Skip to main content

உலகத் தலைவர் பேராசையில் மோடி; விழித்துக் கொண்ட வெளிநாடுகள் - வழக்கறிஞர் பாலு

 

 Advocate V Balu interview

 

இந்தியா - கனடா அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வே. பாலு  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ள மோதலை 'ஓரங்க நாடகம்' என்று தான் பார்க்கிறேன். அதனால், இதனை விடுத்து உலகளவில் வரும் காலங்களில் இந்தியர்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் வரும் என்பதை பார்ப்போம். பாஜக ஆட்சியமைந்த பின்னால் தன்னை உலக குரு என மோடி நினைத்துக் கொள்கிறார். அதிலும், சுழற்சி முறையில் அனைத்து நாடுகளுக்கும் வரும் ஜி20 தலைமையை ஏற்று பெருமைப்பட்டுக் கொண்டார். தொடர்ந்து, நான் இந்தியாவின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறேன் என்று கூட பேசியுள்ளார். 

 

இந்தியாவில் சனாதனம் பேசப்படுகிறது. ஆனால், இதன் முதல் கோட்பாடே, கடல் கடந்து பயணிக்கக் கூடாது என்பது தான். இதனை உலகம் முழுவதும் பரப்பவும் இவர்கள் முயல்கின்றனர். மேலும், இன்று சரளமாக ஆங்கிலம் பேசித் திரியும் சிலர். இந்தியாவில் பலருக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் கல்வி கற்று அப்பொழுது முதலே வெளிநாடுகளுக்கு பயணப்படத் தொடங்கியவர்கள். அங்கு வெவ்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்து ஒரு கட்டத்தில், அந்த நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு இந்தியாவின் சில சமூகங்கள் பலம் பெற்றுள்ளது. 

 

இலங்கைப் போருக்கு பிறகு அங்கு வசித்த தமிழர்களும் வெவ்வேறு உலக நாடுகளுக்கு சென்று வசிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல், பஞ்சாப்பின் சீக்கியர்கள் தங்கள் வீட்டில் ஒருவரையாவது இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிப்பர். பின்னர், கனடா சென்று வாழவேண்டும் என்பதும் அவர்களின் கனவு. நிலப்பரப்பில் அமெரிக்காவை விட கனடா உயர்ந்தும், மக்கள் தொகையில் குறைந்தும் உள்ளது. குறிப்பாக, கனடாவின் 3 கோடி மக்கள் தொகையில் சுமார் 7 லட்சம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர்.  ஏன், கனடா பாராளுமன்றத்தில் 338 உறுப்பினர்களில் 19 இந்திய வம்சாவளிகளும் அதில் 3 பேர் அமைச்சராகவும் உள்ளனர். கடின உழைப்பாளிகளான சீக்கியர்கள் பிழைப்பு தேடி உலகின் பல நாடுகளுக்கு சென்றனர். இன்று, கனடாவில் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். 

 

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சீக்கியர்கள் கனடா காவல்துறையிலும் சேரத் தொடங்கி, தங்கள் அணியும் தலைப்பாகையை அணிவதற்கு என தனிச் சட்டத்தையும் போராடி பெற்றவர்கள். கனடாவில் குருத்வாராக்களும் நிறைய அமைக்கப்பட்டது. பின் பிந்த்ரே வாலே கொலை செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் காலிஸ்தான் பிரச்சனை கிளம்பியது. ஆனாலும், இன்றைக்கு கனடா பிரதமராக இருக்கும் திரிதாய்யின் அப்பா தான் பிரதமர். அன்றைக்கு அவ்வளவு பெரிய பிரச்சனையாக அது வெடிக்கவில்லை. எனவே, தற்போது ஏன் திடீரென காலிஸ்தான் விவகாரம் கனடாவில் பெரிதாகியுள்ளது என பார்க்க வேண்டும். மோடிக்கு எப்படி இந்தியாவில் ஹிந்துக்களின் வாக்கோ, ட்ரம்ப்புக்கு இந்தியர்களின் வாக்கு, கனடாவில் சீக்கியர்களின் வாக்கு, ரிஷி சுனக்கிற்கு (பிரிட்டன் பிரதமர்) பகவத் மீது ஈர்ப்பு என இப்படியாக தகவல்கள் வந்தது. தற்போது நடந்து வரும் விவகாரத்தில் காலிஸ்தான்களுக்கு கனடா புகலிடம் அளிப்பதாக சொல்கின்றனர். 

 

1970களில் முனிச் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் சில இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக பின்னர், இஸ்ரேல் தனிப் படை அமைத்து அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கொன்று பழிவாங்கியது. இதுபோல மோடி அவர்கள் உலக நாடுகளில் காலிஸ்தான்களை வேட்டையாடுகிறார் என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சமீபமாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு பிரபலப்படுத்தினார். இதன் விளைவு, மோடி பஞ்சாப் சென்றபோது பாலத்தில் காக்க வைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அம்ரித்பால் சிங்க் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்தியா, மீண்டும் காலிஸ்தான்கள் கூட்டு அமைக்கிறார்கள் எனக் கூறி பிரச்சனையை கிளறிவிட்டது. ஆனால், இந்திய அரசால் நேரடியாக சீக்கியர்களை அவ்வளவு எளிதில் சீண்டிவிட முடியாது. 

 

மேலும், இங்குள்ள இந்தியர்கள் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு ஹிந்துத்துவாவை தூக்கிப் பிடிக்கிறார்கள். இது கனடாவில் உள்ள சீக்கியர்களை தொந்தரவு செய்துள்ளது. தொடர்ந்து, பாஜக ஆட்சியமைத்த பிறகு உலக நாடுகளில் பல பாராளுமன்றத்தில் தனது ஹிந்துத்துவ போர்வையை போர்த்த முயற்சிக்கிறது. சமீபத்தில், கூட தேஜஸ்வி சூர்யா (பாஜக) என்பவர் அரபு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் குறித்து பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர், இந்திய அரசு மன்னிப்பு கேட்டவுடன் தான் பிரச்சனை தீர்ந்தது. ஆனாலும், தொடர்ந்து இன்றைக்கு உலக நாடுகளில் சனாதனவாதிகளின் கதறல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இவர்கள் அங்கு ஆதிக்கம் செலுத்துவதால், இந்தியாவில் இருந்து சென்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஜாதிய ரீதியாக கொடுமைக்கு ஆளாகின்றனர். 

 

தொடர்ந்து, பல உலக நாடுகளில் வெளியில் இருந்து வந்து குடியேறிய மக்கள் சிறிது சிறிதாக, ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்கின்றனர். எனவே தான் கனடாவில் சீக்கியர்களின் பிரச்சனையை பிரதமர் வரை இறங்கி வந்து பேச வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, கனடாவில் குஜ்ஜார் என்ற காலிஸ்தான் தீவிரவாதி இருக்கிறார் அவரை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கேட்காமல், திடீரென அவர் சுடப்பட்டது தான் பெரிய சர்ச்சையானது. எனவே, உலக நாடுகளில் இந்தியர்கள் சென்று அங்கு கோவில் கட்டுவது, ஹிந்துத்துவத்தை பரப்புவது என ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்த செயல் பல ஆண்டுகள் கழித்து உங்க மதத்தை இந்தியாவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விரட்டிவிடும் அளவிற்கு மாறவும் வாய்ப்புள்ளது. இந்தியர்கள் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதோ, அரசியலில் பங்கு கொள்வதோ சிக்கல் இல்லை. மாறாக, ஹிந்துத்துவம் என்ற கருத்தியலை அங்கு விதைக்க முயல்வது சிக்கலாகி, ஏற்கனவே வசித்து வரும் இந்தியர்களை சந்தேகிக்க வைக்கிறது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தால் பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு எதிராக திரும்பவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சிறிய அமைப்பை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் எதிரியாக மாற்ற தவறாக வேலை செய்கிறார்கள். அதனால் இங்கு அய்யனார் போன்ற குலதெய்வ வழிபாட்டில் இருப்பவரையும் சேர்த்து அவமானப் படுத்துகிறார்கள். இவர்களும் வெளிநாடு சென்று நாமளும் ஹிந்து என நினைத்து அந்தக் கும்பலின் பின் செல்கின்றனர்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !