edappadi palanisamy  Madhusudhanan

அ.தி.மு.க.விற்கு புதிய அவைத் தலைவரை நியமிக்க திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! அ.தி.மு.க.வில் கூட்டப்படும் முக்கிய கூட்டங்களுக்கும், தேர்தல் காலங்களிலும் கட்சியின் அவைத்தலைவர் முக்கியமாகப் பேசப்படுவார். அவரின் கையெழுத்துக்கு சில அதிகாரம் உண்டு!

Advertisment

அந்த வகையில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மூத்த தலைவர்களில் ஒருவருமான மதுசூதனன், முதுமைமற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.

Advertisment

இதனைப்பயன்படுத்தி, ‘மதுசூதனனுக்கு பதிலாக புதிய அவைத்தலைவரை நியமிக்க காய்களை நகர்த்தியுள்ளார் எடப்பாடி. அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் நான் தான் என போர்க்கொடி உயர்த்தி, அதற்கேற்ப சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி, கட்சியின் முக்கிய பதவியான அவைத்தலைவர் பதவியில் தனது ஆதரவாளர் ஒருவரை நியமிப்பதன் மூலம் தனது எதிர்கால அரசியல் லாபங்களுக்கு வலு சேர்க்கும் என திட்டமிட்டே இத்தகைய காய்களை அவர் நகர்த்தி வருகிறார்’என்கிறார்கள் அ.தி.மு.கவினர்.

.

இதனையடுத்தே, உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வரும் மதுசூதனை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் எடப்பாடி. அந்தச் சந்திப்பில், எதார்த்த சூழல்கள் பலவற்றை விவரித்து, ‘அவைத்தலைவரை மாற்றியமைக்கும் தனது முடிவுக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்’என எடப்பாடி கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு மதுசூதனன் ஒப்புக்கொண்டதாகவும் அ.தி.மு.க வட்டாரங்களில் பரவி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், புதிய அவைத்தலைவர் பதவியை கைப்பற்றும் ரேஸில் சீனியர் தலைவர்கள் பலரும் குதித்துள்ளனர். குறிப்பாக, தம்பிதுரை, பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் உள்ளிட்ட பலரும்இறங்கியுள்ளனர். அவைத்தலைவர் பரபரப்பு அதிமுகவில் சுறுசுறுப்பாகியிருக்கிறது.

இதற்கிடையே, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ், எடப்பாடியின் திட்டத்துக்கு ஒத்துழைப்பாரா? என்கிற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் கிளப்பி வருகிறார்கள். அதாவது, முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்-க்கும், இ.பி.எஸ்-க்கும் மோதல் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி போடும் திட்டங்களுக்கெல்லாம் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்கிற திடமான முடிவில் இருக்கிறார் ஓ.பி.எஸ்! அதனால் புதிய அவைத்தலைவர் நியமனத்தில் தனது முடிவுகளைத்தான் ஏற்க வேண்டும் என சொல்லி, எடப்பாடிக்கு செக் வைக்க தயாராகிறார் ஓ.பி.எஸ்! ஆக, கட்சிக்குள் எடப்பாடி நினைக்கும் மாற்றங்கள் இனி அவ்வளவு எளிதாக நடக்கப் போவதில்லை என்கிறார்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.