தலைநகரை அதிர வைத்திருக்கிறது அந்த இளைஞரின் கொலையும், அது சம்பந்தமாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும்.
சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான் (23). கடந்த 4 ஆம் தேதி காலை இவர் வில்லிவாக்கம் தாதங்குப்பம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்ற போது, ஒரு கும்பல் இவரை பின்தொடர்ந்து சென்றனர். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றதால், அதிர்ச்சியடைந்த ஷாஜகான் அங்கிருந்து தப்பி ஓடினார். வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்குள் குதித்து ஓடி , வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகில் உள்ள கால்வாய் மீது ஏறி ஷாஜகான் தப்பி செல்லும் போது அந்த கும்பல் மடக்கி பிடித்து, சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து, வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாஜகான் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இது கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன் விரோதத்தினால் நடந்த கொலை என்பது உறுதியானது.
இதுகுறித்து போலீசார் தரப்பில், ""ஷாஜகானும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் அணியினரும் அந்த மைதானத்தில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். இரு அணிகளுக்குள் யார் ஜெயிப்பது என்பதில் கடுமையான போட்டி நிலவி வந்துள்ளது. கடந்த வருடம் இவர்களுக்குள் நடைப்பெற்ற பந்தய போட்டி ஒன்றில் சண்முகம் அணியினர் தோல்வி அடைந்துள்ளனர். அப்பொழுது பந்தய பணத்தை சண்முகம் அணியினர் தராததால் அந்த அணியினரின் செல்போனை ஷாஜகான் அணியினர் எடுத்துகொண்டு வந்துள்ள னர். பணத்தை கொடுத்து விட்டு வாங்கி செல்லும் படி கூறி விட்டுசென்று விட்டனர்.
விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி, செல்போனை எடுத்து சென்ற கோபத்தில் இருந்த சண்முகம் அணியினர், ஷாஜகானின் நண்பரான பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பிரபு தரப்பால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சண்முகம், அஜீத், திவாகர் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும், ஷாஜகான் மற்றும் பிரபு இருவரும் சேர்ந்து சண்முகம், அஜீத், திவாகர் ஆகியோரை தாக்கியுள்ளனர். 2 வது முறையாக நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தில் ஷாஜகானும், பிரபுவும் சிறைக்கு சென்றனர்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்த இருவரும் சண்முகம், திவாகர் உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இது குறித்த தகவல் நுண்ணறிவு போலீசாரின் மூலம் காவல்துறையினருக்கு தெரியவந்து, ஷாஜகானை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா காரணமாக அவரை சிறையில் அடைக்க முடியாததால் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர் வில்லிவாக்கம் போலீசார்.
ஷாஜகான் நம்மை தீர்த்துகட்டும் முன்பு அவரை கொலை செய்ய திட்டமிட்ட சண்முகம் தரப்பினர், அந்த காலி மைதானத்தில் கஞ்சா மற்றும் மது அருந்தி விட்டு காத்திருந்த பொழுது, மைதானம் அருகே ஷாஜகான் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை விரட்டினர். தப்பி ஓடவும், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று ஷாஜகானை அந்த கும்பல் வெட்டியுள்ளது’’என்று சொல்லப்படுகிறது.
நண்பனை கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பாடி கலைவாணர் நகர் பகுதியில் பதுங்கி இருந்த ஷாஜகானின் கூட்டாளிகளான வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஷாம், பிரபு, பிரகாஷ், பார்த்திபன், ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த வாஜ்பாய், மின்ட் பகுதியை சேர்ந்த சந்தோஷ், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரவின்குமார், ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகிய எட்டு பேரையும் ஜெ.ஜெ. நகர் போலீசார் உதவியுடன் பிடித்தனர் வில்லிவாக்கம் போலீசார். அவர்களிடம் இருந்த அரிவாள், கத்தி, பெட்ரோல் பாம் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். ஷாஜகானை கொன்ற வழக்கில், சண்முகம் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்முகம் தரப்பினர் கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இல்லாதவர்கள் ஆனால், சிறையில் இருந்த பொழுது பிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளியான அகரம் கதிரின் பழக்கம் ஏற்பட்டு அவன் கொடுத்த தைரியத்திலும், போதை பழக்கத்தினாலும்தான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள்’’என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
வில்லிவாக்கம் பகுதியில் இளையோரிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதாகவும், நடந்த சம்பவத்தில் 3 சிறுவர்கள் உட்பட 16 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கஞ்சா போதை பழக்கத்தின் தீவிரத்தை உணர்த்துவதாகவும் அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
-அ.அருண்பாண்டியன்