Skip to main content

“கோழி கூவும்; கொத்தி எழுப்பாது!” -நல்லசாமி விடுக்கும் ‘கள்’ சவால்!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

“சிலர் முன்வைக்கும் பிரச்சனைகள்,  மேலோட்டமாகப் பார்த்தால் காமெடியாகவும், உள்ளுக்குள் தீவிரமானதாகவும் இருக்கும். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியின் ரூ.10 கோடி சவாலும் அந்த வகையில் சேர்ந்ததுதான். இடைத்தேர்தல் நடக்கும் போதெல்லாம், வேட்பாளர்களை அறிவித்து களம் இறக்குவதும், பிரபலங்களை சவாலுக்கு அழைப்பதும் அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்?” அரசியல் பிரமுகர் ஒருவர் நம்மிடம் எழுப்பிய கேள்வி கிண்டல் தொனியில் இருந்தது. 

 

nallasami

 

சரி, நல்லசாமியின் ஆதங்கம் என்னவென்று பார்ப்போம்? 
 

“தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மதுக்கடைகளை திறந்துவைத்துள்ள அரசாங்கம்,  கள் விற்பனைக்கு மட்டும் தடை விதித்துள்ளது. இத்தடையை நீக்க வேண்டும். கள் விற்பனைக்கு அனுமதியளித்து, விவசாயிகளை வாழவைக்க வேண்டும். மாறிமாறி வந்த இரண்டு அரசுகளும், மனிதனின் உயிருக்குக் கேடு விளைவிக்கும் மதுவை விற்று வருகின்றன. ஏனென்றால், அரசுக்கு டாஸ்மாக் அதிக வருவாய் ஈட்டித்தருகிறது. அதனால்தான், மது குடித்து,  குடல் வெந்து சாகும் மனிதர்கள் குறித்த அக்கறை தமிழக அரசுக்கு இல்லாமல்போனது.
 

கள் ஒரு போதைப்பொருள் என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு தருகிறோம். இச்சவாலை ஏற்று, எங்களோடு மோதுவதற்கு தமிழகத்தில் ஒருவருக்கும் துணிவில்லையா? உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் கள்ளுக்குத் தடையில்லாதபோது, தமிழகத்தில் மட்டும் தடை ஏன்? இது உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது.” என்று 2010-இல் அறிவித்தார் நல்லசாமி.  
 


கள் உணவுப் பொருள் அல்ல; போதைப் பொருள்!

காங்கிரஸ் சீனியரான குமரி அனந்தன் நல்லசாமியின் சவாலை ஏற்றார். 2011, நவமர் 23-ஆம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள அரங்கத்தில் மூத்த நீதிபதி முன்னிலையில் வாத-பிரதிவாதங்கள் நடந்தன. கள்ளுக்கு ஆதரவாக நல்லசாமியும், எதிராக குமரி அனந்தனும் வாதிட்டனர். நடுவரான நீதிபதி, “கள் போதை தரும் பானம்” என்று தீர்ப்பளித்துவிட்டு,  “கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட், டி.டி.கே. மருத்துவமனை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் ஆகியன,  'கள்'  தீய விளைவுகளை ஏற்படுத்தும் போதைப் பொருள் என்று தெரிவித்துள்ளன. எனவே, மனிதனின் அறிவையும், சிந்தனையையும் மழுங்கடிக்கும்  எந்தப் பொருளும் உணவு அல்ல.  அதன்படி,  'கள்' உணவுப் பொருள் எனச்சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கள்ளும், மதுவும் போதைப் பொருள்தான். அவற்றை ஒழிக்க வேண்டும்" என்று விளக்கமும் தந்தார். இத்தீர்ப்பை ஏற்காத நல்லசாமி தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட, அரங்கிலிருந்து வெளியேறினார் நீதிபதி. ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு குறித்து குமரி அனந்தன் நினைவூட்டியபோது,  “கள்ளில் போதைக்கு காரணமான ஆல்கஹால் 4.5 சதவீதம் உள்ளது என்பதை கள் இயக்கம் ஒப்புக்கொள்கிறது. அதேநேரம், கள் இயக்கத்தின் கோரிக்கையில் நியாயம் இல்லை என,  விவாத தீர்ப்பில் குறிப்பிடவில்லை. அதனால், அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்.”  என்று ஒரே போடாகப் போட்டார் நல்லசாமி. 
 

வைகோ, ரஜினி, கமலுக்கு சவால்!
 

2016-இல் மீண்டும் சவால் விட்டார் நல்லசாமி. அதே சவால்தான்! ஆனால் பரிசுத்தொகை ரூ.10 கோடி. “கள் ஒரு போதைப்பொருள் என்கிறார் வைகோ. அவரை வாதாட அழைத்தோம். வரவில்லை. வாதாட முன்வந்து வெற்றி பெற்றால், ரூ.10 கோடி பரிசு வைகோவுக்கு வழங்கப்படும் கள் இயக்கமும் கலைக்கப்படும். சவாலில் வெற்றிபெற்றால், வைகோவுக்கு செல்வாக்கு அதிகரித்து, 2021 தேர்தலில் மதிமுக ஆட்சியைப் பிடிக்கும்” எனச் சீண்டிய நல்லசாமி, 2018-இல்  ரஜினி, கமல் போன்ற நடிகர்களையும் சவாலுக்கு அழைத்தார். “கள் இயக்கத்திடம் வாதிட வாருங்கள். கள் ஒரு தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் என்பதை நிரூபித்துவிட்டால், அரசியலுக்கு வரக்கூடிய தகுதி உங்கள் இருவருக்கும் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றார்.  உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களையும் நல்லசாமி விட்டுவைக்கவில்லை.  “ரூ.10 கோடி பரிசு தருகிறோம். சவாலை ஏற்று வாதிட வாருங்கள்.” என்று அழைப்பு விடுத்தார். 
 

கள்ளுவோடு அரசியல் மல்லுக்கட்டு!
 

ஏற்கனவே, திருப்பூர் மாநகராட்சி மேயர் தேர்தல், பொள்ளாச்சி, திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் கள் இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கதிரேசன்.  தற்போது, சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இவர் போட்டியிடுகிறார். தேர்தல் செலவுக்காகத் தன் வீட்டையே விற்றதாகச் சொல்கிறார் கதிரேசன். பொதுவெளியில் பலரும் ஒரு மாதிரியாக விமர்சித்துவரும் நிலையில், ‘ஒருபக்கம் ரூ.10 கோடி சவால்! இன்னொருபக்கம் வீட்டை விற்று இடைத்தேர்தலில் போட்டி! கள் இயக்கத்துக்கு ‘ஸ்டண்ட்’ அடிப்பதே வேலையாகப் போய்விட்டதா? தமிழகத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது உங்கள் இயக்கம்?’ என்று கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியிடமே கேட்டோம். 

“ஆமா.. ஸ்டண்ட் தான்.. யார் வேணும்னாலும் வாங்க..  சண்டை  போடுவோம்.” என்றவர்   “மூணு வருஷத்துக்கு முன்னால பீகார்ல நித்திஷ்குமார் தலைமைல பூரண மதுவிலக்கு கொண்டு வந்தாங்க. அங்கே சாராயத்துக்கு தடை, இறக்குமதி மதுக்களுக்குத் தடை. அப்படின்னா, அந்த அரசுக்கு அறிவு இல்லையா? இல்லைன்னா.. தமிழ்நாடு அரசுக்கு மட்டும் அறிவு வழியுதா? கடந்த கேரளா ஆட்சியில படிப்படியா மதுவிலக்கு கொண்டு வந்தாங்க. இறக்குமதி மது மற்றும் இந்திய தயாரிப்பு மீதுதான் கை வச்சாங்க. கள்ளு மேல கை வச்சாங்களா? கள்ளு விற்பனையை கூட்டினாங்க. உலகத்துல எந்த நாட்டுல கள்ளுக்குத் தடை இருக்குது? உலகளாவிய நடைமுறைக்கு மாறுபட்டு ஒருவர் செல்கிறார் என்றால், அவர் அறிவு இல்லாதவர். அப்படி பார்த்தால், தமிழக ஆட்சியாளர்கள் அறிவில்லாதவர்கள். இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர், அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள் எல்லோரும் வரட்டும். எங்க சவாலை ஏற்று விவாதம் நடத்தட்டும். கள்ளுல 4.5 சதவீதம் ஆல்கஹால் இருக்குதுன்னா.. டாஸ்மாக் சரக்குல 48.2 சதவீதம் இருக்குதே. இதே ஆல்கஹால் பழைய சோத்துல இருக்கு. மோர்ல இருக்கு. தயிர்ல இருக்கு. பழரசத்துல இருக்கு. ஏன் இதுக்கெல்லாம் தடை விதிக்கல? மருந்துகளுக்கு விதிவிலக்கு அளிக்கணும். சித்த வைத்தியத்தில் கள் முக்கிய மூல பொருள் மருந்து. கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கணும்னுதான் இடைத்தேர்தல் நடக்கும்போது வேட்பாளர்களை நிறுத்துறோம். கோழியால் கூவத்தான் முடியும். அதற்காக, குறட்டை விட்டு தூங்குறவங்கள கொத்தியா எழுப்ப முடியும்? அதுக்கு மேல கொத்துனா, குரல்வளையை நெறிச்சு குழம்பு வச்சிருவாங்க. ரூ.10 கோடி பரிசு அறிவிப்புங்கிறது ஸ்டண்ட் இல்ல. யார் வேணும்னாலும் சவாலை ஏற்று வரட்டும். எத்தனை பேர் வேண்டுமானாலும் வரட்டும். சவாலில் வென்றால் நிச்சயம் ரூ.10 கோடி தருவோம்.” என்றார். 
 

கள்ளும் நஞ்சும் வேறல்ல! 
 

‘மதுவுக்கு கள் எவ்வளவோ மேல்’ என்கிற ரீதியில் நல்லசாமி சொல்வது,  அவரைப் பொறுத்தமட்டிலும் நியாயமாகவே இருக்கட்டும். அவர் நம்மிடம் பேசியபோது ’எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு’ என, திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதனால், குறள் மூலமாகவும் இந்த விவகாரத்தில் தெளிவு பெறமுடியும்.   ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களை இயற்றியிருக்கிறார் திருவள்ளுவர். ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி கள்ளுண்ணாமையை வலியுறுத்தியிருக்கிறார். சாம்பிளுக்கு ஒரு குறள் – 
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர் 

இதன் பொருள் –  கள்ளுண்பவருக்கும் நஞ்சு அருந்துவோருக்கும் வேறுபாடு கிடையாது என்பதால், அவர்கள் தூங்குவதற்கும் இறந்துகிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்பதாகும். 

 

 

 

Next Story

'ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்குவோம்' - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு 

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Nallaswamy's operational coordinator speech

 

வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசுகையில், 'கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கக் கூடிய உரிமை. இது உணவு தேடும் உரிமை. இதனை தமிழக அரசு பறித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கலப்படத்தை காரணம் காட்டி பறிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை நீர்க்கும் விதமாக வருகிற ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட உள்ளோம். இந்த அரசாங்கம் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்  அதற்கு உரிய பதிலை அரசு தர வேண்டும்'' என்று பேசினார்.

 

 

Next Story

மரங்களில் விளம்பர பேனர் வைத்தால் சிறை... நல்லசாமி வரவேற்பு...

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் செயலாளர் நல்லசாமி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடந்தது.
 

nallasamy

 

 

மரங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், மரங்களில் விளம்பர பேனர் வைத்தால், மூன்றாண்டு சிறை தண்டனை . ரூ.25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள இந்த அமைப்பு மேலும் தங்களது வேண்டுகோளாக , இதை வெறும் அறிவிப்பாக மட்டும் வைக்காமல், உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பை, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த, தமிழக அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் இந்திய நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் இறக்குமதியாகும் எண்ணெயின் பங்கு, 70 சதவீமாக உள்ளது. கடந்த 2017–18 ம் பருவத்தில், 1.46 கோடி டன் சமையல் எண்ணெய் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு பருவத்தில் இறக்குமதி, 12 சதவீதம் உயர்ந்து, 1.64 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், பாமாயில் ஒரு கோடி டன்னாகவும், சோயா எண்ணெய், 35 லட்சம் டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய், 26 லட்சம் டன்னாகவும், இதர எண்ணெய், மூன்று லட்சம் டன்னாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இறக்குமதி பாமாயில், கிலோவுக்கு, 35 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, 25 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

அதேநேரம், இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கப்படுவதில்லை. ரேஷன் கடைகளில் வினியோகிப்பதும் இல்லை. இதை நடைமுறைப்படுத்தினால், இந்திய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.

இதை நடைமுறைப்படுத்த வேண்டும், என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.