Skip to main content

ஜெயக்குமார் ஒரு முந்திரிக்கொட்டை: வாகை சந்திரசேகர் தாக்கு

Published on 23/03/2018 | Edited on 24/03/2018


 

eps ops


முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் 23.03.2018. வெள்ளிக்கிழமை மாலை நடைப்பெற்றது. இதனையொட்டி நாளேடுகளில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த நடிகரும், வேளச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர்,
 

ஓராண்டாக அவர்கள் மக்களை பார்க்கவேயில்லை. தங்களது எம்எல்ஏக்களை தக்க வைப்பதற்கும், அவர்கள் வெளியேறாமல் தடுப்பதிலேயும், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால் அதனை எப்படி சமாளிப்பது போன்றவற்றிலேயும்தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஒரு சாதனையும் அவர்கள் செய்யவில்லை. எப்பவோ கவிழ வேண்டிய ஆட்சியை இத்தனை நாள் இழுத்ததுதான் அவர்களின் சாதனை. 
 

எடப்பாடி பழனிசாமியும், ஜெயலலிதாவைப்போல் அறிவிக்கிறாரேயொழிய எதுவும் நிறைவேறவில்லை. அறிவித்த நிதி ஒதுக்கீடு வந்து சேரவில்லையே. என்னுடைய வேளச்சேரி தொகுதியில் உள்ள ஏரியை தூய்மைப்படுத்துவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்று சொன்னார்கள். 6 மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அதற்காக ஒரு சிறு துரும்பு கூட கிள்ளிப்போடவில்லை. நிதி இன்னும் வந்து சேரவில்லை. அதற்கான பணிகளும் நடக்கவில்லையே. எந்த தொகுதியிலும் எந்த வேலையும் நடக்கவில்லை. அடிப்படையாக டிரைனேஜ், குடிநீர் தொட்டி பிரச்சனை, கழிவறை பிரச்சனையை கூட கவனிக்கவில்லை. அதிகாரிகளை கேட்டால் நிதி வரவில்லை என்கிறார்கள்.

 

vagai Chandhirasekar


 

எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக பொறுபேற்று செயல்பட்ட கடந்த ஓராண்டில் மட்டும் 5,208 கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளார்களே...
 

கோப்புகளில் கையெழுத்து போடலாம். அதற்கான பணிகள் நடந்ததா, மக்களை சென்றடைந்ததா. மக்களுக்கு கடந்த ஓராண்டில் என்ன பலன்கள் போய் சேர்ந்திருக்கிறது. ஜெயலலிதா போலவே திட்டங்களை அறிவிக்க வேண்டியது, கையெழுத்து போட வேண்டியது. ரேஷன் கடைகளில் கொடுத்த பொருட்களையெல்லாம் குறைக்கிறார்கள். ரேஷன் கடையை மூடப்போகிறார்கள். ஜெயலலிதா இருந்த 5 வருடமும், அதன் பின்னர் ஓரு ஆண்டும், இவர்கள் தற்போது சொல்லும் ஓராண்டும் எந்தப் பணிகளும் மக்களுக்கான பணிகளாக நடக்கவில்லை. சென்னை மாநகரத்திலேயே சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது.
 

முதியோர் பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. அதுதான் சோறு, அதுதான் வாழ்க்கை, அதை வைத்து வாழ்ந்தவர்கள் இன்று பென்ஷன் வராமல் தவிக்கிறார்கள். தாசில்தாரை கேட்டால், நிதி வந்தால்தான் கொடுக்க முடியும் என்கிறார். ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டிருக்கிறது. டிராமா பண்ணுகிறார்கள். மோடியை பார்க்க வேண்டியது. அவர் என்ன சொல்கிறாரே அதன்படி செய்ய வேண்டியது. மோடி சொல்வதை இவர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். 
 

பாஜவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என்று சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறாரே...
 

அடிக்கிற மாதிரி அடி, அழுவுகிற மாதிரி அழுவுகிறோம் என்று சொல்வதுபோல் செயல்படுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறுகிறார். அதனால் என்ன பயன். ஸ்டாலின் ராஜினாமா செய்வோம் என்றார். ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டியதுதானே. 
 

 

eps ops

 

மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார். எப்போது அதிமுக ஆட்சியை கலைக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே ராஜினாமா செய்ய வேண்டும் என பேசுகிறார் என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்...
 

ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் மாதிரி ஆகிவிட்டார். திமுக இருந்தபோது ஏன் செய்யவில்லை. இப்ப செய்ய சொல்கிறீர்கள் என விதண்டாவாதமாக பேசி வருகிறார். காவிரி விவகாரத்தில் சரியான பதிலை கொடுக்கவில்லை. முதல் அமைச்சருக்கிட்ட கேட்கிற கேள்விக்கு முதல் அமைச்சர் பதில் சொல்லணும். நிதி அமைச்சருக்கிட்ட கேட்கிற கேள்விக்கு நிதி அமைச்சர் பதல் சொல்லணும். வேறு துறையில் இருக்கும் ஜெயக்குமார் முந்திரிக்கொட்டை மாதிரி பதில் சொல்கிறார். நேற்றுகூட எங்களை பிரிக்க முடியாது என்று பேசுகிறார். அப்படியென்றால் ஏதோ ஒன்று இருக்கு. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லை. எப்ப வேண்டுமானாலும் பிரிவார்கள். ஒற்றுமையாக இருப்பதுபோல் விளம்பரம் செய்கிறார்கள். இந்த ஆட்சியை கலைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று ஸ்டாலின் தெளிவாக பலமுறை கூறிவிட்டார். 
 

தினகரன், சசிகலா தேவையில்லை என்கிறார்கள். ஆனால் தினகரன் மேடையிலேயே இரண்டு எம்எல்ஏக்கள் உட்கார்ந்திருக்கிறார்களே... அவர்களை உங்களால் என்ன செய்ய முடிந்தது. மேலும் சில எம்எல்ஏக்கள் சென்றால் தானாகவே கவிழும் இந்த ஆட்சி. இனி தேர்தல் நடந்தால் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதையும், அதிமுக வெற்றி பெறாது என்பதையும் அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். மக்களை சந்திக்க முடியாது என்பதால் இருக்கும் வரை சுருட்ட நினைக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

Chandrasekhar Appointed as President of Tamil Nadu Science, Music and Drama Council

 

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நடிகரும், முன்னாள் திமுக எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தற்பொழுது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக உள்ள இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இந்த நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்போடு தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1980-களில் துணை நடிகராக பணியாற்றிய வாகை சந்திரசேகர் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

வைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா?” - வாகை சந்திரசேகர் ஆவேசம்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
toll

 

சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியை மரியாதை குறைவாக பேசியதோடு, காவல்துறை அதிகாரியை தள்ளிவிடுகிறார் முன்னாள் எம்.பி. அர்ஜுனன். பதிலுக்கு காவல்துறை அதிகாரியும் அர்ஜுனனை தள்ளிவிடுகிறார். பின்னர் கோபமடைந்த அந்த அர்ஜுனன், காவல்துறை அதிகாரியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் காவல்துறையினரை மரியாதை குறைவாக பேசி, தாக்கியது 'நடிகர் வாகை சந்திரசேகர்' என பதிவிடப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவுக்குக் கீழே, ''இந்தப் பதிவை போட்டவர் சந்திரசேகரை பார்க்கவில்லை. தி.மு.க.வை குற்றம் சொல்லும் நோக்கம் மட்டுமே இருக்கிறது என்றும் அது சந்திரசேகர் கிடையாது, தற்போது அவரது முகத்தையும், குரலையும் தமிழ் மக்கள் நன்றாக அறிவர், அது தெரிந்தும் இங்கு சிலர் ஒன்னும் தெரியாது போல் தி.மு.க.-வை திட்டி வருகிறார்கள். இது நாட்டுப் பற்று அல்ல. தி.மு.க. மீது உள்ள பகை'' என வாகை சந்திரசேகருக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

மேலும், ''போலீஸ் இந்த மாதிரி ஆட்களை ஸ்டேஷனுக்கு ஏன் கொண்டுபோகவில்லை. இதே ஏழை எளிய மக்களாக இருந்தால் வேறு முறையில் இறங்கி இருப்பார்கள். போலீஸ்களுக்கு இது தேவைதான் ஒரு ஏப்பை சப்பை கிடைத்தால் எவ்வளவு ரவுடித்தனம் பண்ணுகிறீர்கள். இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்'' என்றும் ''வீடியோவில் இருப்பது அ.தி.மு.க.-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன்'' என்றும் பதிவுகள் நீண்டு கொண்டே போகிறது. 

 

vagai chandrasekar mla

 

இதுதொடர்பாக நாம் நடிகர் வாகை சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது, “கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு இல்லாமல், குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் அதிலிருந்து மீண்டு வர மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சாத்தான்குளம் சம்பவம் மனதை விட்டு நீங்காமல் உள்ளது. ஜெயராஜ் மனைவியும், பென்னிக்ஸ் தாயாருமான செல்வராணி, ஜெயராஜ் மகளின் அழுகுரல் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.

இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவங்களால் மக்கள் வேதனையில் இருக்கும்போது, இதனை ஒரு செய்தியாக ஆக்க நான் விரும்பவில்லை. என்னை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய தொகுதியான வேளச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். 40 ஆண்டுகாலமாக கலைத் துறையில் இருக்கிறேன். அரசியலில் தி.மு.க.-வில் இணைந்து ஒரே இயக்கத்தில் பணியாற்றி வருகிறேன். இதுபோன்ற செய்திகள், போலிப் பதிவுகள் என்னுடைய கலை வாழ்க்கையை, பொதுவாழ்க்கையை நிச்சயம் பாதிக்காது.

தி.மு.க. மீது இருக்கும் நல்ல பெயரை கெடுக்க இதுபோன்ற அவதூறுகளை சிலர் தொடர்ந்து பரப்புகிறார்கள். தி.மு.க. தலைவரும், தி.மு.க.-வினரும் சிறப்பாக பணியாற்றுவது அவர்களுக்கு பொறுக்கவில்லை. அரசியலில் நாகரீகமாக கருத்து தெரிவித்து, அதற்கு எதிர்க்கருத்துத் தெரிவித்து மோத வேண்டும். அதைவிட்டுவிட்டு இதுபோன்ற அவதூறுகளை பரப்பி தி.மு.க.-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது எனக்கு ஏற்பட்ட அவமானமாக பார்க்க மாட்டேன். தி.மு.க.-வை இழிவுப்படுத்தும் நோக்கில் செய்துள்ளார்கள். ஆகையால் தி.மு.க. தலைவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாங்கள் இதனை சட்டப்படி சந்திக்க உள்ளோம்” என்றார்.