சென்னை தாம்பரத்தை அடுத்த வரதராஜ புரம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஏனோஸ் நிக்கோதம்- சுனிதாதேவி தம்பதிக்கு டார்வின் என்ற மகனும், ஸ்டெபி என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் வீட்டில் குடியேறிய அரசனூ ரைச் சேர்ந்த ராஜ்மோகன், ஸ்டெபியை காதல் வலையில் வீழ்த்தினார். ஸ்டெபி யின் தாயார் சுனிதாதேவியிடம் ராஜ் மோகன் பெண் கேட்க, அதற்கு அவரோ "நாங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த கிறிஸ் தவ குடும்பம், நீங்களோ மாற்றுச் சமூகத்தை சேர்ந்த இந்துக் குடும்பம். ஒத்துப்போகாது'' என்று மறுத்திருக்கிறார். ஸ்டெபியின் வற்புறுத்த லால், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி திருமணம் நடந்தது.

tt

ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த மே மாதம் 3-ஆம் தேதி அதிகாலை ஸ்டெபி மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டெபியின் அண்ணன் டார்வின் நம்மிடம், "தங்கை ஸ்டெபி காதல் விவகாரம் தெரிந்ததும், ராஜ்மோகன் பற்றி அவனுடைய சொந்த ஊரில் விசாரித்தோம். அவனைப் பற்றி தவறாகத்தான் தகவல் கிடைத்தது. தங்கையின் வற்புறுத்தலாலே திருமணத்திற்கு சம்மதித்தோம்.

40 சவரன் தங்க நகையும், ராஜ்மோக னுக்கு 5 சவரன் தங்க நகையும், பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவுசெய்து பைக், வீட்டு உபயோகப் பொருட்களும் வாங்கிக் கொடுத்தோம்.போதாதென்று ராஜ் மோகன் குடும்பத்தினர் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு ரூ.2.5லட்சம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.5 லட்சம் என வரதட்சணையாக கேட்டு வாங்கினார்கள்.

Advertisment

இதே ஏரியாவுல வாடகை வீட்டுல தங்கவெச்சோம். என் தங்கை தங்க நகைய சிட்டி யூனியன் பேங்க்ல அடமானம் வைச்சிட்டான். 10 லட்சம் ரூபாய் வேணும்னு தங்கைய குடும்பமே டார்ச்சர் பண்ணாங்க. அடிக்கடி சண்டை வரும். தங்கைய அடிப்பாங்க. எல்லாத்தையும் எங்கம்மாகிட்ட சொல்லி அழுவா. எம்.பி.ஏ. முடிச்சிட்டு சதர்லேண்டு ஐ.டி. கம்பெனில வேலைசெஞ்சா. மாதச் சம்பளத்தையும் அவனே வாங்கிடுவான். அவ ஏ.டி.எம். கார்டு அவன் கிட்டதான் இருக்கும்.

2024, டிசம்பர் 29-ஆம் தேதி தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துச்சு. குழந்தைக்கு சீர்வரிசை கேட்க, 4 சவரன் தங்கநகை, வெள்ளிப் பொருட்கள், ரெண்டு லட்சம் பணமும் கொடுத்தோம். அது பத்தலைனு ராஜ்மோகன், மைத்துனர் கார்த்திக்ராஜா, மாமியார் சசிகலா, மாமனார் திருஞானம் என் தங்கைய அடிச்சிருக் காங்க. மறுநாள் அதிகாலை 3:45 மணிக்கு கார்த்திக்ராஜா போன்பண்ணி ஸ்டெபிக்குss உடம்பு சரியில்லன்னு கூப்பிட்டார். அங்க ஸ்டெபி பேச்சுமூச்சில்லாம கிடந்தா. உடல் முழுக்க காயம்... வாய்ல நுரை வந்திருந்துச்சு. அருகிலிருக்கும் அன்னை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம். டாக்டர் அவள் ஏற்கனவே இறந்துட்டதா சொன்னாங்க.

ராஜ்மோகனிடம் என் தங்கைக்கு என்ன நடந்துச்சுன்னு பலமுறை கேட்டும் சரியா பதில் சொல்லலை. தங்கை சாவில் மர்மம் உள்ளது என்று புகாரளித்தும் மணிமங்கலம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பெயரளவில் எஃப்.ஐ.ஆர். போட்டு பிரேத பரிசோதனை முடித்து தங்கை உடலை எங்களிடம் ஒப்ப டைத்தனர். ராஜ்மோகன் குடும்பத்தினரிடம் கேட்டபோது விஷமருந்தியதாகக் கூறினார்கள். அவள் ஒருபோதும் தற்கொலை செய்யும் கோழையல்ல. அவள் சாவில் மர்மம் உள்ளது என்று தாம்பரம் கமிஷனரிடம் புகாரளித்தும் பலனில்லை'' என்றார் கண்ணீருடன்.

Advertisment

மணிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ராமதாஸைத் தொடர்பு கொண்டோம். சரியான பதில் தராத காரணத்தால், ஆய்வாளர் டெல்லியைத் தொடர்புகொண்டோம். அவரோ, "சம்பவம் நடந்தபோது கடந்த மாதம் இங்கு பணியிலிருந்த ஆய்வாளர் அசோக்கைக் கேளுங்க''’என்றார். அவரோ, "இந்த கேஸ் நான் பார்க்கவில்லை' என்று முடித்துக்கொண்டார். கடைசியாக மணிமங்கலம் உதவி ஆணையர் சுந்தரைத் தொடர்புகொண்டோம். அவரும் மழுப்பலாகப் பதிலளித்தார்.

எங்கோ தவறு நடக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டு ஸ்டெபி யின் பிரேத பரிசோதனை அறிக்கையை எடுத்துக் கொண்டு சட்டம் சார்ந்த மருத்துவத்துறை மருத்துவ ரான டாக்டர் செல்வக் குமாரிடம் கேட்டோம். "ஸ்டெபியின் கழுத்தில் ஒன்பது இடத்தில் நகக் கீறல்கள், கழுத்தை கையால் இறுக்கியதற்கான பிறை நிலா போன்ற ரணம், இடது கழுத்தில் கன்றிய காயம், இடது முன்னங்கையில் 3 பெரிய சிராய்ப்பு, முன்கழுத்து காலர் எலும்பு சேருமிடத்தில் எலும்பு முறிவு, இடதுபுறம் விலா எலும்பு நான்கு உடைந்துள் ளது, இது இதயத்தைக் காயப்படுத்தியுள்ளது. தலைமேல் வலப்பக்கத்தில் பலத்த கன்றிய காயம், (சுவரில் பலமாக முட்டியிருக்கலாம்) மூளை பலத்த சேதமடைந்துள்ளது. கழுத்தை நெறித்து கொலை நடந்திருக்கலாம், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். இது கொலைதான். அதற்கான எல்லாக்கூறு களும் உள்ளது''’என்றார்.

ஆனால் தாம்பரம் போலீஸோ அலட்சிய மாக உள்ளது. "பிரேத பரிசோதனை அறிக்கை கொலைதான் என்று கூறியிருந்தும், ஏன் குற்றவாளிகள் உடனே கைதுசெய்யப்பட வில்லை? ஆர்.டி.ஓ. விசாரணை ஒருமாத காலம் கடந்து நடத்தப்படுவதேன்? கொலை நடந்த வீட்டுச் சாவியை சந்தேகத்துக்குரியவர்களிடமே போலீஸார் வழங்கியது ஏன்? கொலைச் சம்பவம் நடந்த வீட்டிலிருந்த நான்கு பேரில் ஸ்டெபியின் கணவர் ராஜ்மோகன் மட்டும் கைது செய்யப்பட்டது ஏன்?'

பல கேள்விகள் இந்த விவகாரத்தில் விடையில்லாமலே உள்ளது.