Skip to main content

5 மாநிலத்தில் ஒன்றுகூட பாஜகவுக்கு இல்லையாம் – அட பாவமே..!

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
bjp fail

 

 

வடக்கில் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களும், தெற்கில் தெலங்கானாவும், வடகிழக்கில் மிஜோரமும் சட்டசட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளன.

 

இவற்றில் மிஜோரம் மட்டுமே காங்கிரஸ் வசம் இருக்கும் ஒரே மாநிலம். மற்ற நான்கில் தெலங்கானா மாநிலம் டிஆர்எஸ் கட்சியிடமும் மூன்று மாநிலங்கள் பாஜகவிடமும் இருக்கின்றன. 2013 ஆம் ஆண்டு இந்த மூன்று மாநிலத் தேர்தலிலும் மோடியின் பிரச்சாரத்தால்தான் பாஜக வெற்றி பெற்றதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி, அவருக்கு ஆதரவாக பில்டப் செய்யப்பட்டது.

 

ஆனால், மத்தியப்பிரதேசத்தில் அதற்கு முன்பும் பாஜக ஆட்சிதான் இருந்தது. ராஜஸ்தானில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதே வாடிக்கை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவே ஆட்சியில் இருந்தது என்கிற உண்மையை மறைத்து, மோடிக்காக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினார்கள்.

 

இப்போது, 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதே மூன்று மாநிலங்களும், மிஜோரம், தெலங்கானா மாநிலங்களும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளன.

 

bjp fail


 

இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று வெளியான கருத்துக் கணிப்புவரை, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், ராஜஸ்தானில் 150 இடங்கள் வரை அந்தக் கட்சிக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 10 முதல் 15 தொகுதிகள் மெஜாரிட்டியில் காங்கிரஸ் அரசு அமைக்கும் என்றும், மிஜோரமில் தொடர்ச்சியாக காங்கிரஸே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. சத்தீஸ்கரிலும், தெலங்கானாவிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

இன்று முதல் தேர்தல்களில் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்புகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நேற்று வெளியான சி வோட்டர் கருத்துக்கணிப்பே கடைசி ஆகும். பாஜக ஆதரவு மீடியாக்கள் என்று கருதப்படுபவை எடுத்த கருத்துக் கணிப்புகள்கூட காங்கிரஸ் வெற்றியை மறைக்க முடியாமல் தடுமாறும் நிலை உருவாகி இருக்கிறது.

 

சத்தீஸ்கரில் காங்கிரஸில் இருந்த வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய அஜித்ஜோகியும், பகுஜன் கட்சியும் வாக்குகளைப் பிரிப்பதால் பாஜக வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அங்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கே வாய்ப்பு இருக்கிறது. அதுபோல, தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கே வாய்ப்பு என்ற நிலை மாறியதற்கு, சந்திரபாபு நாயுடு, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்ததே காரணம் என்கிறார்கள்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் இந்த 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் நாடுமுழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த முடிவுகளே நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.