தி.மு.க.வுக்கு எதிரான 2 ஜி வழக்கின் மேல் முறையீட்டு வழக்கு தொடர்பில் பிரதமர் அலுவலகம் சீரியஸ் காட்டத் துவங்கியிருக்கிறது. பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ். கவனிக்க துவங்கியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை கடந்த 13-ந்தேதி தாக்கல் செய்திருக்கிறார் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின்.
2 ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2018-ல் மேல் முறையீடு செய்திருந்தன. சி.பி.ஐ. தரப்பின் வாதங்கள் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு நீண்ட மாதங்களாக கிடப்பில் இருந்தது. அதனைத்தான் தூசு தட்டத்துவங்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயராம் முன்பு இந்த அவசர மனுவை தாக்கல் செய்துள்ள சஞ்சய் ஜெயின், இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சேத்தி நவம்பர் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அதனால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். அதற்கேற்ப, வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரின் வாதங்களையும் செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும் என கோரியுள்ளார். கூடுதல் சொலிசிட்டர் சஞ்சய் ஜெயினின் இந்த அவசர மனு திடீர் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
இதற்கிடையே, நீதிபதி சேத்தியிடம் உள்ள மேல்முறையீட்டு வழக்கினை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் விரைவில் வரவிருக்கிறது. திமுகவுக்கு எதிரான 2 ஜி வழக்கில் செப்டம்பருக்குள் விசாரணையை முடித்து, நபம்பருக்குள் தீர்ப்பை வரவழைப்பதில் தீவிரம் காட்டுகிறது பாஜக!