நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெறும் தேர்தல் முடிவாக நின்றுவிடவில்லை. அதிமுகவை பொறுத்தவரை அது இரு தலைமைகளுக்குள் இருந்த ஒற்றுமையின் முடிவாக ஆனது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மோடி இரண்டாம் முறையாக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டனர். அதுதான் பிளவின் மையப்புள்ளி. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தனது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் எனக் கோரினார்.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகியான வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் எனக் கோரினார். பாஜகவுடன் ஓ.பி.எஸ். ரகசிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். இங்குதான் தொடங்கியது பிளவு. கடைசியில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட மத்திய அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின் நடந்த காயிதே மில்லத் நினைவு, இப்தார் நோன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு ஓ. பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்தும் சென்றார்கள், ஆனால் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்களோ, எடப்பாடியோ செல்லவில்லை. அதற்கடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மாற்றுகட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு ஆகியவை ஈ.பி.எஸ். இல்லத்தில் நடைபெற்றது.
ஆனால் அதில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ளவில்லை. கோவையில் பாலம் திறக்கும் நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ளவில்லை. இப்படியாக நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் சேர்ந்து கலந்துகொள்ளவே இல்லை. இது அவர்களின் மனக்கசப்பை, பிரிவை உறுதிபடுத்தியது.
அப்போதுதான் எழுந்தது இந்த ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கை. அதிமுக நிர்வாகிகளின் மனதில் நாளுக்குநாள் வலுத்த இந்த கோரிக்கையை முதன்முதலில் வெளிப்படையாக கூறியவர் மதுரை எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா. இதுபெரும் சலசலப்பை கட்சிக்குள் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பல நிர்வாகிகளும் அதை ஆதரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை கூறிவந்தனர்.
இந்நிலையில்தான் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ஒரு இடைவெளிக்கு பின்னர் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கலந்துகொள்ளும் நிகழ்வு இது, ஆனால் இது ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கைக்கான கூட்டம், மேலும் இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த முடிவுகளும் ஆலோசிக்கப்படுகின்றன. இன்று மதியம் அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும். அங்கு ஒட்டப்பட்டிருந்த பல போஸ்டர்களில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் என்ற கோரிக்கை இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்து இருவரில் ஒருவர் என்ற முடிவுடன் அனைவரும் வெளியில்வந்து அறிவிப்பார்கள் அல்லது இருவரும் இணைந்தே செயல்படுவோம் என அறிவிப்பார்கள். மேலும் சில முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் வெளிவரும்.