தமிழகத்தையே உலுக்கியெடுத்தபடி இருக்கிறது அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம். இதனை மையப்படுத்தி தி.மு.க. அரசுக்கு எதிராக, "யார் அந்த சார்?' என்கிற கேள்வியை தங்களின் விமர்சன யுக்தியாக முன்னெடுத்தன அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
கடந்த 16 நாட்களாக இந்த விவகாரத்தில் பதில் சொல்லாமல் தவிர்த்துவந்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் பதிலடி தந்திருக்கிறார்.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் (08-01-25) பாலியல் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்திருந்த கவனஈர்ப்புத் தீர்மானத்தை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டார் சபாநாயகர் அப்பாவு. யார் அந்த சார்? எனும் பேட்ஜை குத்திக்கொண்டும், டங்ஸ்டன் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகக் கவசம் அணிந்தும் சட்டப்பேரவைக்கு வந்திருந் தனர் அ.தி.மு.க.வினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி சபைக்கு வரவில்லை. கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், ஆளுநர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
தமிழக வாழ் வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசும்போது, "பாலியல் விவகாரத்தில் அடிபடும், "யார் அந்த சார்?' என்கிற கேள்விக்கு பதில் தேவை. நடந்த வன்கொடுமைக்கு முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் எப்படி பொறுப்பேற்க வேண்டுமோ அதற்கு இணையான பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. பல்கலையில் துணைவேந்தர் இல்லை என்பதால், மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு பல்கலையின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் மௌனம் சாதிக்கிறார். வாய்திறக்க மறுக்கிறார். ஞானசேகரன் சொன்ன சார் யார் என்பதை ஆளுநர் மாளிகை கூற வேண்டும். தமிழ்நாட்டின் மீது பகை உணர்ச்சியுடன் இருக்கும் ஆளுநர், சர்வாதிகாரியாக நடந்துகொள்கிறார். அவருடைய செயலில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது''’என்றார் ஆவேசமாக. இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் மாரிமுத்து, "பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், இதில் பலரும் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்''’என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச்செல்வன் பேசும்போது, "கிடைத்த சில தடயங்களை வைத்து 24 மணி நேரத்தில் குற்ற வாளியை கைது செய்திருப்பது ஆறுதல் அளிக் கிறது. ஆனால், குற்றவாளி, யாரோ ஒருவரிடம் பேசியதாக சொல்லப்படுவது அரசியலாக்கப் பட்டுள்ளது. ஆளுநர் மூலம் தமிழக கல்விக் கட்டமைப்பு மீது மோசமான தாக்குதல் நடத்தப்படுகிறது''’என்றார்.
பா.ஜ.க.வின் எம்.ஆர்.காந்தி பேசும்போது, "மாணவிகளின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். நடந்த பாலியல் சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்''’என்றார்.
பா.ம.க. ஜி.கே.மணி பேசும்போது, "மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சாதாரண ஒரு நிகழ்வாக மக்கள் பார்க்கவில்லை. ஒரு அதிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சம்பவம். குற்றவாளி கைது செய்யப்பட்டிருக் கிறார், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், இது போதாது. குற்றவாளியின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அரசு கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க பா.ம.க. சார்பில் போராடிய சௌமியா அன்பு மணியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, "நடந்த சம்பவத்தை மனித நேயமுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை வாக்கு வங்கி அரசியலாக்கி சில கட்சிகள் பேசுவதுதான் கொடு மையாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டி லுள்ள தேசிய தகவல் மையம் மூலமே எஃப்.ஐ.ஆர். கசிந்துள்ளது. குற்றவாளி யாருடன் பேசினார்? என்ற கேள்வி கேட்கிறீர்கள். தொலைதொடர்புத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது. குற்றவாளி யாரிடம் பேசினார்னு பா.ஜ.க.வினர் வெளியிடலாமே! தமிழகத்தில் மனுநீதிச்சோழன் ஆட்சி நடக் கிறது. "தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்ட முதலமைச்சர், நம்முடைய முத லமைச்சர் இல்லை'’என்றபோது, எடப்பாடியை குற்றம்சாட்டியதை அ.தி.மு.க.வின் சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. ஆர்.பி.உதயகுமார், "ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என தகவல் வருகிறது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்ததாக சென்னை கமிஷனர் சொல்கிறார். அதற்கு முரணாக, துறை அமைச்சரின் பதில் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பில் இந்த அரசு அலட்சியமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில், சார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. "யார் அந்த சார்?' என்பதில் ஆளுங்கட்சியின் நிலைப்பாடு என்ன? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவே போராடுகிறோம். ஆனால், போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது காவல்துறை. உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை அ.தி.மு.க. போராடும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை என்றாகிவிட்டது''’என்றார்.
எதிர்க்கட்சிகளின் இந்த பேச்சுக்களை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. "கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது' என சபாநாயகர் அறிவித்தவுடனேயே, அதுவரை ஒளி பரப்பப்பட்டு வந்த நேரலையைத் துண்டித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இறுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை மிகக்கொடூரம். அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில், உண்மையான அக்கறையோடு உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். குற்றவாளியைக் கைது செய்யாமல் விட்டிருந்தாலோ, காப்பாற்றப் பட்டாலோ, அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரங்களில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும், அரசைக் குறைசெல்வது அரசியல் ஆதாயத்திற்கானது. எஃப்.ஐ.ஆர். வெளி யானது குறித்துக் எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள். அதற்கு காரணம், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம்தான். காவல்துறை சுட்டிக் காட்டியவுடன் அது சரிசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்படும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும். "யார் அந்த சார்?' என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கின்றனர். உண்மையில் இதற்கு உங்களிடம் ஆதாரம் இருந் தால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம். யார், தடுக்கப்போகிறார்கள்? இதை விட்டுவிட்டு, வீண் விளம்பரத்துக்காக, அரசியல் லாபங்களுக்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம். இந்த அரசைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும். ஆனால், நடந்த சம்பவத்தை வைத்து பெண் களுக்குப் பாதுகாப்பே இல்லை என்பதுபோல ஒரு சதித் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். இது மக்களிடம் எடுபடாது.
பெண்களின் பாதுகாவலர்கள் போல, மனசாட்சியே இல்லாமல் பேசுபவர்கள்... கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந் தது என நினைத்துப் பார்க்கவேண்டும். பொள் ளாச்சியில் நடந்தது ஒரு பெண் சம்மந்தப்பட்ட பாலியல் குற்றமல்ல; பல பெண்களுக்கு 2 வருடங் களாக வன்கொடுமைகள் நடந்துள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லோரையும் விடுவித்துவிட்டனர். பாதிக்கப் பட்ட பெண்ணின் புகாரை, குற்றம்சாட்டப்பட்ட வரிடமே கொடுத்துவிட்டனர். இதுதான் அன்றைய சார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சணம்.
சி.பி.ஐ.க்கு வழக்கு போன பிறகுதான் உண்மையெல்லாம் வெளிவந்தது. பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அ.தி.மு.க. பிரமுகர்களால் நடத்தப்பட்டது என சி.பி.ஐ. தெளிவாகச் சொல்லியிருக்கிறது''’என்று முதல்வர் குற்றம்சாட்டியதும் இருக்கையை விட்டு எழுந்த அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறே வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "அ.தி.மு.க.வினரை காப்பாற்றத்தான் செயல்பட்ட னர். பொல்லாத ஆட்சிக்கு சாட்சி பொள்ளாச்சி. பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார் களெல்லாம் பேட்ஜ் அணிந்து உட்கார்ந்தவர்கள், பாதியிலேயே வெளியேறிவிட்டனர். "யார் சார்?' என கேட்கிறார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.க.வை பார்த்து என்னால் கேட்கமுடியும். பொள்ளாச்சி வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவே 12 நாட்கள் ஆனது. ஆனால், சென்னை வழக்கில் புகார் கொடுத்த உடனே எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க.காரர் அல்ல; தி.மு.க. ஆதரவாளர். அதை நான் மறுக்கவில்லை. அமைச்சர்களோடு அர சியல்வாதிகளோடு அவர் படம் எடுத்திருக்கலாம், அது தவறில்லை. தி.மு.க.வினராகவே இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது''’என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி தந்தார்.
"சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வினருக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்பதற் காகத்தான் இந்த விவகாரத்தில் 2 வாரங்களாக மௌனம் காத்தார் முதல்வர்'’என்கின்றனர் தி.மு.க.வினர்.