ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயித்ததால் வட சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் தொகுதி தமிழகத்தின் வி.வி.ஐ.பி. தொகுதிகளில் ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடித்து சுயேட்சையாக வெற்றிபெற்றவர் அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். சிட்டிங் எம்.எல்.ஏ.வான தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் களமிறங்க தயக்கம் காட்டி வருகிறார்.
இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல், சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்திலிருந்த ஜெயலலிதா விடுதலையானதும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் ஜெ. வென்றார். அவரது ஆணைப்படி, தொகுதியின் பொறுப்பாளராக இருந்த வெற்றிவேல், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, ஜெ. மூலம் நிவர்த்திசெய்து, மக்களிடம் செல்வாக்குடன் இருந்தார்.
ஜெ. மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டபோது, சசிகலாவின் விசுவாசியாக இருந்த வெற்றிவேலின் செல்வாக்கும் களப்பணியும்தான், இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் நின்ற தினகரனை வெற்றிபெறச் செய்தது. ஆளுங்கட்சி பிறகு தங்கியது. எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு டெபாசிட் போனது.
கரோனா பெருந்தொற்றில் வெற்றிவேல் இறந்துவிட்டார். வெற்றிவேல் இல்லாததும், இடைத்தேர்தலின்போது 20 ரூபாய் டோக்கன் கொடுத்து உறுதியளித்ததை நிறைவேற்றாததும், கரோனா நெருக்கடி காலத்திலும் தொகுதிக்குள் எட்டிப் பார்க்காததும் தினகரன் மீது தொகுதிக்குள் கடும் அதிருப்தியாக மாறி இருக்கிறது. இதனால் மீண்டும் போட்டியிடத் தயக்கம் காட்டுகிறார் தினகரன். "முக்குலத்தோர் அடர்த்தியாக உள்ள தேனி மாவட்டத்துக்கு இந்தமுறை தாவிவிடலாம்' எனக் கூட்டிக்கழித்துக் கணக்குப் போடுகிறது அவரது தரப்பு.
தி.மு.க.வில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், தினகரனை எதிர்த்துப் போட்டியிட்ட மருதுகணேஷ் ஆகியோர் மீண்டும் சீட் கேட்டு மல்லுக் கட்டுகிறார்கள். இவர்களுக்குப் போட்டியாக, சீட் கேட்டு களமிறங்கியிருக்கிறார் வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எபினேசர். உதயநிதியின் ஆதரவும் சிபாரிசும் இவருக்கு அதிகமாக இருக்கிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர் இளைய அருணா, ராயபுரம் தொகுதியைக் குறி வைப்பதால் இத்தொகுதியில் அவர் களமிறங்கவில்லை.
அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் தனது உறவினரும், மா.செ.வுமான ராஜேஷுக்கு சீட் கொடுக்க ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லி தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் ராஜேஷ். ஆனால், மதுசூதனனின் ஜென்ம எதிரியான அமைச்சர் ஜெயக்குமார், ராஜேஷுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அ.தி.மு.க.வில் அண்மையில் இணைந்த காங்கிரசின் வடசென்னை மாவட்ட முன்னாள் தலைவர் ராயபுரம் மனோ மற்றும் நடிகை விந்தியா ஆகியோரை எடப்பாடியிடம் சிபாரிசு செய்திருக்கிறார் ஜெயக்குமார். ஆர்.கே.நகர் சீட்டுக்கு அ.தி.மு.கவில் பலத்த போட்டி நடக்கிறது.