சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் தன் தந்தை இறந்த மரண வீட்டில் திருமணம் செய்துகொண்ட இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வு குறித்து தன்னுடைய கருத்துகளை வழக்கறிஞர் பாலு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
மரணம் என்பது மனிதனுக்கு இயல்பாக வருவது. அது எப்போது வரும் என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. இந்த திருமணச் செய்தியை நான் படித்தபோது என் கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது. சாஸ்திர சம்பிரதாயங்கள் நிறைந்த இந்த உலகில் சாத்திரங்களை உடைக்கும் சம்பவமாக கள்ளக்குறிச்சியில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த இளைஞன் பிரவீனின் குடும்பம் திமுகவைச் சேர்ந்த; திராவிட பாரம்பரியத்தில் வளர்ந்த குடும்பம். திருமணம் நிச்சயக்கப்பட்ட பிறகு எதிர்பாராதவிதமாக தந்தையின் இறப்பு ஏற்படுகிறது.
பொதுவாக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்கிற புலம்பல்கள் தான் அதிகம் கேட்கும். ஆனால் அந்த பையன் எடுத்த முடிவால் தவம் செய்த தந்தையாக இந்த உலகை விட்டு மறைந்திருக்கிறார் அவனுடைய தந்தை. பிணம் இருக்கும் இடத்தில் திருமணம் நடைபெறுவது சினிமாவில் தான் நடக்கும். ஆனால் இந்த பையன் அதை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். அனைத்து சம்பிரதாயங்களையும் தான் உடைத்துக் காட்ட வேண்டும் என்று அவனுக்குள் இருக்கும் மனிதம் அவனுக்குச் சொல்லியிருக்கிறது.
தன்னை ஆளாக்கி வளர்த்த தந்தையின் முன்பே அவருடைய ஆசீர்வாதத்தோடு தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்திருக்கிறான். இப்படிப்பட்ட சுயமரியாதை சிந்தனை என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தந்தையின் உடலுக்கு பாதபூஜை செய்து, தாயின் முன்னால் இந்தத் திருமணத்தை அந்தப் பையன் நடத்தியிருக்கிறான். நம்முடைய சினிமாக்களும் சமுதாயமும் கணவனை இழந்த பெண்களைக் கொச்சைப்படுத்தியே வந்திருக்கின்றன. உருண்டு புரண்டு அழுக வேண்டும் என்று இத்தனை ஆண்டுகள் கட்டளையிடப்பட்ட பெண்கள்தான் இந்தத் திருமணத்தை முன்நின்று நடத்தி வைக்கின்றனர்.
இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அனைத்து சாஸ்திரங்களையும் அடித்து உடைத்த அந்தப் பெண்களையும் கைகூப்பி வணங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருகாலத்தில் ஒரு பெண் கணவனை இழந்தால் வெள்ளைப் புடவையும், தாலி அறுப்பு நிகழ்வும் அவளுக்குத் தயாராக இருக்கும். அப்படிப்பட்ட உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் நடந்திருக்கும் இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு செய்தியைச் சொல்கிறது. பெரியார் பேசிய பெண்ணுரிமையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இவர்கள்.
இவை அனைத்திற்கும் ஒப்புக்கொண்ட மணப்பெண்ணுக்கும் எத்தனை சிறப்புகள் செய்தாலும் தகும். அந்தத் திருமண வீடியோவில் ஆண்களையே பார்க்க முடியவில்லை. முழுக்க முழுக்கப் பெண்களே முன்னின்று திருமணத்தை நடத்தியுள்ளனர். பகுத்தறிவுச் சுரங்கத்தின் ஒளிக்கீற்றுகள் அந்தப் பெண்கள். இவை அனைத்தும் பெரியார் விதைத்த விதை. யாரும் சொல்லிக்கொடுக்காமல், தங்களுக்கே தோன்றி இதைச் செய்ததால் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
தமிழ்நாட்டில் பலருக்கு இந்த எண்ணங்கள் இருந்தாலும் இதைச் செய்யும் தைரியம் இவர்களுக்குத்தான் இருந்திருக்கிறது. அந்தத் தந்தையின் ஆன்மாவுக்கு என்னுடைய அஞ்சலிகள். சுயமரியாதையின் செய்தியாகவே வாழ்ந்து காட்டும் இது போன்ற பிள்ளைகள் பாராட்டப்பட வேண்டியவர்கள், வணங்கப்பட வேண்டியவர்கள்.