Skip to main content

ஆப்பிரிக்கா வேர்; தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான பொந்தன்புளி மரம்! 

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

Africa root; Thousands of years old Ponthanpuli tree growing in Tamil Nadu!

 

விருதுநகர் மாவட்டம், மண்டபசாலை என்ற ஊரில் வணிகப்பெருவழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான பொந்தன்புளி மரம் வளர்ந்து வருகிறது. இதை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். 


மண்டபசாலையில் பிரமாண்டமான ஒரு மரம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.ரமேஷ் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். 


இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது; ‘விருதுநகர் மாவட்டம், மண்டபசாலை கருப்பசாமி கோயில் அருகில் கமுதி செல்லும் சாலையின் கிழக்குப்பகுதியில் 7 மீட்டர் உயரமும், அடிப்பகுதி 11 மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான ஒரு மரம் வளர்ந்து வருகிறது. இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக வளர்ந்து வரும் பொந்தன்புளி மரம் ஆகும். ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம் ஆகியவை  இம்மரத்தின் சிறப்புகள். ஓராண்டில் ஆறு  மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். இம்மரங்கள் சாதாரணமாக 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை. இதன் தண்டுகளில் தண்ணீரை சேமித்து வைக்கிறது.

 

Africa root; Thousands of years old Ponthanpuli tree growing in Tamil Nadu!

 

மண்டபசாலையில் உயரமாக வளர்ந்து வந்த இம்மரத்தின் 3 கிளைகளும் சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்துள்ளது. விழுந்த அதன் கிளைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இம்மரத்து தண்டின் நடுவில் 10 பேர் அமரும் வகையில் பெரிய பொந்து உருவாகியுள்ளது. இதன் உள்ளே செல்லவும் வழியுள்ளது. இம்மரம் யானை போன்ற அமைப்பில் உள்ளது. இம்மரத்தை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம் போன்ற கடற்கரையோர ஊர்களிலும், வணிகப் பெருவழிகளிலும் இம்மரம் காணப்படுகிறது. தென்தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையும், இயற்கையாக அமைந்த உப்பங்கழிகளும் பல இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கியுள்ளன. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பலர் சங்ககாலம் முதல் வணிகத்துக்காக பாண்டிய நாட்டுக்கு வந்துள்ளனர். 


அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், மதுரை அமெரிக்கன் கல்லூரி, இலங்கை மன்னார் உள்ளிட்ட பல இடங்களிலும் இம்மரம் வளர்ந்து வருகிறது. இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பாரப்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் போபாப் என்கிறார்கள். 


மண்டபசாலை அருகில் பெருநிரவியார் எனும் வணிகக்குழுவின் பெயரால் அமைந்த நீராவி எனும் ஊர் உள்ளது. கேரளாவிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக அழகன்குளம் செல்லும் வணிகப்பெருவழியில் இவ்வூரிலும் தேரிருவேலி, அழகன்குளத்திலும் இம்மரம் வளர்ந்து வருகிறது. ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் முத்துராஜா என்பவர் 5 அடி உயரத்திற்கு மரத்தைச் சுற்றி திண்டு கட்டிக் கொடுத்துள்ளதால் மரம் பாதுகாப்பாக உள்ளது. மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்பே அதில் பொந்து உண்டாகிறது. எனவே பொந்து உள்ள இம்மரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.