stalin100

வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறது ஸ்டாலின் அரசு. இந்நிலையில், விவசாயிகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவரும் விவசாய சங்க பிரதிநிதியுமான தஞ்சை வழக்கறிஞர் ஜீவகுமார்... "தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரசின் 100 நாள் சாதனையில் பெரிய சாதனையாக வரவேற்கிறோம். அதே நேரத்தில் குறுவை, சம்பா என்ற விவசாய பருவத்தை வடமாநில சொற்களான காரிப், ராசி என்றே இன்னும் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொற்கள் விவசாயிகளுக்கு புரியாத மொழியில் இருப்பதை மாற்றி குறுவை, சம்பா சாகுபடி பருவம் என்றே மாற்ற வேண்டும். அர்ச்சனைக்கு தமிழில் முக்கியத்துவம் கொடுத்ததுபோல, வேளாண்மை சொற்களுக்கும் தமிழ் பெயர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

formers

மேலும் பயிர் சாகுபடிக்கான விவசாயிகளின் பயிர் காப்பீட்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்காக தலா 45% இருந்தது. ஆனால் மத்திய அரசு அதை 25 சதவீதமாக குறைத்துக் கொண்டது. இது குறித்து, காப்பீட்டு காலம் முடியும் ஒருநாள் முன்புதான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கார் முதலமைச்சர். அதாவது ஜூலை 31-ந் தேதி காலம் முடிகிறது ஆனால் 29-ந் தேதிதான் கடிதம் எழுதியிருக்கிறார். மத்திய அரசிடம் நமக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும். மேலும் கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவற்றை கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது கடைமடை வரை தண்ணீர் சரியாக போகவில்லை. அதனால் ஒரத்தநாட்டுக்கு தெற்கே பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவிப்பதை தவிர்க்க கண்காணிப்பு குழு அமைத்து சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விவசாய மின் மோட்டார்களுக்கான மும்முனை மின்சாரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ஆழ்குழாய் பாசன விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் தட்கலில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனே மின்சாரம் கிடைத்தால் நல்லது. மின்தடையை போக்க வேண்டும். அதேபோல சரியான நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கச் செய்யவேண்டும். இதைவிட முக்கியம் மேகதாட்டு அணை கட்டக்கூடாது என்று போடப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவேண்டும். அப்போதுதான் நீதியை விரைவில் பெறமுடியும்'' என்றார்.

Advertisment

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திய குழு உறுப்பினர் மு.மாதவன்... "விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்ற முதல்வரின் அறிவிப்பும், விவசாயத்திற்கான தனி பட்ஜெட் என்பதையும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் விவ சாயிகள் தொடர்பாக விரும்பத்தகாத செயல்களில் அதிகாரிகளும், ssதி.மு.க.வினரும் ஈடுபடத் தொடங்கியுள்ளதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும். புதுக் கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி தாலுகாவில் கல்லணை கடைமடை பாசனத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. இது இல்லாமல் ஆழ்குழாய் பாசனமும் உள்ளது. ஆனால் இந்தப் பகுதிக்கு தமிழக அரசின் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்காதது வேதனை அளிக்கிறது. மேலும் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 99 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்தார்கள். ஆனால் 20 நாட்களுக்கு முன்பே கொள்முதல் நிறுத்தப்பட்டதால் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களை நடத்தி கொள்முதல் செய்ய வைத்தனர்.

அந்த நேரத்தில் மழை பெய்ததால் கொள்முதல் நிறுத்தப்பட்டு வாங்கிய நெல்லை குடோன்களுக்கு மாற்றுவதாக கூறி மீண்டும் கொள்முதல் நிறுத்தியபோது, ஒவ்வொரு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் அடுக்கியும் குவித்தும் வைக்கப் பட்டிருந்தது. ஆனால் இப்போதுவரை கொள்முதல் செய்யவில்லை. காரணம் கேட்டால் 3-ந் தேதியோடு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டது. இப்போது கொள்முதல் நிலையங்களில் இருப்பது வியாபாரிகளின் நெல் என்று கூறி தவிர்க்கிறார்கள். இதனால் திங்கள்கிழமை ஆலங்குடி தாலுகா நெடுவாசல், அணவயல் கிராமங்களில் விவசாயிகள் நெல்லை சாலைகளில் கொட்டி மறியல் போராட்டத் திலும் ஈடுபட்டனர்.

அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் தான் வியாபாரிகளிடம் விவசாயி கள் குறைந்த விலைக்கு விற்கும் அவலமே ஏற்படுகிறது. இப்போதும் கொள்முதல் செய்யவில்லை என்றால் மீண்டும் விவசாயிகள் குறைந்த விலைக்குதான் விற்க வேண்டும். அதனால் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவில் அதிகமாக நெல் விளையும் பகுதியில் இல்லாமல் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி தி.மு.க. ஒ.செ.க்களை நியமித்திருப்பது வேதனையளிக்கிறது. மேலும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை தமிழக அரசு வலுவாக எதிர்க்கவேண்டும். டெல்லியில் போராடும் விவசாயி களுக்கு துணையாக தமிழகஅரசு நிற்கவேண்டும்'' என்றார்.

Advertisment