மத்திய அரசின் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் விவரிக்கிறார்
வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் அனுமதியோடுதான் காடுகளில் எந்தத் திட்டத்தையும் கொண்டுவர முடியும் என்பதுதான் வனப் பாதுகாப்பு சட்டம். தனியார் நிலங்களிலும் காடுகளைப் பாதுகாப்பது எப்படி என்கிற அடிப்படையில்தான் இந்த சட்டத்திருத்தத்தை இவர்கள் கொண்டுவருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த சட்டம் அது குறித்துப் பேசவில்லை. பழங்குடியினருக்குக் காடுகளின் மீது இருக்கும் உரிமையை இந்த சட்டம் பறிக்கிறது.
முன்பு இருந்த சட்டத்தின்படி காடுகளில் என்ன திட்டம் கொண்டுவருவதாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களிடமும் அனுமதி பெற வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சில திட்டங்களுக்கு அவர்களின் அனுமதி தேவையில்லை என்று கொண்டுவருகிறார்கள். காடுகளில் யாருடைய அனுமதியும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் இதன் சாராம்சம். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் எல்லையில் இருக்கும் மாநிலங்கள். அங்கு மக்களைக் கேட்காமல் திட்டங்களை இவர்கள் உருவாக்கும் சூழ்நிலை இதன்மூலம் ஏற்படும்.
இந்த சட்டத்திருத்தம் நேரடியாகப் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும். இந்த திருத்தம் கொண்டுவருவதற்கான சரியான பாராளுமன்ற நடைமுறையையும் இவர்கள் பின்பற்றவில்லை. இந்தியாவில் இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்காக பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. காடுகளை அழித்து கனிமங்களை எடுப்பதற்கான சட்டம்தான் இப்போது இவர்கள் கொண்டுவந்துள்ள சட்டம். காடுகளில் இருக்கும் கனிம வளங்களைத் தனியாரிடம் கொடுப்பதுதான் இவர்களுடைய திட்டம்.
இந்திரா காந்தி காலத்தில்தான் வனப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. காடுகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. இந்த சட்டம் வந்த பிறகுதான் காடுகள் அழிப்பு என்பது இந்தியாவில் பெருமளவு குறைந்தது. குறைந்தபட்ச அனுமதி பெற்றுத்தான் காடுகளில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கிருக்கும் பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேச வேண்டும், ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் அந்த சட்டம் இருந்தது. இது எதுவுமே தேவையில்லை என இந்த சட்டத்தை இவர்கள் மாற்றியமைப்பது வருத்தமாக உள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு.