2022 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை உலக அளவில் மக்களைத் திரும்பி பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல், ஆச்சரியப்படுத்திய நிகழ்வுகள் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களின் தொகுப்பு இது.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை வரவேற்போம்:
ஐ.நா. சபையானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு நோக்கத்தை மையக்கருத்தாகக் கொண்டு சர்வதேச ஆண்டாக அனுசரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியா கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்று ஐ.நா. பொது சபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானம் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறியதையொட்டி வரும் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாட முடிவு செய்து, ஐ.நா. சபை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சிறுதானியங்களின் முக்கியத்துவமும், சிறுதானிய உணவின் நன்மையும், அதன் மீதான விழிப்புணர்வும் ஏற்படும் வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்போதிருந்தே இந்தியா சிறுதானிய ஆண்டைக் கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தப் போது சிறுதானியங்கள் அடங்கிய பெட்டகம் ஒன்றை வழங்கியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரதமர் மோடியும் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் சிறுதானியங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசினார்.
சீன விமான விபத்து:
இந்த ஆண்டின் மிகப்பெரிய விமான விபத்தாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்சோ என்ற பகுதிக்கு 123 பயணிகள் உட்பட மொத்தம் 132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் மூலம் போயிங் 737 வகை விமானங்களின் செயல்பாட்டை உறுதி செய்ய இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் சிறிது காலம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போயிங் 737 விமான விபத்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகலும் புதிய பிரதமர் பதவி ஏற்பும்:
2018 ஆம் ஆண்டு முதல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்து வந்த இம்ரான் கான் மீது இருந்து வந்த மனக்கசப்பால் அவருடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி எதிர்க்கட்சியுடன் கூட்டணியில் இணைந்தன. இம்ரான் கானுக்கு எதிராக 24 எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கினர். அதனைத் தொடர்ந்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனைச் சந்திக்கும் முன்பே ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார்.
புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் ஆளுங்கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தார். அதன்படி பேரணி செல்லும் போது கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
பிரான்ஸ் அதிபர் தேர்தல்:
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் அதிபராக இருந்து வரும் இமானுவெல் மாக்ரோன் இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் யாரும் 50 சதவீத வாக்குகளை பெறாததால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
இதில் 58 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், மீண்டும் அந்நாட்டின் அதிபராக இமானுவெல் மாக்ரோன் தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட லீ பென் 48 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் அதிபராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவெல் மாக்ரோன் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நிறுத்தம்:
27 ஆண்டுகளாக சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை ஜூன் 15 ஆம் தேதியுடன் நிறுத்திக் கொண்டது. கூகுள் குரோம் போன்ற பல்வேறு இணையத் தேடுபொறிகள் வந்ததால் மக்கள் மத்தியில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மதிப்பு குறைந்து வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
90-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற தேடுபொறியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷின் ஷோ அபே படுகொலை:
ஜப்பானின் முன்னாள் பிரதமரும், லிபெரல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவருமான ஷின் ஷோ அபே கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அந்த நாட்டின் முன்னாள் கடற்படை வீரர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரின் கழுத்திலும் இடது மார்பிலும் என இரு குண்டுகள் பாய்ந்தன. 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை என மொத்தம் நான்கு முறை ஜப்பானின் பிரதமராக ஷின் ஷோ அபே இருந்துள்ளார். இச்சம்பவத்திற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
அச்சுறுத்திய குரங்கம்மை:
இந்த ஆண்டு மத்தியில் கொரோனா தொற்று குறைந்து உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், ஆப்பிரிக்காவில் முதன்முறையாக குரங்கம்மை கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல நாடுகளிலும் குரங்கம்மை வேகமாகப் பரவத் தொடங்கியது.
உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி வந்ததை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் ஜூலை மாதத்தில் சர்வதேச அவசர நிலையாக அறிவித்தது. இதன் மூலம் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாகக் கண்காணித்து குரங்கம்மை கட்டுக்குள் கொண்டு கொண்டுவரப்பட்டது.
இங்கிலாந்து ராணி மரணமும் புதிய மன்னர் பதவியேற்பும்:
ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து அரச வரலாற்றில் 70 ஆண்டுக்காலம் அரசியாக விளங்கியவர். 96 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மரணமடைந்தார். இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சிக்கட்டிலில் இருந்த பெருமையையும் தனது பதவிக்காலத்தில் 17 பிரதமர்களைச் சந்தித்தவர் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். வின்ஸ்டன் சர்ச்சில் முதல் லீஸ் டிரேஸ் வரை பிரதமர்களாக இவரிடம் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து இருந்தனர். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இவரின் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு போன்றோர் கலந்து கொண்டனர். இவரது மறைவைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் புதிய அரசராக இரண்டாம் எலிசபெத் மகனான 76 வயதாகும் சார்லஸ் பதவி ஏற்றார்.
இலங்கையும் அதன் பொருளாதாரப் பிரச்சனையும்:
முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை இந்த ஆண்டு இலங்கை சந்தித்தது. அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது கொரோனா பேரிடர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மூலம் வரக்கூடிய வருவாய் குறைந்ததாகக் கூறப்பட்டாலும் நாட்டில் நடைபெற்ற ஊழல், நிர்வாகத் திறமையின்மை, தொலைநோக்குப் பார்வையில்லாமை மற்றும் ஆட்சியில் நிலைத்த தன்மை இல்லாதது எனப் பல்வேறு காரணங்களும் இந்தப் பொருளாதாரப் பிரச்சனைக்குக் காரணியாக அமைந்தது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தை நோக்கி தஞ்சம் வர ஆரம்பித்தனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டின. இந்த சூழ்நிலையில் அங்குப் பெருமளவில் போராட்டங்கள் வெடித்தன. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுக் கைப்பற்றிய சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியது. தொடர்ந்து ஆட்சி மாற்றங்களும் அதிகார மாற்றங்களும் ஏற்பட்டன. முன்னாள் குடியரசு தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, அவரது மகன்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு அங்குப் போராட்டம் தீவிரமடைந்தது.
குறிப்பாக அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பித்துப்போகும் அளவுக்கு போராட்டம் தீவிரமானது.
ரஷ்யா - உக்ரைன் போர்:
இந்தாண்டின் ஆரம்பம் முதலே உலகம் முழுவதும் உள்ள மக்களை மிகவும் அச்சத்தில் இருக்கவைத்த சம்பவம் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்து வரும் போர் ஆகும். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இப்போர் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உலக தலைவர்கள் பலரும் ரஷ்யாவிற்கு எதிராக கடும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ராணுவத் தளவாடங்களை தொடர்ந்து வழங்கி உதவி வருகிறது. போரால் மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மருத்துவ மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரை வாங்கிய எலன் மாஸ்க்:
இந்தாண்டின் மத்தியில் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்த எலான் மஸ்க் பின்பு பல்வேறு காரணங்களைக் கூறி ட்விட்டரை வாங்கப் போவதாக இல்லை எனவும் அறிவித்தார். பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்ட மாஸ்க் ஒரு வழியாக ட்விட்டரை சமீபத்தில் வாங்கினார். ட்விட்டரை வாங்கிய கையோடு ட்விட்டரில் பணியாற்றிய பல்வேறு ஊழியர்களை பதவிநீக்கமும் செய்தார்.
அதோடு ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களையும் செய்தார். ப்ளூ டிக் போன்ற உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளுக்கு மாதாந்திர தொகை வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக அந்த முடிவில் இருந்தும் பின்வாங்கினார்.
ஹிஜாப் ஆடை கண்காணிப்புப் படையை நீக்கிய ஈரான் அரசு:
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்கச் சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டு, சிறப்புப் படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஹிஜாப் சர்ச்சைக்குக் காரணமான சிறப்புக் காவல் படையை நீக்கி ஈரான் அரசு உத்தரவிட்டது.
நோபல் பரிசு 2022:
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் கவனிக்கப்படும் விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் என ஆறு துறைகளில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இயற்பியல் விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப்கிளஸேர், ஆஸ்திரியாவின் அண்டன் செய்லின்சர் என மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஃபோட்டான்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக இந்தப் பரிசு அறிவிக்கபட்டது. வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கரோலின் பெர்டோஸ் மற்றும் டென்மார்க்கின் மார்டன் மெல்டால் ஆகிய மூவருக்கும் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ அர்த்தோகைனஸ் கெமிஸ்ட்ரி ஆராய்ச்சி பணிக்காக வழங்கப்பட்டது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு வழங்கப்பட்டது. மனிதனின் மரபணுக்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ். பேர்னான்க், டக்கலஸ் டபிள்யு டயமண்ட் மற்றும் பிலிப் ஹேட்ச் டிவிக் என மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளியான அலெஸ் பியாளியாட்ஸ்கிக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அஸ்ஸில் ஈராஸ்க்கு ‘எல் அகு பேஷன்’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.
இங்கிலாந்தை ஆளும் முதல் இந்திய வம்சாவளி:
இங்கிலாந்தின் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை இல்லை என அப்போது நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் ஜான்சன் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு, இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகளால் போரிஸ் ஜான்சன் பதவி விலகினார்.
அவர் பதவி விலகியபோது, ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமர் ஆவர் என எதிர்பார்க்கப்பட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றார். அவராலும் பொருளாதாரத்தைச் சீர்படுத்த முடியாததால் லிஸ் ட்ரஸ் தனது பதவியை 45 நாட்களில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இங்கிலாந்தின் பிரதமராக எவ்வித போட்டியும் இன்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி இங்கிலாந்தின் 57 வது பிரதமரானார்.
இவருக்கு இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்றுள்ள மூன்றாம் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரிஷி சுனக்கின் மூதாதையர்கள் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் ஆவர். இவர்கள் ஆப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். ரிஷி சுனக்கின் பெற்றோர் இங்கிலாந்துக்கு குடியேறினர். ரிஷி சுனக் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில் தான் என்றாலும் இவர் ஹிந்தி மற்றும் பஞ்சாபி போன்ற இந்திய மொழிகளையும் கற்றுள்ளார்.