Skip to main content

"மாயன்கள் தமிழர்கள்தான் என்பதை சேகுவேராவே ஒப்புக்கொண்டுள்ளார்..." செந்தில்குமரன் கூறும் தமிழ் வரலாறு!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

Senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூட்யூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், மாயன்கள் தமிழர்கள்தான் என்பதை வில்லியம் ப்ரெஸ்க்காட் நிறுவியது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

குமரிக்கண்டத்திலிருந்த மாயன் கலாச்சாரம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு அமெரிக்காவிற்குச் சென்று அங்கிருந்த இரு கண்டங்களுக்கும் பரவியது என்பது குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே மூழ்கிய கப்பல் ஒன்றைக்  கண்டுபிடித்தார்கள். அந்தக் கப்பல் முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அக்கப்பல் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்த தேக்கு மரம், தற்போதைய தென்னிந்தியா பகுதிகளில் காணப்படும் தேக்கு வகையாகும். கப்பல்கள் குறித்து தமிழ் வரலாறு என்ன கூறுகிறதோ அதோடு ஒத்துப்போனது அந்தக் கப்பலின் கட்டுமானம். 

 

'தி கான்குவஸ்ட் ஆஃப் மெக்சிகோ அன்ட் பெரு' என்ற நூலை எழுதிய வில்லியம் ப்ரெஸ்க்காட், மாயன்கள் தமிழர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். இந்தியர்கள், தென்னிந்தியர்கள், திராவிடர்கள் என்றெல்லாம் அவர் குறிப்பிடவில்லை. நேரடியாக தமிழர்கள் என்றே குறிப்பிடுகிறார். ஒம்லக், ஆஸ்டிக், மாயன், இன்காஸ் என மொத்தம் நான்கு பிரிவுகள் இருந்திருக்கின்றன. இதில், இன்காஸ் வகை மக்கள் தென்னமெரிக்கா சோழர்களே என்பதை மையமாக வைத்து ஆய்வு செய்து ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. இது மாதிரியான அறிய பொக்கிஷங்கள் நிறைந்த பல நூல்கள் யாழ்ப்பாண நூலகத்தில் இருந்தன. யாழ்ப்பாண நூலகத்திற்கு இணையான தமிழ் நூலகம் உலகத்தில் எங்கும் இருந்ததில்லை. அதனால்தான், ஈழப்போரில் சிங்களர்கள் திட்டமிட்டு யாழ்பாண நூலகத்தைக் கொளுத்தி தமிழர்களின் வரலாற்றை அழித்தார்கள். இது மாதிரியான வரலாற்று அழிப்புக்கு உள்ளாவது தமிழ் இனத்திற்கு ஒன்றும் புதிதானது அல்ல. 

 

ஒருகட்டத்தில் ஸ்பானியர்கள் மாயன்கள் வாழ்ந்த பகுதியை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றனர். ஸ்பானியர்கள் ரோமன் கத்தோலிக் வழிபாட்டைப் பின்பற்றக்கூடியவர்கள். முதலில் மாயன்களின் இடத்தைக் கைப்பற்றிய ஸ்பானியர்கள், பின்னர் தங்களுடைய மதத்தை அவர்களிடம் திணிக்க முயல்கின்றனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்தது மாயன்களிடம் இருந்த உருவ வழிபாட்டு முறைகளும் அவர்கள் கைவசம் இருந்த வரலாற்று நூல்களும். யாழ்ப்பாணம் நூலகத்தை அழித்து எப்படி வரலாற்று அழிப்பில் சிங்களர்கள் ஈடுபட்டார்களோ, அது மாதிரியான வரலாற்று அழைப்பை ஸ்பானியர்கள் மாயன்களை நோக்கி தொடுத்தனர். ஓர் இடத்திற்க்கு புதிதாக வரும் சிறுபான்மை இனம் அங்கு ஏற்கனவே உள்ள பெரும்பான்மை இனத்தை நேரடியாக மோதி வெல்ல முடியாது. வஞ்சகம், துரோகம் என முதுகில் குத்தும் வேலையைச் செய்து பின் அடையாள அழிப்பில் ஈடுபட்டு அந்த இனத்தை படிப்படியாக வீழ்த்தும். 

 

பாபிலோனில் சாலமன் கட்டிய கோவில் ஒன்று உள்ளது. அது கிமு 958இல் கட்டப்பட்டது என அந்த மக்கள் கூறுகின்றனர். கிமு 958 என்றால் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகள் முந்தையது. தங்களுடைய வரலாற்றை அந்த மக்கள் எந்த அளவிற்குத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என யோசித்துப் பாருங்கள். அந்த சாலமன் கட்டிய கோவில் பல முறை இடிக்கப்பட்டது. அது எப்போது இடிக்கப்பட்டது; யாரால் இடிக்கப்பட்டது என்பதைக்கூட பதிவு செய்து வைத்துள்ளார்கள். தமிழினத்திற்கு ஏறக்குறைய 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது என்பது தெரிகிறது. ஆனால், அவற்றைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம். நிறைய வரலாற்றுத் தரவுகள் அழிக்கப்பட்ட காரணத்தால் மாயன் கலாச்சாரம் என்றெல்லாம் ஒன்றில்லை என நம்மவர்களே கூறுகின்றனர். தென்னமெரிக்கா முழுவதும் பயணம் செய்த அனுபவம் கொண்ட புரட்சியாளர் சேகுவேராவே "மாயன்கள் தமிழர்கள்தான் என்று வில்லியம் ப்ரெஸ்க்காட் கூறிய கருத்து சரியானதுதான்; நான் உணர்ந்ததும் அதுதான்" எனக் கூறியுள்ளார். இந்த மாயன் கலாச்சார அழிவுக்குப் பிறகு என்ன நடந்தது.

 

குமரிக்கண்டத்தை நிலந்தரு திருவிற் பாண்டியன் என்ற மன்னன் ஆண்டதாக முன்னர் பார்த்தோம். அதேபோல நெடியோன் பாண்டியன் என்ற அரசன் குமரிக்கண்டத்தை ஆண்டதாகவும் கூறப்படுகிறது. நெடியோன் பாண்டியனுக்கு பிறகு எந்தவோர் அரசனின் பெயரும் இலக்கியத்தில்கூட இல்லை. எங்கெல்லாம் வரலாறு தெரியவில்லை எனக் கூறப்படுகிறதோ அங்கெல்லாம் ஆரியம் தன்னுடைய கட்டுக்கதைகளையும் புராணக்கதைகளையும் நுழைத்துள்ளது. நெடியோன் பாண்டியனுக்கு அடுத்த வரலாற்றைப் பின்னோக்கி திரும்பிப்பார்த்தால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என ஒரு பாண்டிய அரசனின் பெயர் நமக்குத் தெரியவருகிறது. பல்யாகசாலை என்பதைக் கவனித்தோமென்றால், யாகம் வளர்ப்பது என்பது ஆரியர்கள் கலாச்சாரம். குமரிக்கண்ட வரலாற்று காலத்தில் இயற்கை வழிபாடுதான் மக்களிடையே இருந்தது. ஆகவே, பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி காலத்திலோ அல்லது அதற்கு சற்று முந்தைய காலத்திலோதான் தமிழர்களோடு ஆரியர்கள் கலந்திருக்க வேண்டும். அது எப்படி என்பதை அடுத்தடுத்த பகுதிகளில் விரைவாக பார்ப்போம்.