/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3143.jpg)
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று கருதப்படும் இளங்கோவனுக்கு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி திடீரென்று கட்சியில் இருந்து வெளியேறியுள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலும் இருந்து வந்தார். இந்நிலையில், அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அவர் மீண்டும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப். 25) அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், மீண்டும் அவரே புறநகர் மாவட்டச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இத்தகவல் வெளியான சில மணி நேரங்களில், அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும் இபிஎஸ், மாவட்ட செயலாளர் பதவியையும் தக்க வைத்துக் கொண்டது அதிமுகவைக் கடந்தும் அரசியல் அரங்கில் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, ஏப். 28ம் தேதி திடீரென்று, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று கருதப்படும், ஜெயலலிதா பேரவை புறநகர் மாவட்ட செயலாளரான இளங்கோவன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
வேட்புமனுத் தாக்கலே செய்யாத ஒருவர் எப்படி செயலாளராக ஆக முடியம் என சொந்தக் கட்சியிலும் பல்வேறு கேள்விகளும் எழுந்தன. இருப்பினும், புதிதாக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோவனுக்கு அவருடைய ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். அவரும், எடப்பாடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பல்வேறு சலசலப்புகளுக்கு இடையே, சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவருமான வையாபுரி, இளங்கோவனுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் வெள்ளியன்று (ஏப். 29) அறிவித்தார். கடந்த 1996 முதல் சேலம் ஒன்றியத்தலைவர் பதவியை தொடர்ந்து அதிமுக தக்க வைத்திருக்கிறது. வையாபுரியின் மனைவி மல்லிகா, தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஒன்றியக்குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.
சேலம் ஒன்றியத்தில் கட்சியை வளர்த்ததில் வையாபுரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடந்த 2004 முதல் தற்போது வரை சேலம் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கட்சியில் செல்வாக்கு மிக்கவராக கருதப்படும் இளங்கோவனுக்கு எதிராக வையாபுரி போர்க்கொடி தூக்கி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_917.jpg)
இது தொடர்பாக வையாபுரியிடம் பேசினோம். ''சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடியார் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை, நானும், மற்ற கட்சி நிர்வாகிகளும் அவருக்கு சால்வையும், மாலையும் அணிவித்து வாழ்த்துச் சொன்னோம். இந்த நிலையில், திடீரென்று இளங்கோவனை புறநகர் மாவட்டச் செயலாளராக கட்சித் தலைமை அறிவித்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இடையில் என்ன நடந்தது? இளங்கோவன் எப்போது வேட்புமனுத் தாக்கல் செய்தார்? என எதுவும் தெரியவில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் அவருதான் இன்சார்ஜ். அப்போது இருந்து இப்போது வரை ஒரு எம்.எல்.ஏவைக்கூட அவர் உருப்படியாக இருக்க விடுவதில்லை. எல்லார்க்கிட்டயும் பணம் புடுங்கறதுதான் வேலை. ஒன்றிய செயலாளர்களை அடிமை போல் நடத்துவார். அவர் பொறுப்பாளராக இருந்த நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட ஆத்தூர், கெங்கவல்லி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஒன்றியங்களில் அதிமுகவுக்கு தலைவர் பதவி பறிபோய்விட்டது. அதற்கு அவருடைய திறமையின்மைதான் காரணம். இளஙகோவன், ஒரு திறமையான ஆளாக இருந்து, அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
அடுத்து, சேலம் ஒன்றியக்குழுத் தலைவராக உள்ள என் மனைவியின் பதவியையும் காலி பண்ண திமுகவுடன் சேர்ந்து கொண்டு சதி செய்து வருகிறார். சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து என்னை தூக்கிவிட்டு, முக்கியமான ஒருவருக்கு இந்தப் பதவியில் அமர்த்த அவரிடம் இளங்கோவன் 15 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். சேலம் ஒன்றிய செயலாளர் ஒருவர் மூலமாக இந்தப்பணம் கைமாறி இருக்கிறது.
அந்த ஒன்றிய செயலாளர், இடையில் தீபா அணிக்கும், அதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சிக்கும் போய்விட்டு வந்தவர். அவரைக் கூட சேர்த்துக்கொண்டு இளங்கோவன் எனக்கு எதிரான வேலைகளைச் செய்து வருகிறார். இவர் தொல்லை தாங்காமல்தான் வேடகாத்தாம்பட்டி ராஜமாணிக்கம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி செத்தே போய் விட்டார். என்னுடைய பதவி நாளைக்கு போய்விடும்... நாளை மறுநாள் போய்விடும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதையெல்லாம் எத்தனை நாளுக்குத்தான் காதால் கேட்டுக்கிட்டு இருப்பது... அதான் விலகிட்டேன்.
எம்.எல்.ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் எல்லாரும் தினமும் காலையில் அவருடைய காட்டுக்குப் போய்டணும். அங்கே போனால், அவர் ஒத்தை சேரை மட்டும் போட்டுவிட்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருப்பார். யாரையும் உட்கார சொல்ல மாட்டார். சால்வை போட்டாக்கூட நம்மை கண்டுகொள்ளாதது போல வேறுபக்கம் திரும்பிக்கிட்டு பேசிக்கிட்டு இருப்பார். அவரையும் அனுசரித்துப் போறவங்க கட்சில இருக்காங்க. என் மனசு ஒத்துப்போகல. என் உழைப்பைப் பார்த்துதான் எனக்கு ஒ.செ. பதவியை எடப்பாடியார் கொடுத்தார்.
என் மனைவி சேர்மன் ஆகக்கூடாது என்று இளங்கோவனும், சேலம் மாநகர செயலாளர் வெங்கடாஜலமும் சதி செய்தனர். கம்யூ., கவுன்சிலர் ஆதரவுடன் என் மனைவியை தலைவர் ஆக்கிவிட்டேன். கட்சித் தலைமை, யாரை வேண்டுமானாலும் செயலாளர் ஆக்கலாம். ஆனால் இளங்கோவனுக்கு அந்தப் பதவியை கொடுத்து இருக்கக் கூடாது. சேலம் புறநகரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை ஆளும் வல்லமை அவருக்கு இல்லை. ஏற்கனவே நான்கு தொகுதிகளை அவர் நாசம் பண்ணிட்டாரு.
இளங்கோவன், ஒரு நடிகர். நடிப்பதில் தனித்திறமை உண்டு. எட்பாடியாரை ஏமாத்துற அளவுக்கு இளங்கோவன்கிட்ட திறமை இருக்கு. 'அமைதிப்படை' அமாவசையை விட மோசம்.
கட்சியில் கடுமையாக உழைத்துதான் எடப்பாடியார் இன்று இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார். கட்சிக்கு உண்மையாக உழைக்கும் ஒருவர் தவறே செய்திருந்தாலும் கூட, எச்சரிக்கை செய்து அனுசரித்துப் போவார். இடைத்தேர்தலில் கூட பணம் டெலிவரி செய்யறதுல கறாராக இருப்பார். தலைமைக்கு நம்பிக்கையுடன் நடந்து கொள்வார். ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த இயக்கத்தை அவர்தான் இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளார்.
நான் இதில் பாதிக்கப்பட்டடாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இது படிப்பினை. கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பு. இப்போது ஏதாவது ஒரு நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். நான் சசிகலா அணியில் சேர்வதாக சொல்வதில் உண்மை இல்லை. அவர்கள் தரப்பில் இருந்தும் சிலர் என்னிடம் பேசினர். எம்ஜிஆர்., ஜெயலலிதா, இரட்டை இலைதான் எனக்கு முக்கியம். நான் எந்தக் கட்சிக்கும், எந்த அணியிலும் போக மாட்டேன். கட்சியை விட்டு நீக்கினாலும் கூட என் ஆயுசுக்கும் ஜெயலலிதா நினைவாக வாழ்ந்துட்டு போய்விடுவேன்.
இளங்கோவன் செயலாளராக இருக்கும் வரை ஒன்றிய செயலாளர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. கட்சி எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை. என் மனைவி மல்லிகா சேலம் ஒன்றியக்குழுத் தலைவராக இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, இளங்கோவனும், ஏ.வி.ராஜூவும் சதி செய்கின்றனர்.
எங்கள் ஆதரவு கவுன்சிலர் வள்ளி முருகன் என்பவரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்த்தனர். ஆனால் அவரோ மனசாட்சிக்கு கட்டுப்பட்டு என்னிடம் வந்தார். அவரை சிலுவம்பாளையத்திற்கே அழைத்துச்சென்று அண்ணன் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்த்தேன். இப்படி இளங்கோவன் தொடர்ந்து எனக்கு எதிரான வேலைகளைச் செய்து வருகிறார். அவருடைய டார்ச்சரால்தான் இன்றைக்கு இப்படி ஒரு முடிவை எடுத்தேன்,'' என்கிறார் வையாபுரி.
கடந்த 2012ம் ஆண்டு முதல் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென்று தனது பதவியை இளங்கோவனுக்கு விட்டுக் கொடுத்ததில் உள்ள சூட்சுமம் தெரியாமல் இலை கட்சியிலும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
இது தொடர்பாக கட்சியின் மூத்த ர.ர.க்கள் சிலரிடம் விசாரித்தோம். ''ஏப். 25ம் தேதி காலை எடப்பாடி மட்டுமே மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். திடீரென்று என்ன நடந்ததோ தெரியாது. அன்று மாலை, இளங்கோவனையும் பெயரளவுக்கு மனுத்தாக்கல் செய்யும்படி கூறினார். கட்சிக்குள் ஜனநாயகம் இருப்பதை பெயரளவுக்கு காட்டத்தான் அப்படி செய்தாரோ என்றுதான் நினைத்தோம்.
ஆனால் அவரையே புறநகர் மாவட்ட செயலாளர் ஆக்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை, அவரை செயலாளர் ஆக்குவதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதே நேரம் அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்து விடக்கூடாது என்பதற்காக இப்படியான நாடகத்தை எடப்பாடியாரே நடத்தினாரா என்றும் சந்தேகம் உள்ளது.
தான் போட்டியிட்டால் எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் எனக்கருதி காலையில் எடப்பாடியார் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, போட்டியின்றி வெற்றி பெற்றதாக ஒரு தகவலை கசிய விட்டுள்ளனர். அதன்பிறகு அன்று மாலை ரகசியமாக இளங்கோவனிடம் வேட்புமனு பெறப்பட்டுள்ளது. அந்த தகவலை கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தவிர மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். அதனால்தான் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முடியாமல் போனது,'' என்கிறார்கள் ர.ர.க்கள்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நெருங்கி வரும் வேளையில், எடப்பாடி குறித்து இளங்கோவன் ஏதும் வாயைத் திறக்காமல் இருப்பதற்காக அவருக்கு இந்த பரிசை இபிஎஸ் கொடுத்திருக்கலாம் என்ற ஹேஸ்யங்களும் கிளம்பி இருக்கின்றன.
வையாபுரி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து இளங்கோவனிடம் கருத்தறிய, அவருடைய செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும், தற்காலிகமாக அவருடைய எண் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக வந்தது. வையாபுரியைத் தொடர்ந்து இளங்கோவனுக்கு எதிராக மேலும் பல அதிமுக பிரமுகர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் எனத் தெரிகிறது. இளங்கோவனுக்கு எதிராக கிளம்பும் இந்த அதிருப்தி குரல்கள், எடப்பாடிக்கும் சேர்த்தேதான் என்கிறார்கள் ர.ர.க்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)