கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட கரோனா விபரீதம் போல ஆவின் பால்பண்ணையிலும் ஏற்படும் என அலறுகிறார்கள் அதன் பணியாளர்கள். கடந்த மாதம் சென்னையிலுள்ள மாதவரம் பால்பண்ணை ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை ஆவின் நிர்வாக உயரதிகாரிகள் மூடி மறைக்க முயற்சித்த நிலையில் அதனை நக்கீரன் இணையதளத்தில் அம்பலப்படுத்தினோம்.
மேலும், சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் துறையின் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ். ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ்.சுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயரதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதேசமயம், மாதவரம் பால்பண்ணையை முழுமையாக லாக் டவுன் செய்து, பால் பண்ணை மற்றும் பால் டேங்கர் லாரிகள் அனைத்தையும் மருத்துவரீதியாக சுத்தப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். தமிழக சுகாதார துறையின் அறிவுறுத்தல்களும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால், மாதவரம் பால்பண்ணையில் பரவிய தொற்று குறித்து போதிய அக்கறை காட்ட மறுத்ததுடன், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதிலும் உயரதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
இதன் விளைவு, தற்போது ஆவின் நிர்வாக தலைமை பொறுப்பில் உள்ள உயரதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்து, ஆவின் நிறுவன பணியாளர்கள் மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட தலைமை அதிகாரி சென்று வந்துள்ள அலுவலக பணியாளர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் ஆவின் பணியாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ‘’தமிழக ஆவின் நிறுவனத்துக்கு சென்னையில் மாதவரம், அம்பத்தூர், காக்களூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் பண்ணை இருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருக்கும் தலைமை அதிகாரி ஒருவருக்குத்தான் தற்போது கரோனா தாக்கியிருக்கிறது. மேற்கண்ட 4 பண்ணைகளில்தான் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் கொண்டு வரப்படும் பால், குளிரூட்டப்பட்டு பால் பாக்கெட்டுகளாக மாற்றப்படுகின்றன.
அவைகள் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கு மக்களுக்கு விநியோக்கிக்கப்படுகிறது. தினமும் சென்னையில் மட்டும் 15 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. அந்த வகையில் சுமார் 60 லட்சம் பேர் தினமும் ஆவின் பாலை பயன்படுத்துகிறார்கள். மக்களின் உணவு பொருளாக இருக்கும் பால் விசயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதுவும் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் கவனம் தேவை.
ஆனால், கடந்த மாதம் 2 பேருக்கு கரோனா தொற்று செய்யப்பட்ட சூழலில், மாதவரம் பால் பண்ணையை மூடுங்கள் என ஆவின் உயரதிகாரிகளுக்கு ஆவின் பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த யோசனையை குப்பையில் வீசிவிட்டனர். பால் பண்ணைகள் வழக்கம்போல் இயங்கின. பாதுக்காப்பற்ற தன்மை நிலவியது. ஒப்பந்த பணியாளர்களை மிரட்டி வேலை வாங்கினர். அவர்களில் பலர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேருக்கு இருந்த அந்த தொற்று மெல்ல பரவி சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று பரவி விட்டது. அதன்பிறகாவது ஆவின் நிர்வாகம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போதும் அக்கறை காட்டவில்லை.
மாதவரம் பால் பண்ணையை மூடினால் தாங்கள் செய்துள்ள தவறுகள் எல்லாம் அம்பலமாகி விடும் என நினைத்தே தேவையான மருத்துவ நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. அதன் விளைவு, தற்போது, ஆவினின் தலைமை அதிகாரிக்கே தொற்று தாக்கியிருக்கிறது. மேற்கண்ட 4 பால் பண்ணைகளுக்கும், நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்துக்கும் சம்மந்தப்பட்ட இணை நிர்வாக இயக்குநர் தினமும் வந்து போகிறவர் என்பதால் தற்போது அனைத்துப் பணியாளர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். கோயம்பேடு சந்தையில் ஏற்பட்டது போல ஒரு விபரீதம், ஆவின் பால் பண்ணைகள் மூலம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகளின் அலட்சியம், மக்களுக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் தொற்று பரவுமா? என சென்னைவாசிகள் பயப்படுவதில் அர்த்தமில்லாமல் இல்லை!‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள் ஆவின் பணியாளர்கள்.