வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவாகியிருப்பது, அ.தி.மு.க. வட்டாரத்தைப் பரபரப்பாக்கி இருக்கிறது.
தூத்துக்குடியின் ஸ்டேட் பேங்க் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அ.தி.மு.க.வின் முன்னாள் கவுன்சிலரும் அந்த வட பகுதியின் பகுதி செ.வாகவுமிருப்பவர். நகரின் அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சரும் தற்போதைய கட்சியின் அமைப்புச் செ.வுமாக இருக்கிற சி.த.செல்லப்பாண்டியனால் பகுதி செ.பொறுப்பு தரப்பட்டு நீடிப்பவர். இவர் மீதும் மற்றும் ஒட்டு மொத்த குடும்ப நபர்கள் அத்தனை பேர் மீதும் தான் அந்த கேப்பிட்டல் கிரிமினல் வழக்குப் பதிவாகியிருக்கிறது.
பொன் ராஜின் மகன் கவிராமுக்கும் நகரின் சிவந்தாக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினிக்கும் கடந்த 10.12.2023 அன்று திருமணம் நடந்துள்ளது. பொன் ராஜின் மகன் ஹோட்டல் வைத்திருக்கிறார். திவ்யதர்ஷினி ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாக இருந்து வருகிறார். மணிராஜையும் அவரது மகள் திவ்யதர்ஷினியையும் நாம் அவர்களின் இல்லத்தில் சந்தித்த போது தனக்கு நடத்தப்பட்ட கொடுமையும், சித்ரவதையையும் தந்தையோடு சேர்த்து விவரித்தார்.
புரோக்கர் ஒருவர் மூலமாக பொன்ராஜ் அவர் மகன் கவிராமை பற்றித் தெரிந்தும், நல்ல பையன் தான் என்றறிந்ததும் ஜாதகம் பார்த்துதான் மகளோட திருமணத்தை நடத்தினோம். எங்களுக்கு ஜாதகம் பார்க்கிற பழக்கமெல்லாம் கிடையாது மனப் பொருத்தத்தை மட்டுமே பார்த்துக்குவோம்னு சொன்னார் பொன்ராஜ். என்னோட இரண்டு மகள்களையும் 100 பவுன் நகை போட்டு சிறப்பாக் கல்யாணம் முடுச்சு வைத்தேன். அதே மாதிரி என் வீட்டுக்கு வருகிற மருமகளும் அந்தளவுக்கு நகை, ரொக்கத்தோடு வரணும்னு சொல்லி அழுத்தினார் பொன்ராஜ்.
தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளராக மணிராஜ் இருந்தாலும் ஓரளவு வசதி கொண்டவர். மேலும் மகன், மூத்தவள் ஒரே பெண் என்பதால் வரதட்சணையாக 80 பவுன் நகை, மாப்பிள்ளைக்கு 3 பவுன்ல செயின் கைச் செயின், 2 பவுன்னு போட்டப்ப ரொக்கத்தைப் பத்தி பேசுனப்ப 2, 5ன்னு பேசி கடைசியாக ரூ.10 லட்சம் ரொக்கம் சீர் வரிசையா ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்திருக்கிறார்கள் பெண் வீட்டார். அதோட கல்யாண செலவு மற்ற சாப்பாட்டுச் செலவு மொத்தமா நாங்க ஒரே செலவாத்தான் செய்வோம். நீங்கத் தனியா சாப்பாடு ஏற்பாடு பண்ண வேண்டாம் எங்களுக்கான செலவு ரூ.7 லட்சம்னு அதையும் மணிராஜ் கொடுத்திருக்கிறார். இவ்வளவு அள்ளிக் கொடுக்கப்பட்டு இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது.
திருமணத்திற்குப் பின் தென்காசியில் இருக்கும் தன் சகோதரியின் வீட்டிற்கு மனைவியுடன் சென்ற கவிராம் அங்கு ஒரிரு நாட்களிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அதற்கு இரண்டு நாள் பின்னர் தான் அந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. 10.01.2024 அன்று மாலை கணவர் கவிராமும் அவரது தாய் லீலாவதியும் வெளியே சென்றிருந்த நேரத்தில் இரவு 10.30 மணிக்கு திவ்யதர்ஷினி தனது அறையின் படுக்கையில் அயர்ந்து தூங்கியிருக்கிறார். அது சமயம் வீட்டிலிருந்த மாமனார் பொன்ராஜ், மருமகளின் அறைக்குள் நுழைந்து அவரை பார்த்து ரசித்ததோடு தன் நிலை பற்றி துளியும் யோசிக்காமல் மருமகள் திவ்யதர்ஷினியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.
திடுக்கிட்டு விழித்த திவ்ய தர்ஷினி, தன்னை சீண்டிய தன் மாமனார் பொன்ராஜையும் அவரது நிலையையும் கண்டு பதறி அவர், “என்ன இது. மகளை போல பார்க்க வேண்டிய மாமனார் இப்படியா நடந்துகொள்வது” என திட்டிக் கொண்டிருக்கும் போதே மாமனார் பொன்ராஜ், இணங்கி போகும்படி சொன்னதும் கொதிப்பில் திவ்யதர்ஷினி அவரைக் கடுமையாக திட்டி வெளியே அனுப்பியிருக்கிறார். மறு நாள் விடிந்ததும் அறையில் நடந்தவற்றை தன் கணவரிடமும், மாமியார் லீலாவதியிடமும் சொல்லிக் திவ்ய தர்ஷினி கதறியிருக்கிறார். அவருக்கு அறுதல் சொல்ல வேண்டிய அவர்ளோ, சப்பைக் கட்டுக் கட்டியிருக்கிறார்கள்.
“இதோப் பார்.... இது இங்கெல்லாம் இப்படித்தான். ஒத்துப் போவணும் இல்லன்னா உண்டு இல்லன்னு பண்ணிறுவோம்னு..” கொலை மிரட்டல் விடுத்த கணவரும் மாமியாரும், “நீ சாதாரண குடும்பம், எங்களுக்கு அரசியல் செலவாக்கு இருக்கு... ஒன்னுமில்லாம ஆக்கிறுவோம்”னு சொல்ல அதிர்ந்து போனார் திவ்யதர்ஷினி. இதையடுத்து அங்கே திவ்யதர்ஷினிக்கு தொடர் டார்ச்சர்கள், அடி உதை சித்ரவதைகள் நடந்துள்ளது. இந்த நிலையில் திவ்யதர்ஷினியின் தாய்க்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி வரச் சொல்லி கணவனும் வீட்டாரும் தொடர்ந்து தொந்தரவுகள் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் இந்தச் சித்ரவதைகளைத் தாங்க முடியாத திவ்யதர்ஷினி தனக்கு நடந்தவற்றையும், மாமனாரின் மோசமான நடவடிக்கை, நிலம் பற்றி தன் தந்தையிடம் போனில் பேசி கண்ணீர் வடித்திருக்கிறார்.
மகளின் நிலை கண்டு பதறிக் கொதித்துப் போன மணிராஜ், தன் உறவினர்களோடு சென்று பொன்ராஜிடம் நியாயம் கேட்டிருக்கிறார். “அன்றைக்கு தெரியாம குடி போதையில அப்படி நடந்துக்கிட்டேன். மன்னிச்சுடுங்க...” என்று அவர்களிடம் பொன்ராஜ் கை கூப்பிக் கேட்டுக் கொண்டதையடுத்து மணிராஜ் உறவினரோடு திரும்பியிருக்கிறார்.
அதனையடுத்து இரண்டு மாதங்களில் திவ்ய தர்ஷினி கர்ப்பமாக கணவர் அவரை, அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றிருக்கிறார். மகளின் கர்ப்பம் கருதி அவரை மருத்துவர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் சிகிச்சை முறைகளை நல்லபடியாகவே கவனித்துக் கொண்டனர். பின்னர் திவ்யதர்ஷினியைக் கணவர் வீட்டில் கொண்டுச் சென்று விட்டுள்ளனர்.
தங்களுக்கு இணங்கிச் செல்லாத மருமகளின் மீது ஆத்திரப்பட்ட கணவர் மற்றும் அவரது பெற்றோர், திவ்யதர்ஷினியின் கருவைக் கலைத்துவிட வேண்டுமென்ற திட்டத்தில் சென்னையில் சித்த மருத்துவராக இருக்கும் கணவரின் சகோதரியான கீதாவை வர வழைத்திருக்கிறார்கள். கணவர் கவிராம், மாமனார் பொன்ராஜ், மாமியார் லீலாவதி மற்றும் மகள் கீதா நான்கு பேரும் திவ்ய தர்ஷினியை வலுக்கட்டாயக் கருக் கலைப்பிற்கு ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அதிலும் மாமியார் லீலாவதி இஞ்சியை அதிகம் அறத்து அதன் சாறை திவ்யதர்ஷினியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியிருக்கிறாம். இதில் எரிச்சல் தாங்காமல் திவ்யதர்ஷினி கதறிக் கொண்டிருக்க, அவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார் கீதா. இந்த குடைச்சலில் மறுநாளே திவ்யதர்ஷினிக்கு அபார்ஷன் ஆகியிருக்கிறதாம்.
தொடர்ந்து கணவர் உள்ளிட்ட பொன்ராஜூம் குடும்பத்தார்களும் சேர்ந்து, “இங்கே நடந்ததை வெளிய சென்ன உன்னய கொலை பண்ணிட்டு அதை தற்கொலைன்னு முடிச்சிறுவோம், எனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. ஆளுங்கட்சிலையும் ஆளிருக்கு” என்று கொலை மிரட்டல் விடுத்தது கண்டு பீதியில் ஒடுங்கிப் போயிருக்கிறார் திவ்ய தர்ஷினி. அந்த மிரட்டல் எச்சரிக்கையோடு திவ்ய தர்ஷினியை 01.10.2024 அன்று அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். கணவர் கவிராம் வந்து தன்னை கூட்டிப் போகாத நிலையில், வீட்டிற்குச் சென்ற அவரை உள்ளே விடாமல் அடித்துத் துன்புறுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில், திவ்யதர்ஷினி மெண்டல் அதை மறைச்சி எனக்கு கட்டி வைச்சுட்டாக என்று கணவர் கவிராம் தன் மாமனார் மணிராஜின் மீது வழக்குப் போட்டுள்ளாராம். இதை இப்படியே விட்டு விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த திவ்யதர்ஷின், தன் தந்தையோடு சென்று தனக்கு மாமனார் வீட்டில் நடந்து கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி தூத்துக்குடியின் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
விசாரணையில் 20 பவுன், 10 பவுன் நகை தான் போட்டாக அந்தளவு போடல என்று கணவர் கவிராம் சொல்ல, அங்கே தன் அரசியல் செல்வாக்கபை் பயன்படுத்திய பொன்ராஜ் புகார் மனுவை நீர்த்துப் போகச் செய்ய, கவனிக்கப்பட்ட எஸ்.ஐ. சிவகுமாரும் திவ்ய தர்ஷினியின் மனுவை ஒரு ஓரத்தில் வைத்து விட்டாராம். தொடந்து இந்தப் பஞ்சாயத்தை செல்லப்பாண்டியனிடம் கொண்டு போயிருக்கிறார் பொன்ராஜ். அவரோ தப்பானவரைக் கண்டிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம், பொறுத்துப் போ, அனுசரிச்சுப்போன்னு சொன்னது அவர்களின் வேதனையைக் கிளறியுள்ளதாம்.
நாம் இதுகுறித்து செல்லப்பாண்டியனைத் தொடர்பு கொண்டு கேட்டதில், விவகாரம் வந்துச்சு. ஆனா நா அப்படி சொல்லவேயில்லை என்று மறுத்துவிட்டார். அதையடுத்து திவ்யதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் செய்திருக்கிறார். ஆரம்பகட்ட விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, கணவர் கவிராம், பொன்ராஜ், கட்டாயக் கருக்கலைப்பு செய்த கீதா, தாய் லீலாவதி ஆகியோர் மீது 498 (A) 354 (A) 403 506 (II) உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். “வலியோடிருந்த திவ்யதர்ஷினியோ, இஞ்சித் தண்ணி, டேப்லட்ஸ்கள ரெண்டு நாளா டார்ச்சர் பண்ணி ஃபேர்ஸ் பண்ணிக் குடிக்க வைச்சதில கரு கலஞ்சிடுச்சி. கடுமையான வலி, வெளிய சொன்னா அறுவாளால் வெட்டிறுவோம்னு மெரட்டுனாக, அந்த வலியோட தான் மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட் பண்ணோம். எப்.ஐ.ஆர். போட்டும் அவங்கள அரஸ்ட் பண்ணல. அ.தி.மு.க. அரசியல் பவர அந்தளவுக்கு யூஸ் பண்றாக” என்றார் வேதனையோடு.
“விசாரணைக்குப் பின்பு எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. அதன் மீது மேல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்கிறார் டவுண் ஏ.எஸ்.பி.யான மதன்.
வழக்கறிஞர் ஜெயச்சந்திரனோ, “இத்தனைக்கும் அடிப்படை காரணமே பொன்ராஜோட பாலியல் தொந்தர்வுதான். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கூட அத்தனை எளிதில் அவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடல அந்தளவுக்கு அரசியல் செல்வாக்கப் பயன்படுத்துனார் பொன்ராஜ். இறுதியா எப்.ஐ.ஆர்.போட்டு நடவடிக்கை எடுக்கலைன்னா, நடு ரோட்ல உக்காந்திறுவோம்னு சொன்ன பிறகு தான் எப்.ஐ.ஆரே போட்டாங்க” என்கிறார்.
நடந்தவைகள் குறித்து விளக்க மறிய நாம் பொன்ராஜின் வீட்டிற்குச் சென்ற போது மொத்தக் குடும்பமும் வெளியேறியிருந்தது. பொன்ராஜின் மொபைலும் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர் விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் அதனை வெளியிடத் தயாராக உள்ளோம்.