‘தேர்தல் பேச்சுவார்த்தையின்போது, பா.ஜ.க.விடம் எடப்பாடி நடந்துகொள்ளும் விதம், ஓ.பி.எஸ்.ஸை ரொம்பவே நோகடித்துவிட்டது’ என்றார், அந்த ஆளும்கட்சி பிரமுகர். மேலும் அவர், ஓ.பி.எஸ்.ஸின் மனவலியை அவருடைய வார்த்தைகளிலேயே கூறினார், ‘என்ன சொன்னாலும் எடப்பாடி கேட்கமாட்டாருய்யா.. அடங்கவும் மாட்டாரு. நான் முதலமைச்சரா இருந்துட்டேன். கட்சியை விட்டுக்கொடுக்க முடியாது. தேர்தல் முடிவு எப்படின்னாலும் வரட்டும். நான் எதிர்க்கட்சித் தலைவரா உட்கார்ந்துட்டுப் போறேன்.
சின்னம்மா சகல அஸ்திரத்தையும் எடுத்துவிடுவார். அட, ரெட்ட இலையை முடக்காமலேயே கூட, எடப்பாடிய தோற்கடிச்சிட்டா.. இவரு என்ன பண்ணுவாராம்? பா.ஜ.க. மேலிடத் தலைவருங்க கையில கால்ல விழுந்து ரெட்ட இலையைத் தக்க வச்சிட்டாலும், இவரு நினைச்ச மாதிரி முதலமைச்சராக முடியாது. வன்னியருக்குப் பத்தரை சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்துட்டு, இவரு தொகுதில இவரு மட்டும் ஜெயிக்கிறதுக்கான வேலைய பார்த்துட்டாரு. ஆனா.. ஒட்டுமொத்த முக்குலத்தோரும் ஒண்ணு சேர்ந்து இவருக்கு எதிரான வேலையப் பார்த்தாங்கன்னா.. எப்படி இவரு சி.எம். ஆவாரு?’ என்று குமுறிவிட்டாரம் ஓ.பி.எஸ்.
‘பா.ஜ.க.வை அதிமுக இந்த அளவுக்கு நம்புவது ஏன்?’ என்ற கேள்விக்கு, ‘ஓட்டு மெஷின் பாலிடிக்ஸ்’ குறித்துப் பேசினார் அந்தப் பிரமுகர். ‘கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுகவால் 38 இடங்களில் வெற்றிபெற முடிந்தது. அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று, அத்தனை தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. 2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, பா.ஜ.க. தரப்பில் தற்போது ‘கண்ணாமூச்சி ஆட்டம்’ நடத்துகின்றனர்.
பா.ஜ.க.வின் மிரட்டல் எப்படி இருக்கிறதென்றால், ‘ஜெயலலிதாவிடம் காட்டிய அதே பணிவை எங்களிடமும் (பா.ஜ.க.) காட்டியதாலேயே, ஓ.பி.எஸ். மகனால் எம்.பி. ஆக முடிந்தது. நாங்கள் நினைத்திருந்தால், 39 தொகுதிகளிலும் NDA கூட்டணியை வெற்றிபெற வைத்திருப்போம். ஒருவேளை, எங்களால் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்று, பாராளுமன்றத்தில் ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டு, அதிமுக தயவை நாடியிருந்தால், ஜெயலலிதா மாதிரி, அதிமுக தரப்பில் 15 மந்திரிகள் கேட்டிருப்பார்கள். அதனால்தான், ஓட்டு மெஷினை மாற்றி தோல்வியுறச் செய்து, அதிமுகவை எங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருக்கிறோம்’ என்று கதை விடுகின்றனர்.
ரெய்டு, கைது போன்ற மிரட்டல்கள் ஒருபுறம் இருந்தாலும், ‘எங்களுடன் கூட்டணி சேர்ந்தால், மெஷினை மாற்றி அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம்’ என்று பா.ஜ.க. பண்ணிய சத்தியத்தை நம்பியே, எடப்பாடியின் அதிமுக, அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
ஜெயலலிதா சொன்னது என்ன? ‘ஒருமுறை தப்பு நடந்துவிட்டது. இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது’ என்றல்லவா அடித்துச் சொன்னார். அம்மா வழியில் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா பேச்சை மீறி பா.ஜ.க.வுடன் எடப்பாடி கூட்டணி வைத்திருக்கிறார் என்றால், அது ஓட்டு மெஷினின் தில்லுமுல்லை நம்பித்தான்’ என்று ஆளும்கட்சி வட்டாரத்தில் உலவும் புரளியை விவரித்ததோடு, “இ.வி.எம். பெயரைச் சொல்லிக்கொண்டு, சில ஃப்ராடுகள், ‘மெஷினை மாற்றுகிறோம்.. இத்தனை கோடி கொடுங்க..’ என்று ஒவ்வொரு கட்சித் தலைவராகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலைசுற்றும் அளவுக்கு விளக்கம் அளித்து, அரசியல் தலைவர்களை மூளைச்சலவை செய்து நம்பவைக்கின்றனர்’ என்றார்.
‘ஓட்டு மெஷின்களை எப்படி மாற்ற முடியும்? எதிர்க்கட்சியினர் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனித்தபடியேதானே இருப்பார்கள்? சத்தியமாவது, மண்ணாங்கட்டியாவது. ஓட்டு மெஷின்களில் ‘எதுவுமே’ பண்ண முடியாதென்பது, அதன் அமைப்பினை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதுகூட தெரியாதவராகவா இருக்கிறார், ஒரு மாநிலத்தையே ஆளும் முதலமைச்சர்?’ என்ற கேள்விக்கு, ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற குழப்பத்தில் உள்ள அரசியல் தலைவர்களை ஏமாற்றுவது ஒன்றும் முடியாத காரியமல்ல!’ எனப் பளிச்சென்று பதிலளித்தார் அந்தப் பிரமுகர்.