எளிமையாக்கப்பட்ட விவாகரத்து சட்டம் குறித்து வழக்கறிஞர் சவிதா நம்மிடம் விவரிக்கிறார்.
விவாகரத்து பெறுவதற்கு இனி ஆறு மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்கிற உத்தரவு வெளியே இருந்து பார்க்கும்போது நல்லதாகத் தோன்றும். விவாகரத்து வழக்குகளுக்கான காலத்தைக் குறைப்பதற்காகத் தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருக்கிறது. குடும்ப நலச் சட்டங்கள் என்பது குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதற்காகத் தான் இருக்கிறது. குடும்ப வன்முறை, பாலியல் பிரச்சனைகள், மனப்பிறழ்வு போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தான் விவாகரத்து கேட்க முடியும் என்று சட்டம் சொல்கிறது.
பாலியல் தேவை என்பதாக மட்டுமல்லாமல், ஆண் பெண்ணுக்குள் ஏற்படும் பரஸ்பர புரிதலே திருமண வாழ்வுக்கான தேவை. இது பலருக்குப் புரிவதில்லை. சேர்ந்து வாழ விரும்புபவர்களை நீதிமன்றம் எப்போதும் பிரிக்காது. சட்டமும் இயற்கை நியதியும் அதுதான். விவாகரத்து கேட்கும்போது பாதிக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் கேட்பார்கள். குடும்ப வன்முறை போன்ற பிரச்சனை என்றால் மருத்துவரின் சான்றிதழ் கேட்கப்படும். இது ஒரு உதாரணம். விவாகரத்துக்குப் பிறகான குழந்தை வளர்ப்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால் பெண்களே பெரும்பாலும் குழந்தையை வளர்க்க நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.
குழந்தைகளின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தை ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைக்கும். நேரடியாக பாதிக்கப்பட்ட நபர் தான் நீதிமன்றத்தில் விவாகரத்து கோர முடியும். மற்றவர்கள் சப்போர்ட்டாகவும், சாட்சியாகவும் மட்டுமே இருக்க முடியும். விவாகரத்து பெறுவது இப்போது அதிகரித்துள்ளது. அந்தக் காலத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்து இருந்தார்கள். இப்போது அவர்கள் கல்வி பெற்றதால், பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிட்டதால் கணவனின் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலையில் இல்லை. அதனால் அவர்கள் விவாகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
விவாகரத்தை நீதிமன்றங்கள் பொதுவாக ஆதரிப்பதில்லை. கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதற்கான பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வேறு வழியில்லை எனும்போது தான் விவாகரத்து வழங்கப்படுகிறது. விவாகரத்து பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. குடும்ப அமைப்புகள் சிதையாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் பொதுவான நோக்கம்.