Skip to main content

பெண்ணின் மாதவிடாய் தீட்டு என்றால் ஆண் நிரந்தர தீட்டு... காரணம் கூறும் செந்தில்குமரன்!

Published on 29/06/2021 | Edited on 06/07/2021

 

senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூடியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், அனைத்து சாதியினரும் அனைத்து பாலினத்தவர்களும் அர்ச்சகராகலாம் என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கடவுள் வழிபாட்டில் தமிழ் வழிபாடு என்பது நமக்கு அந்நியமா அல்லது அதுதான் நியாயமா என்பது குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம். தற்போது அரசு அறிவித்துள்ள பெண்களும் அர்ச்சகராகலாம் மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த அறிவிப்புகள் சரியானதா? நம்முடைய வரலாறு என்ன கூறுகிறது? எந்த ஒரு சார்பையும் கண்மூடித்தனமாக எடுக்காமல் நம் வரலாற்றைச் சற்று பின்னோக்கி பார்ப்போம். 

 

தமிழினத்தில் யார் கடவுளாகப் பார்க்கப்பட்டார்கள் என்பது குறித்தெல்லாம் கடந்த பகுதியில் பார்த்தோம். அந்தக் கடவுளுக்குப் பூஜை செய்தது யார்? 'வேலனை அழைத்து வெறியாடச் செய்தல்' என்ற ஒரு பழக்கவழக்கம் தமிழ்ச்சமூகத்திலிருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சாமியாடுதல் எனும் பழக்கம். கோயில் விழாக்களில் பூசாரி சாமிக்குப் படைத்துக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் சாமிவந்து ஆட ஆரம்பிப்பார். இந்த நிகழ்வை இன்றும்கூட கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் பார்க்கலாம். அந்தக் கூட்டத்தில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் சாமி வரும். இது, கடவுள் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டுகிறது. ஆனால், அர்ச்சகர் சமஸ்கிருத மந்திரம் சொல்லும் கோயில்களில் யாராவது சாமி வந்து ஆடுகிறார்களா? கடவுள் மனித ரூபத்தில் வந்து சாமியாடுவார் என்பதுதான் காலங்காலமாக நம்மிடம் இருந்த மரபு. 

 

சாமிக்குக் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டும்தான் பூஜை செய்யவேண்டும் என்ற முறை நம்மிடம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அனைத்து சாதியினரும் இந்த வேலையைச் செய்தனர். அவர்கள்தான் பூசாரிகள் என அழைக்கப்பட்டனர். பின்பு, கடவுள் முன் மந்திரம் சொல்லும் பழக்கமும் பாடல்கள் பாடும் பழக்கமும் வந்தன. அதைச் செய்தவர்கள் ஓதுவார்கள் என அழைக்கப்பட்டனர். ஓதுவார்களும் எந்தவொரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் அல்ல. தொடக்கக் காலங்களில் நடுகல் வழிபாடு மட்டும்தான் இருந்தது. பின்புதான் கோயில் என்ற முறை வருகிறது. பின்னாட்களில் நுழைந்த ஆரியர்களின் ஆதிக்கம், தமிழ் வழிபாட்டையும் ஓதுவார்களையும் கோயிலில் இருந்து வெளியேற்றியது. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற விதி நம்முடைய வரலாற்றில் நுழைந்த இடைச்செருகலே. ஒழுக்கம் மற்றும் சுத்தம் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே இருக்கும் என்று நினைப்பதே முட்டாள்தனம். 

    

பெண்களும் அர்ச்சகராகலாம் என்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காரணமாகக் கோயிலுக்கு தீட்டு ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். மாதவிடாய் மட்டும்தான் தீட்டா? மாதவிடாய் என்பது எப்படி உடலில் இருந்து வெளியேறும் ஒரு கழிவோ அதேபோல மலம், சிறுநீர், சளி அனைத்தும் கழிவுதான். மாதவிடாய் ரத்தத்திற்கு எப்படி ஒருவகையான மனம் இருக்கிறதோ அதேபோல மேற்கூறிய அனைத்து கழிவுகளுக்கும் ஒரு மனம் இருக்கிறது. ஆகையால், இவையனைத்தையும் தீட்டு என்று கூறிவிட முடியுமா?  பிற கழிவு வெளியேற்றத்திற்குப் பிறகு எப்படி எளிதாக சுத்தப்படுத்திக்கொள்ள முடிகிறதோ அதைவிட மாதவிடாய் கழிவை சுத்தப்படுத்திக்கொள்ளவும் அந்த நாட்களில் பெண்கள் சுகாதாரமாக இருக்கவும் இன்று வசதிகள் வந்துவிட்டன. மனிதர்கள் நாம் எப்படி பிறக்கிறோம். வழக்கமாக வரும் மாதவிடாய் பெண் கர்ப்பமானவுடன் ஒன்பது மாதங்கள் வருவதில்லை. அந்த ஒன்பது மாதங்களின் மாதவிடாய் ரத்தத்தின் மொத்த வடிவமாகத்தான் நாம் மனிதராக உருமாறி இருக்கிறோம். அந்த தீட்டு ரத்தத்தில்தான் ஆணும் பெண்ணும் உருவாகிறார்கள். அப்படியென்றால் ஒவ்வொரு ஆணின் உடலிலும் குறைந்தது 9 மாதங்களின் மாதவிடாய் ரத்தம் உள்ளது. மாதவிடாய் தீட்டு என்றால் ஒன்பது மாதங்களின்  மாதவிடாய் ரத்தத்தில் உருவான ஆண் நிரந்தர தீட்டு.  

 

தமிழ்ச்சமூகம் என்பதே தாய் வழிச்சமூகம்தான். முருகனுக்கு அடுத்து கொற்றவைதான் இங்கு பெரிய கடவுளாகப் பார்க்கப்படுகிறார். எனவே அனைத்துச் சாதியினரும் அனைத்துப் பாலினத்தவர்களும் அர்ச்சகராகலாம் என்பது சரியானதே.