தமிழ்நாடு சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. இதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு அறிக்கைகளும் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தி தமிழ்நாட்டை பரபரப்பாக்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை சந்தித்து உரையாடினோம்.
அவர் தெரிவித்த கருத்தில் சில...
ஆறுமுகசாமி ஆணையமும், அருணா ஜெகதீசன் ஆணையமும் சட்டசபையில் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த மாதிரியான நேரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பான பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவைக் காவலர்களால் வெளியேற்றப் பட்டிருக்காங்க. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அதிமுகவை வழி நடத்திய ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிற பொழுது, எடப்பாடி பழனிசாமி எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அது விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தால் போற்றுதலுக்கு உரியவராக பார்க்கப்பட்டிருப்பார். மாறாக, ‘ரோம் பற்றி எரிகின்றபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னனைப் போல’ அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்பில் கொதித்துக் கொண்டிருக்கும்போது இந்த மாதிரியான சப்பை விசயங்களுக்காக பிரச்சனை செய்வது அவர்கள் அந்த அறிக்கையை தவிர்க்க நினைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
ஜெயலலிதா இறந்த தேதி குறித்த முரண்பட்ட தகவல் உள்ளது, ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள், ஜெ. மற்றும் சசி மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் சுமூகமான உறவு இல்லை, என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விசயங்களைப் பற்றி உங்கள் கருத்து?
இறந்த தேதி குறித்து ஆணையம் குறிப்பிட்ட தேதியில் தொலைக்காட்சி செய்திகள் அப்போதே வந்தன. பின்னர்தான் அதை மறுத்திருந்தாங்க. சசிகலா மீண்டும் இணைந்த பிறகு கட்சியின் நிதி தொடர்பான விசயங்களை எடப்பாடி கவனிக்கட்டும் என அம்மா சொல்லி இருந்தது, அவர்களுக்கிடையில சுமூகமான உறவு இல்லைங்கிற மாதிரி தான் இருந்தது. அதுபோல இந்த ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிற பல விசயங்கள் சரியாக இருக்குமென்பது தான் என்னோட பார்வை.
சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட எட்டு பேரை மீண்டும் விசாரிக்கணும்னு ஆணையம் பரிந்துரை வழங்கியிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
குற்றவியல் சட்டப்படி எப்.ஐ.ஆர் போட்டு அவங்கள விசாரிக்கணும். கூடவே ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரண்டு பேரையும் விசாரிக்கணும். இவங்க தானே அம்மா மறைவுக்கு பிறகு முதலமைச்சர்களாக இருந்தவர்கள். ஒரு குற்றத்தை மறைக்க துணை போகிறவர்களும் குற்றவாளிகள் தானே! ஓ.பி.எஸ் அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர். ஈ.பி.எஸ் அதன் பிறகு 4 ஆண்டுகள், 3 மாதங்கள் முதல்வராக இருந்தவர். ஏன் அவர்கள் இந்த உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யவில்லை? குறைந்த பட்சம் அம்மா இறந்த தேதியையாவது ஏன் மாற்றி அறிவிக்கவில்லை? அதிமுக தொண்டர்களின் கொந்தளிப்பை அடக்குவதற்காகத் தானே இந்த ஆணையமே அவர்களால் அமைக்கப்பட்டது! இந்த ஆணையத்தின் மீது, உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பெற்ற தடையை விலக்குவதற்கான நடவடிக்கையைக் கூட எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது எடுக்கவில்லை. அவர்கள் அப்போதிருந்து இப்போது வரை இதை தவிர்க்கவே முயற்சிக்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லிருக்காங்களே. அது பற்றி...
சம்பவம் நடந்தப்போ மாவட்ட ஆட்சியரும் சரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சரி அந்த மாவட்டத்திலேயே இல்லன்னு சொல்லிருக்காங்க. எடப்பாடி பழனிசாமி கூட அப்போ வெள்ளந்தியா சொல்லிருப்பாரு, “டி.வில பார்த்துதான் நான் அந்த செய்திய தெரிஞ்சிகிட்டேன்”னு. அப்போ அந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யாரு, முதலமைச்சர் உத்தரவு இல்லாமல் அந்த துப்பாக்கி சூடு நடந்துடுச்சான்னு எல்லாமே விசாரிக்கப்படனும். காலுக்கு கீழ சுடனும் என்கிற விதியை மீறி மார்பிலும் தலையிலும் சுட்டிருக்காங்க. அப்போ அந்தப் படுகொலை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருக்கு. ஸ்டெர்லைட்ல பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இருந்திருக்கார் அவரும் விசாரிக்கப்படனும்.