கடந்த ஆறு அத்தியாயமா வீரப்பன் காடு -மலைப் பகுதியில அன்றாடங்காய்ச்சிகளா வாழ்ந்துக்கிட்டிருந்த அப்பாவி பொண்டு, புள்ளைகள தமிழ்நாடு -கர்நாடகா ரெண்டு மாநில எஸ்.டி.எப்., வனச்சரகர்க எல்லாம் சேர்ந்து கும்மியடிச்சத அவங்க... அவங்க வாயாலேயே பேசுனத எழுத்தா பாத்தீங்க. சரி, இத்தனக் கொடும நடந்திருக்கு... எல்லாம் நடந்ததும் ஒரு பொம்பள ஆட்சியிலதான். அவங்க இத கண்டுக்கிட்டாங்களா... கண்டுக்கிடலியா....? கேள்வி வரும்ல.
ம்க்கும்... நல்லா கண்டுக்கிட்டாய்ங்க. பச்சைக்கொடி காட்டுனதே அவாளுதான். மலைமக்களுக்கு நேர்ந்த அத்தனக் கொடுமைகளுக்கும் ஜவாப்தாரி மேடம்... மைசூர் மகாராணி... அல்லி தர்பார் நடத்துன சாட்சாத் ஜெயலலிதாதான்.
அந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல. இத கேட்டா... ஒரு படவாவும் வாய் தொறக்கமாட்டான். ஏன்னா... அவன் வீட்டு பொம்பளைங்களுக்கு இந்த கதி நேரல்ல... நாசமா போவாய்ங்க... கொள்ளையில போவாய்ங்க... அவிய்ங்க பாம்பு கடிச்சுதான் சாவாய்ங்க, இல்ல பெரிய ஆக்ஸிடெண்டல செத்துப் போவாய்ங்க வயிறெரிஞ்சு சொல்றேன்... எத்தனக் கொடூரம் பண்ணியிருக்காங்க!
இந்தக் கொடுமைகள தட்டிக் கேட்ட, பழங்குடி மக்கள் சங்கம் சார்பா எங்க மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், சதாசிவா கமிஷன் ரிப்போர்ட் என்ன ஆச்சு... என்ன எழவுன்னு அவரே சொல்றாரு கேளுங்க...
""சுதந்திர இந்திய வரலாற்றில் ஆளும் அரசுகள் தங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு மாறாக ஆதிக்க சக்திகளுக்கும், சொத்துடமைதாரர்களுக்கும் சாதகமாக எளிய மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறையின் ஒரு பகுதியே அவர்களை சித்ரவதைகள் செய்து குரூர மனத்துடன் ரசிப்பது. சித்ரவதையின் பல வடிவங்கள் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல வடிவங்களில் நிகழ்த்தியிருக்கிற கொடுமைகளைச் சான்றுகளாக வரலாற்றில் படித்திருக்கிறோம்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அரசும், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும்... ஏன்? முதல் குடிமகனான ஜனாதிபதி, ஆளுநர்கள் அனைவருமே மக்கள் ஊழியர்கள்தான்.
ஐ.நா. மன்றத்தில் உலகளாவிய மனித உரிமை பிரகடனம், சித்ரவதையை ஒரு தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகவும், மனித குலமே அதனை வேரறுக்கவும் பறை சாற்றுகிறது. அதற்குப் பின்பு ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையிலும், குறிப்பாக சித்ரவதைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தின் உடன்படிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இந்திய சட்டங்களில் சித்ரவதை ஒரு தண்டிக்கக்கூடிய குற்றம் என இன்றுவரை அதனை சட்டமாக்கவில்லை. அதனால் காவல்துறை சுதந்திரத்திற்கு பிறகும், தொடர்ந்து எளிய மக்களை வதைக்கும், மிரட்டும் ஒரு அடக்குமுறை கருவியாகவே இன்னமும் நீடிக்கிறது.
ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு பிரகாஷ்சிங் -எதிர் -ஒன்றிய அரசு என்ற வழக்கிலும் அதனைத் தொடர்ந்து பல வழக்குகளிலும் காவல்துறை ஜனநாயகப்படுத்தப்பட அதனுடைய செயல்களுக்கு பொறுப்பு ஏற்படுத்த (ஆஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) பல வழிகாட்டும் உத்தரவுகளை பிறப்பித்தும், மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993, அதன் அங்கங்களான தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை பாதுகாப்பு நீதிமன்றங்கள் ஆகியவை தொடர்ந்து மனித உரிமையை காக்கிற சட்டபூர்வமான அமைப்புகளாக இல்லாமல் வெறும் நஷ்டஈடு மற்றும் அரசுக்கு சில பரிந்துரைகளை சிபாரிசு செய்யும் அமைப்பாக மட்டுமே இயங்கிவருகின்றன.
எனவே 75 ஆண்டுகள் கடந்தும் காவல்துறையின் அடக்குமுறை, அத்துமீறல்கள், மனிதாபிமானமற்ற சித்ரவதைக் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளன. அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக சில வழக்குகளில், சில காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படுகின்றனர்.
மனித உரிமை கலாச்சாரம் மிகுந்த சமத்துவ, சமூக நீதி கொண்ட அமைப்பை ஏற்படுத்த, சட்டத்தை காக்கவேண்டிய காவல்துறை தண்டிக்கிற அமைப்பாக தொடர்ந்து இயங்கிவருவதை தடுக்கவேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்டோரின் முதற்கண் கடமையாகும்.
சுதந்திரத்திற்கு பின் நடந்திருக்கிற பல காவல்நிலைய சித்ரவதைகள், கொலைகள் பலப்பல நடந்து இருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடக எல்லைகளில் வாழ்ந்த பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களை வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழக, கர்நாடக அரசுகள் நசுக்க ஆரம்பித்தன. அன்றைய அ.தி.மு.க. முதல்வர் செல்வி.ஜெயலதா, அவருடைய ஆதரவோடு 1991ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேவாரம் தலைமையிலான கூட்டு அதிரடிப்படை இரண்டு மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ‘ஒர்க்ஷாப்’ என்ற பெயரில் சித்ரவதை முகாம்களை அமைத்து நடத்தப்பட்ட என்கவுன்டர் எனப்படும் மோதல் படுகொலைகள், கொலைகள், மனித சித்ரவதைகள், உடல் மின்சாரம் கொடுத்து தாக்குதல், காணாமல் போனவர்கள், பாயல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
சித்ரவதை முகாம்களில் அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சித்ரவதைகள் கீழ்க்கண்டவாறு...
பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சி சித்ரவதைகள்
போலி மோதல் கொலைகள்
முகாம்களில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களை கட்டி வைத்து போதிய உணவு இன்றி, வெளிச்சம் இன்றி சித்ரவதை செய்தல்
தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பது
கால்களில் லாடம் கட்டி அடிப்பது
நகக்கணுக்களில் ஊசியால் குத்திக் கொடுமைப்படுத்துவது
பெண்களையும், ஆண்களையும் நிர்வாணமாக்கி உடலின் துவாரங்களில் மின்சார அதிர்ச்சி கொடுப்பது
வெளிக்காயம் தெரியாத வகையில் உள்ளுறுப்புகள் நாளாவட்டத்தில் சேதம் அடையும் வண்ணம் தாக்குவது
இந்த சித்ரவதை கொடுமைகளுக்கு எதிராக அன்றைக்கு முதல் குரல் கொடுத்த நக்கீரன் இதழ், பா.ம.க. தலைவர் ராமதாஸ், சோகோ அறக்கட்டளை, பழக்குடிமக்கள் சங்கம், மக்கள் கண்காணிப்பகம், பி.யூ.சி.எல்., சிக்ரம் போன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்களால் ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம் -காவல்துறை அதிகாரி நரசிம்மன் தலைமையில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணைக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று, பாதிக்கப்பட்டோரை, அவர்களது குடும்பத்தாரை, இயக்கங்களை விசாரித்தது. அதனில் பெரும் பங்காற்றிய இயக்கங்கள் தமிழ்நாடு பழங்குடி சங்கம் மற்றும் வழக்கறிஞர் ஹென்றி டிபென் தலைமையிலுள்ள மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை மற்றும் பி.யூ.சி.எல். சிக்ரம் ஆகிய அமைப்புகளாகும்.
பல தடைகளைத் தாண்டி இறுதியாக தேசிய மனித உரிமை ஆணையம் சதாசிவம் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 2004ம் ஆண்டு பாதிக்கப்பட்ட 89 பேர்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைக்கு இழப்பீடாக நஷ்டஈடு வழங்க தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டது. அப்போது இருந்த அரசுகள் அதனை நிறைவேற்றின.
இந்த கொடூரமான சித்ரவதைகளை செய்தது தேவாரம் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டு சிறப்பு அதிரடிப்படை ஓஞஒசப நடஊஈஒஆக பஆநஃ எஞதஈஊ என்பது வெள்ளிடை மலை. குற்றம் செய்தது சிறப்பு அதிரடிப்படை என்றால் அந்த குற்றம் செய்தவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் அதற்குப் பொறுப்பாக்கி, சிறப்பு புலனாய்வு செய்து தண்டிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு. ஆனால் சித்ரவதை செய்தார்கள் என்று ஒப்புக் கொண்டு இருக்கிற தேசிய மனித உரிமை ஆணையம் அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க இதுவரை சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு ஆணையிடவில்லை அல்லது நீதிமன்றத்தின் முன்னால் தனது அறிக்கையினை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.
சித்ரவதையால் பாதிக்கப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான பெண்கள், மலைவாழ் மக்கள் இன்றைக்கும் ரத்தமும், சதையுமாய் உயிருள்ள மாமிச பிண்டங்களாக நியாயம் கேட்டு முறையிட்டு கொண்டிருக்கிற கொடுமை... சொல்ல முடியாத துயரம் ஆகும்.''
(புழுதி பறக்கும்)