sss

கரோனா ஊரடங்கிற்குப் பிறகு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த நாளன்றே எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதால், அவர்களின் தேர்ச்சியை பெருமளவு பாதிப்பதோடு, உளவியல் ரீதியிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஆசிரியர்கள் இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

Advertisment

தமிழகத்தில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வழக்கமாக மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடையும். இந்நிலையில், கரோனா நோய் தொற்று அபாயம் காரணமாக நடப்பு ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்குவதற்குள்ளாகவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மே 17ம் தேதி வரை இத்தடை உத்தரவு அமலில் உள்ளது.

Advertisment

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரும் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று செவ்வாய் அன்று (மே 12) தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜூன் 1 - மொழிப்பாடம், ஜூன் 3 - ஆங்கிலம், ஜூன் 5 - கணிதம், ஜூன் 6 - விருப்பப்பாடம், ஜூன் 8 - அறிவியல், ஜூன் 10 - சமூக அறிவியல், ஜூன் 12 - தொழிற்கல்வி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஊரடங்கு முடிந்து, நீண்ட காலத்திற்குப் பிறகு பள்ளிகள் திறந்த அன்றே பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்களின் தேர்ச்சியை பெருமளவு பாதிக்கும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

chandrasekar

இது தொடர்பாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் சந்திரசேகர் நம்மிடம் பேசினார்.

''ஊரடங்கு காரணமாக 50 நாள்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில், மாணவர்கள் பாடப்புத்தகங்களை தொட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. தன்முனைப்புடன் இருக்கும் வெகுசில மாணவர்களும்கூட நீண்டகாலம் பள்ளிகள் திறக்கப்படாதபோது அவர்களும் புத்தகத்தைதிறக்கும் மனநிலையில் இருந்து விலகி விடுகின்றனர்.

மேலும், விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் அதிகளவில் படிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் பல பெற்றோர்கள் வேலையும், வருவாயுமின்றி குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். அத்தகைய குடும்பச்சூழலில் இருந்து வரும் மாணவர்களால், எப்படி இந்த ஊரடங்கு காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தியிருக்க முடியும்?

எப்போதும்போல் ஜூன் 1ம் தேதி பள்ளிகளை அரசு திறக்கட்டும். அதன்பிறகு, மாணவர்களுக்கு 15 நாள் முதல் ஒரு மாதம் வரை தேர்வு தொடர்பாக புத்தாக்கப்பயிற்சி அளித்து, அவர்களை மனதளவில் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். அதன்பிறகு தேர்வுகளை நடத்துவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

சமூக விலகலுக்காக தேர்வு மையங்களை அதிகப்படுத்துவது நல்ல முடிவு என்றாலும், தேர்வுக்கூடத்தில் விடைத்தாள், வினாத்தாள் விநியோகத்தின்போதும், விடைத்தாளில் கையெழுத்து வாங்கும்போதும் ஆசிரியர்கள் மாணவர்களை நெருங்கித்தான் ஆக வேண்டியதிருக்கிறது. சமூக விலகலின்பேரில் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்றுதான் தேர்வர்களை கண்காணிக்க வேணடும் என்பதிலும் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேல், ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எஸ்எஸ்எல்சி மாணவர்கள், அடுத்து பதினோறாம் வகுப்பிலோ அல்லது டிப்ளமோ, ஐடிஐ போன்ற படிப்புகளில்தான் சேரப்போகின்றனர். அதனால் அவர்களுக்கு ஜூலை மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தினால் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும். அதற்குள் மாணவர்கள் மனதளவிலும் தேர்வுக்கு தயாராகி விடுவார்கள். அதை விடுத்து, ஜூன் மாத துவக்கத்திலேயே தேர்வு நடத்துவதன் மூலம் தேர்ச்சி விகிதம் பாதிப்பதோடு, மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்,'' என்கிறார் சந்திரசேகர்.

lal rk

சேலத்தைசேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி ஆர்.கே.லால் கூறுகையில், ''கரோனா தொற்று ஏறுமுகத்தில் இருக்கும் இந்த நேரத்தில், பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மத்திய தேர்வு வாரியம்கூட, பத்தாம் வகுப்பு தேர்வுகள் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. வேறு பல மாநிலங்களிலும் இது தொடர்பாக எந்த திட்டமிடலும் இல்லாதபோது, தமிழக அரசு மட்டும் முந்திக்கொண்டு தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது எந்த இலக்கை அடைவதற்காக எனதெரியவில்லை.

கரோனா தாக்குதல், அச்சம், நிச்சயமற்ற நிலை, பெற்றோர்களுக்கு வருவாய் இழப்பு போன்றவற்றின் ஊடாக தேர்வுகள் பற்றியே சிந்திக்க முடியாத நிலையில் மாணவர்கள் இருக்கின்றனர். இது, மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழு, ஒரு நிபுணர் குழுவை அமைத்து அதன் அடிப்படையில் உயர்கல்விக்கான தேர்வுகளை நடத்தலாம் என அறிவித்து இருக்கிறது. அதேபோல், தமிழக பள்ளிக்கல்வித்துறையும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அதன்படி முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.

''ஊரடங்கின்பேரில் பள்ளிகள் மூடப்பட்டதில் இருந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தேர்வுக்கான பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்தச் சூழலில், அரசு, தனியார் பள்ளி படிப்பில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இது, சமத்துவ தேர்வு முறைக்கு எதிரானது,'' என்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்து இருக்கிறது.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் எந்த ஒரு கலந்துரையாடலும் நடத்தாமல் திடுதிடுப்பென்று பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருப்பது, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை.