Skip to main content

கொங்கு மண்டலம் என்ற அதிமுகவின் கோட்டை -என்ன செய்யப்போகிறது திமுக..?

Published on 28/11/2020 | Edited on 14/01/2021
jh

 

 

கடந்த 2016ம் ஆண்டின் தேர்தல் முடிவு வெளியாகி கொண்டிருந்த நேரம், அதிமுக - திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு ஆரம்பத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஏறக்குறைய சரிபாதியான இடங்களில் முன்னணியில் இருந்து வந்தார்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு இன்றைய பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம் போல் அன்றைக்கு அதிமுக திமுக தொண்டர்கள் அதிர்ச்சியோடு தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இடையில் பிரதமர் மோடியின் வாழ்த்து வேண்டுமானால் அதிமுக தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்திருக்கலாம். ஆனால் களம் சரிசமமாக இருந்த நிலையில் கொங்கு மண்டல வாக்கு பெட்டிகள் முழுவதும் எண்ணப்பட ஆரம்பித்ததும், திமுக சிறிது அல்ல முழுவதும் சறுக்கியது. சென்னையில் ஆரம்பித்து விழுப்புரம் வரை வடக்கு மண்டல தொகுதிகளை வாரி குவித்த திமுக, மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 55 தொகுதிகளில் மண்ணை கவ்வியது. ஏன் இந்த நிலை. கொங்கு பகுதி மக்களிடம் திமுக அந்நியப்பட்டுள்ளதா? அல்லது அதிமுக கள வேலைகளில் கில்லியாக இருக்கிறதா? என்பதை ஒரு சிறிய அலசல் பார்வையோடு பார்க்க வேண்டியுள்ளது. 

 

fd

 

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கி நடந்துவந்ததது. அதற்கு முன்புவரை தேர்தலில் வெற்றி அடையும் கூட்டணி அதிக தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி பீடத்தில் அமரும். ஆனால் அப்போதைய தேர்தல் முடிவு என்பது திமுகவுக்கு அப்படியான ஒரு களத்தை கொடுக்கவில்லை. கிட்டதட்ட 150 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 96. ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளின் எண்ணிக்கைக்கு 22 தொகுதிகள் குறைவு. இருந்தாலும் கலைஞர் 5 ஆண்டுகள் ஆட்சியை பெரிய சிரமமின்றி நிறைவு செய்தார். தமிழக வரலாற்றில் ஆட்சி அமைக்கும் ஒரு கட்சிக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காமல் போனது அப்போதுதான் முதல்முறை. இதற்கு காரணமும், 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக நூலிழையில் தோற்றதற்கு ஒரே காரணம் மேற்கு மண்டல தொகுதிகளில் அதிமுக வென்றது மட்டும்தான். 2006ம் ஆண்டு அனைத்து மண்டலத்திலும் தோல்வியை சந்தித்த அதிமுக மேற்கு மண்டலத்தில் கிட்டதட்ட 16 தொகுதிகளில் வென்று அதற்கு முன்பு எதிர்க்கட்சி ஒன்று அதுவரை பெறாத வகையில்  தமிழகம் முழுவதும் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கு மிக முக்கிய காரணம் கொங்கு மண்டலம். 

 

2006ம் ஆண்டு நடந்த தவற்றை அடுத்த 5 ஆண்டுகளில் திமுக சரிசெய்ததா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் 2011ம் ஆண்டு திமுக மேற்கு மண்டலத்தில் வாஷ் அவுட் என்று சொல்லும் அளவுக்கு சொதப்பியது. மற்ற மண்டலங்களில் உள்ளதை போல் திமுகவில் ஆளுமைகளும் இந்த மண்டலங்களில் இல்லை என்றும் நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. அதுவும் உண்மைதான். அங்கு ஒரு நேருவோ, பொன்முடியோ, ராசாவோ இல்லை என்பது ஏற்றுக்கொள்ள கூடியாதுதான். ஆனால் தேர்தல் களத்தில் மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 55ல் கட்சி துடைத்தெறியப்படுகிறது என்றால், திமுக தன்னை அங்கு சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. மற்ற மண்டலங்களில் என்ன வலுவாக இருந்தாலும் மேற்கு மண்டலத்தில் கவனத்தை திரும்பாவிட்டால் 2021ம் களம் திமுகவுக்கு சிக்கலாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் எடப்பாடி மேற்கு மண்டலத்தை மட்டுமே களம் இறங்குகிறார். எனவே திமுக சுதாரித்துக்கொள்ளுமா அல்லது சுணகக்கமாகவே இருக்குமா என்பதை பொறுத்தே மேற்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி இருக்கும் என்பதே கள எதார்த்தம்.