நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூடியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், குமரிக்கண்டம் குறித்தும் மாயன்கள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
வரலாற்றில், நாம் தவறு என்று நினைத்த ஒரு விஷயம் பின்னாட்களில் சரியானதாக இருக்கும். இதுதான் சரி என இன்று கணித்த விஷயம் பின்னாட்களில் தவறாகிவிடும். இது போன்ற நிகழ்வுகள் வரலாற்றில் நடப்பது இயல்பானதே. குமரிக்கண்டம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து நாம் பேசிவருகிறோம். இதற்கு எதிர்மனநிலை கொண்ட ஒருவர், குமரிக்கண்டம் இருந்தது உண்மை என நிரூபியுங்கள் என்று கேட்டால் அதை நிரூபிப்பது கஷ்டமானதுதான். குமரிக்கண்டம் இருந்தது என இன்று நிரூபிப்பது எவ்வளவு கஷ்டமான விஷயமோ அதைவிடக் கஷ்டமான விஷயம் குமரிக்கண்டம் என்ற ஒன்று இல்லையென நிரூபிப்பது. குமரிக்கண்டம் என்பது பொய்யான ஒன்றாக இருந்தால் அதைத் திரும்பத் திரும்ப பேசவேண்டிய தேவை வரலாற்றில் இருந்திருக்காது. இன்றைய காலத்தில் ஒரு பொய்யான விஷயத்தை திரும்பத் திரும்பக்கூறி உண்மையாக்கிவிடலாம். ஆனால், அன்றைய காலத்தில் அப்படியில்லை. திட்டமிட்டு ஒரு பொய்யைப் பரப்புவோம் என நினைத்து இலக்கியங்களில் குமரிக்கண்டம் குறித்து எழுதியிருக்க வாய்ப்பில்லை. காரணம், பல்வேறு காலகட்ட இலக்கியங்களில் குமரிக்கண்டம் குறித்த பதிவுகள் உள்ளன. வெகுஜன மக்கள் அறிந்த ஒரு உண்மையைத்தான் தங்களுக்கு ஏற்ற பாணியில் கவிஞர்கள் எழுதியிருக்க முடியும். இலக்கிய நயத்திற்காக அதில் வியந்து ஓதுதல் இருக்கலாம். முற்றிலும் அவை பொய்யானவை என்று கூறிவிடமுடியாது.
மாயன் கலாச்சாரம் குமரிக்கண்டத்திலிருந்துதான் உலகம் முழுக்கச் சென்றது. உலக வரலாற்று அறிஞர்கள் இது தொடர்பாக கூறும் பல விஷயங்கள் நம்மை அதிர்ச்சியடையவும் மகிழ்ச்சியடையவும் வைக்கின்றன. மாயன்கள் என்பவர்கள் குமரிக்கண்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக பயணப்பட்டு உலகம் முழுக்கச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற காலத்தில் அங்கு மனிதர்கள் ஏற்கனவே இருந்தார்களா அல்லது இவர்கள் சென்ற பிறகுதான் மனித நாகரிகம் அங்கு உருவாக ஆரம்பித்ததா என்பது குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. அவர்களுக்கு உடலில் சிகப்பு வண்ணத்தை பூசிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. மிருகங்களுக்குப் பயங்காட்டவும் காடுகளுக்குள் அடையாளம் கண்டுகொள்ளவும் இந்தப் பழக்கம் அவர்களிடம் இருந்துள்ளது. குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு வானியல், கட்டிடக்கலை மற்றும் கடல்சார் அறிவு அதிகம்.
எஸ்கிமோக்கள் மொழியில் பனி என்பதற்கு பல வார்த்தைகள் உள்ளன. காரணம், அவர்கள் முழுக்க முழுக்க பனியோடு வாழ்ந்தவர்கள். அதேபோல தமிழில் கப்பல், படகு, கடல் என நீரோடு தொடர்புடைய விஷயங்களுக்கு 60க்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. இதன் மூலம் தமிழர்களுக்கும் கடலுக்கும் இருந்த தொடர்பை அறியமுடியும். மாயன்கள் என்று வரலாற்றில் கூறப்படுவோர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மேம்பட்ட அறிவு மற்றும் நாகரிகம் கொண்டிருந்த மாயன்கள் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. வரலாற்றில் துரோகிகளைக் கண்டறியும் இனம் வரலாற்றில் எளிதில் ஜெய்த்துவிடும். நாம் சிறந்த கலாச்சாரம் கொண்டு சிறந்து விளங்குகிறோமே... நம்மை யார் வந்து அழிப்பார்கள் என்று நினைக்கும் இனம் துரோகத்திற்கு எளிதில் உள்ளாகிவிடும். நம்முடைய தமிழ் இனம் இதில் இரண்டாவது வகை. இதை இன்றைய ஈழம் வரலாறு வரைக்கும் பார்க்க முடிகிறது.