக்கு தப்புக் கணக்கானது.

"மோடி சே ஆசாதி' என துவங்கிய போராட் டம் "எடப்பாடி சே ஆசாதி (எடப்பாடியிடமிருந்து விடுதலை) என கோஷத்தை மாற்றி தீவிரமானது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என போராட்டக்காரர்களை கேட்டோம்.


"நாங்கள் அமைதியான முறையில்தான் போராட்டத்தை நடத்தி வந்தோம். மாலை ஏழு மணிக்கு கூடுதல் ஆணையாளர் தினகரனின் ஆலோசனைக்குப் பிறகே வண்ணாரப்பேட்டை டி.சி. சுப்புலட்சுமி எங்களை தாக்கினார். அவர் எங்களுடைய பர்தாவை கிழித்து எறிந்தார். எங்களை அடித்து மிதித்து பேருந்தில் ஏற்றினார். அதை பார்த்த பெண்கள் பயந்து ஓடினார்கள். ஒரு வீட்டில் புகுந்த வேகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் பசூல் ஹக் என்ற முதியவர் மரணமடைந்தார். இந்தத் தகவல் போராட்டத்தின் வேகத்தை கூட்டியது என்கிறார் ஷெஹவாஸ் பானு என்கிற பெண்மணி.

"போலீசார் கலைந்து செல்லுங்கள் என கூறியதை நாங்கள் கேட்கவில்லை. உடனே இணை கமிஷனர் கபில்குமார், "இவர்கள் இப்படி சொன்னால் கேட்கமாட்டார்கள். இவர்களை அடியுங்கள்' என கத்தினார். அதன்பிறகு போலீசார் லத்திகளை சுழற்றினர். முதல் அடி என் மண்டை யில் விழுந்தது. மண்டை உடைந்து போனது'' என்கிறார் ஷம்மா.

மாலை 6.40-க்கு தொடங்கிய போலீசாரின் வெறியாட்டம் மாலை 8 மணிக்கு முடிந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீஸ் தாக்குதல் நெரிசலில் ஒரு முதியவர் பலி என்கிற செய்தி காட்டுத் தீயாக பரவியது. போராட்டக்காரர்களை போலீசார் தாக்குவதை வீட்டு மாடியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தார்கள். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தடியடியையும் அதற்கு உத்தரவிட்ட கூடுதல் கமிஷனர் தினகரனையும் விமர்சித்து தோழர் சுந்தரவள்ளி "பெண்களிடம் போலீசார் தகாத முறையில் நடந்து கொண்டனர்' என்கிற பேட்டி தமிழகமெங்கும் ஆவேசத்தை கிளப்பியது. தமிழகமெங்கும் இசுலாமியர்களும் மற்ற மதத்தினரும் இணைந்து போராடினார்கள். நெல்லையில் நடைபெற்ற திடீர் போராட்டத்தில் 2,000 பேர் கலந்து கொண்டனர். கோவையில் அதன் வீரியம் அதிகமாக இருந்தது. வண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற போராட்டம் தமிழகம் முழுவதும் பரவுவதை கண்ட டெல்லியும் முதல்வர் எடப்பாடியும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

எப்படியாவது இதை முடித்து வையுங்கள், வண்ணாரப்பேட்டையில் அமைதியை நிலை நாட்டுங்கள் என கமிஷனருக்கு உத்தரவு வந்தது. கமிஷனர் பிரச்சினைக்கு காரணமான கூடுதல் கமிஷனர் தினகரனை மாற்றிவிட்டு தென் சென்னைப் பகுதி கூடுதல் கமிஷனரான பிரேம் ஆனந்த் சின்ஹாவை களமிறக்கினார். கமிஷனரும் பிரேமும் இணைந்து லாலாகுண்டா பகுதியை சேர்ந்த போரோஜன் தெரு, பி.பி.கே. தெரு, அஜிஸ் முகம்மது தெருக்களை சேர்ந்த முஸ்லிம் ஜமாத்தாரிடம் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறந்து போன பசூல் ஹக் காவல்துறை தாக்கியதால் இறக்கவில்லை என அறிக்கை விட்டார். அது போராட்டத்தின் வீரியத்தை குறைக்கவில்லை. போராட்டம் லாலாகுண்டாவில் தொடர்கிறது.

போலீசாரின் தாக்குதலை அறிந்ததும் அந்தப் பகுதிக்கு அ.ம.மு.க. தலைவர் வெற்றிவேல் ஓடி வந்தார். ""லாலாகுண்டா அமைந்துள்ள ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயக்குமார் எதைப் பற்றியெல்லாமோ பேசுகிறார். அவர் தொகுதியில் பெருவாரியாக உள்ள இசுலாமியர்களின் போராட்டத்தை போலீசை வைத்து நசுக்குகிறார்'' என்றார்.

சென்னை நகரம் முழுவதும் இருந்து இசுலாமியர்களும் பிற மத பொதுமக்களும் லாலாகுண்டாவை நோக்கி வரத் தொடங்கினார்கள். போராட்டம் அதிக வீரியத்துடன் அ.தி.மு.க., பா.ஜ.க. எதிர்ப்பு கோஷங்களுடன் தொடர்ந்தது. தடியடியை கேள்விப்பட்டு தலைவர்களும் வரத் தொடங் கினர். சி.பி.ஐ. கட்சித் தலைவர் நல்லகண்ணு அதே லாலா குண்டாவில் பீடித் தொழி லாளர்களுக்காக பல பொதுக் கூட்டம் பேசியவர். அவரும் தா.பாண்டியனும் வந்தனர். தா.பா.வின் வீரம் செறிந்த உரையும் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், வடசென்னை எம்.பி. கலாநிதி, தி.மு.க. மா.செ.க்களான துறை முகம் எம்.எல்.ஏ. சேகர் பாபு, திருவொற்றியூர் சுதர்சனம் இவர்களுடன் நாம் தமிழர் சீமான் என எதிர்க்கட்சித் தலைவர்களின் வருகையால் போராட்டக் களம் அதிக வீரியத்துடன் முறுக்கேறியது.

இரவு முழுவதும் நடந்த போராட்டம் 15-ம் தேதியும் விடாமல் "சென்னையின் ஷாகின் பாக்' என்கிற பேனரோடு அம்பேத்கர், மகாத்மா காந்தி, பகத்சிங் ஆகியோர் புகைப்படங்களும் இடம்பெறத் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட ரபி நம்மிடம், "இசுலாமிய மக்கள் ஆபத்துக் காலங்களில் அதிவேகமாக செயல்படுவார்கள். சென்னையை பெருவெள்ளம் தாக்கிய போது மனிதர்கள் நடந்து போக முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசிய தெருக்களில் கூட கருணையுள்ளத்தோடு சேவை செய்தவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராடிய மக்களுக்கு கடைசி வரை துணை நின்றவர்கள். இது எங்கள் பிரச்சினை. இதில் போலீசார் தேவையில்லாமல் வன்முறை களமாக்கி மறுபடியும் ஒரு ஜல்லிக்கட்டு போராட் டத்தை லாலாகுண்டாவில் உருவாக்கிவிட்டனர். நாங்களும் காலையில் பிரியாணி, இடை இடையே குடிநீர், மதியம் உணவு, மாலையில் தேநீர் என இந்து நண்பர்களுடன் இணைந்து பணி யாற்றுகிறோம். குடியுரிமை சட்டம் திரும்பப்பெறும் வரை இந்த போராட்டம் ஓயாது. மேலும் பல ஷாகின் பாக்குகள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உருவாகும்'' என்கிறார்.
 

 

அருண்பாண்டியன், பரமசிவன்

படங்கள்: ஸ்டாலின், அசோக், குமரேஷ்

 

 

newstuff 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.