rahul

""ஹலோ தலைவரே, தமிழகம் தொடங்கிவைத்த நீட் எதிர்ப்புணர்வு, இப்ப வட மாநிலங்களிலும் பெரிய அளவில் வலுக்கத்தொடங்கியிருக்கு.''’’

Advertisment

""ஆமாம்பா, மாணவ -மாணவிகளின் உணர்வையும், பெற்றோர்களின் தவிப்பையும் புரிந்துகொண்டு நீட்டுக்கு முதன்முதலில் சிவப்புக்கொடி காட்டியது தி.மு.க.தான் என்பதை யாராலும் மறக்க முடியாதே!''’’

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, மாணவ -மாணவிகளின் மருத்துவக் கனவை சிதறடிப்பதோடு, அவர்களின் சுயமரியாதையையும் பாதிக்கும் ஒன்றாக நீட் இருக்குன்னு முதன்முதலில் இந்தப் பிரச்சினையை தி.மு.க.தான் கையில் எடுத்தது. பிறகு தி.மு.க. ஆட்சி பீடத்தில் ஏறியதும் நீட்டுக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வே குழறுபடியானதுன்னு தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உணர்த்தும் வகையில் கேள்வித்தாள் கசிதல், விடைத்தாள் திருத்தத்தத்தில் மோசடின்னு இப்ப சகல வில்லங்க விவகாரங்களும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டேயிருக்கின்றன. மேலும், நீட் தேர்வில் கருணை அடிப்படையில் 1563 பேருக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதைத் திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பதும், நீட்டில் இந்திய அளவில் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றதும், அதிலும் இதில் 6 பேர் ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வெழுதியவர்கள் என்பதும், அந்த நீட் எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்துகின்றன.''’’

""நீட்டுக்கு எதிரான வழக்குகளும் குவிந்துவருகிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, உ.பி. மாணவி ஒருவர், தனது விடைத்தாள் கிழிந்தததைக் காரணம் காட்டி, தனக்கான மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறார். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை எதிர்த்து தமிழக மாணவி ஒருவரும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானே, நீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான். அது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதன்முதலில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தேசிய தேர்வு முகமையிலுள்ள குறைகள் அனைத்தும் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டு அதனை மேம்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மறுதேர்வு எழுதவேண்டுமென்றும், இல்லையென்றால் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுமென்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம், அந்தத் தேர்வை நாங்களே நடத்திக்கொள்கிறோம் என்று தனி ஆவர்த்தனக் குரல் எழுப்பி வருகிறது. அதோடு, பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்கள் உட்பட பலவும் நீட்டை ரத்து செய்யவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன. எனவே, இந்த நீட்டுக்கு எதிரான சூறாவளி, மோடி தலைமையிலான ஒன்றிய அரசை பெரிதும் அலைக்கழிக்கத் தொடங்கியிருக்கு. இந்நிலையில் நீட் தேர்வினால் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவேன் என்றும் ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். நீட் விவகாரத்தை ராகுல் கையிலெடுத்திருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.''’’

""நீட்டைப் போலவே மின்னணு ஓட்டு எந்திரம் குறித்த சர்ச்சையும் வீரியம் பெற்றிருக்கிறதே?''’’

""மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை செல்போன்கள் மூலமே ஹேக் செய்யமுடியும். அதனால் அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்ப, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மும்பை வடமேற்கு தொகுதி பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஹேக் செய்யப்பட்டதால் பெற்ற வெற்றி என அங்குள்ள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை பா.ஜ.க. தரப்பு மறுத்த நிலையில், மீண்டும் எலான் மஸ்க், "அமெரிக்கத் தேர்தலின்போதே இது தொடர்பான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன' என்று தனது வாதத்திற்கு அழுத்தம் கொடுத்தும் திகைக்க வைத்திருக்கிறார்.''’’

""ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுமேடை என்றும் பாராமல், முன்னாள் கவர்னர் தமிழிசையை, ஒற்றை விரலைக் காட்டி கண்டிக்கும்விதமாக நடந்துகொண்டது, தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் நிர்மலா சீதாராமன் விவகாரம் தொடர்பாகத்தான் அப்படி ஒரு கண்டிப்பு சம்பவமே நடந்தது என்கிறது, பா.ஜ.க.வின் சீனியர்கள் தரப்பு. அதாவது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பற்றி முன்னாள் கவர்னரான தமிழிசை அவதூறாகப் பேசுவதாக, தமிழக பா.ஜ.க.வின் மாநில செயலாளராக இருக்கும் எஸ்.ஜி.சூர்யா, நிர்மலா சீதாராமனிடமே தெரிவித்தாராம். இதில் வேதனைப்பட்ட நிர்மலா சீதாராமன், இதுகுறித்து அமித்ஷாவிடம் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையைப் பார்த்ததும், இது குறித்துதான் அவரை அருகில் அழைத்து, ’இப்படி எல்லாமா பேசுவது?’ என அமித்ஷா கண்டித்தாராம். இந்த விவகாரத்தில் அமித்ஷாவுக்கு எதிராக தமிழக நாடார் சமூக மக்கள் காட்டிவரும் எதிர்வினைகளும் அமித்ஷா கவனத்துக்கும் போயிருக்கிறதாம்.''’’

""அதற்கு அமித்ஷாவின் ரியாக்ஷன் என்னவாம்?''

“""விவகாரம் பெரிதானதைக் கண்ட அமித்ஷா, தமிழிசை விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? என்று தீர விசாரித்து ரிப்போர்ட் தரும்படி, ஒன்றிய உளவுத்துறைக்கும், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டிக்கும் உத்தரவிட்டாராம். அதன்படி, இந்த இரண்டு தரப்பிலிருந்தும் அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் போயிருக்கிறதாம். அவற்றில், நிர்மலா சீதாராமனைப் பற்றி தமிழிசை எந்த இடத்திலும் யாரிடமும் தவறாகப் பேசவில்லை என்றும். அப்படி பேசியதாக நிர்மலா சீதாராமனுக்கு கொடுக்கப்பட்ட தகவல் பொய்யானது என்றும், அந்த ரிப்போர்ட்டுகளில் சொல்லப்பட்டதோடு, அமித்ஷாவுக்கு எதிரான போஸ்டர் விவகாரத்திலும் தமிழிசைக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் ஒரே மாதிரியாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதைப்பார்த்த அமித்ஷா, சரியாக விசாரிக்காமலே தமிழிசையை மேடையில் பலர் பார்க்கக் கண்டித்துவிட்டோமே என்று அப்-செட் ஆகிவிட்டாராம். இதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகியை தமிழிசை வீட்டுக்கு அனுப்பி, அவரை அமித்ஷா சமாதானப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.''’’

""இந்த விவகாரத்தில் மாநில பா.ஜ.க. நிர்வாகியின் பெயரும் வில்லங்கமாக அடிபடுகிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, இந்த நேரத்தில் தமிழிசையோ, அமித்ஷாவைத் தொடர்புகொண்டு, நீங்கள் அனுப்பிவைத்த அந்த மாநில நிர்வாகியே தனது வார்ரூம் ஆட்கள் மூலம் என்னைப் பற்றி கண்டபடி விமர்சித்தார் என்று வருந்தினாராம். உடனே அமித்ஷா இது குறித்து விளக்கம் கேட்க... அந்த மாநில நிர்வாகியோ, தமிழிசை விவகாரத்தில் உங்களுக்கு எதிராகவும் தமிழிசைக்கு ஆதரவாகவும், நம் கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் தன் கருத்துகளை வைத்தார். அதனால் அவரைத்தான் வார்ரூம் ஆட்கள் விமர்சித்தார்கள் என்று மழுப்பினாராம். இந்த விவகாரத்தால் அந்த மாநில நிர்வாகி மீதும், கல்யாணராமன் மற்றும் திருச்சி சூர்யா மீதும் கமலாலயத் தரப்பு ஏக எரிச்சலில் இருக்கிறதாம். இந்த நிலையில், அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகியின் மைத்துனர், கோவை மாவட்டத்தில் சூலூரில் இருந்து நிலாம்பூர் செல்லும் வழியில் 54 கோடிக்கு புதிய சொத்தினை வாங்கியிப்பதாகவும் கமலாலயத் தரப்பிலேயே புகைகிறது.''

""தேர்தல் நேரத்தில், பா.ஜ.க. நயினார் தரப்பில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் தொடர்பான விசாரணை மீண்டும் வேகம் பெற்றிருக்கிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, நயினார் நாகேந்திரன் தரப்பிடம் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், பா.ஜ.க.வின் தொழில் பிரிவுத் தலைவர் கோவர்த்தனும் சிக்கியிருக்கிறார். அவரிடம் கடந்த மாதம் முதல்கட்ட விசாரணையை சி.பி.சிஐ.டி. டீம் நடத்தியது. அப்போது அவர், பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் சிலருக்கும் அந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது பற்றிச் சொன்னாராம். அதன்பின், அடுத்தகட்ட விசாரணைகளுக்காக சம்மன் அனுப்பியபோது, கோவர்த்தன் மருத்துவமனையில் அட்மிட்டாகிவிட்டாராம். அவருக்கு உண்மையிலேயே கடந்த வாரம், அந்தத் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இந்த நிலையில், அவர் அது தொடர்பான சிகிச்சையில் இருந்தபோது, கோவர்த்தனின் அம்மா திடீரென மரணமடைய... டாக்டர்கள் தடுத்தும், கோவர்த்தனன் வீல் சேருடன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டாராம். தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு திரும்பியுள்ள கோவர்த்தனிடம், மீண்டும் விசாரணைகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறதாம் சி.பி.சி.ஐ.டி. டீம். இது கமலாலயத் தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.''’’

""பள்ளிக் கல்வித் துறையில் பரபரப்பு தெரியுதே?''’’

""ஆமாங்க தலைவரே, பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் பணி மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றிற்கு புரோக்கர்கள் மூலம் வசூல் வேட்டை நடப்பதாக, துறையின் அமைச்சர் அன்பில் மகேஷுக்கே தகவல் போயிருக்கிறது. உடனே துறையின் செயலாளர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்.சை அழைத்து, என்னிடம் ஆலோசிக்காமல் பணி மாறுதலோ, பதவி உயர்வோ நடத்தக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் மகேஷ். அதோடு, இந்த விவகாரத்தை சீரியசாக கவனிக்கும்படியும் குமரகுருபரனை அவர் எச்சரித்திருக்கிறாராம். அதனால், இந்த முறை எந்த பண பரிமாற்றமும், புரோக்கர்கள் லாபியும் நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், துறைச்செயலாளர் இது குறித்த விசாரணையில் இறங்கிய போது, கடந்த வருடம் புரோக்கர்கள் மூலம் வசூல் வேட்டை நடத்திய கருப்பு ஆடான ‘பிரகாசமான’ அரசுத் தரப்பு உதவியாளர் வசமாக சிக்கியிருக்கிறாராம். இது அமைச்சர் கவனத்துக்கும் செல்ல, சம்பந்தப்பட்ட நபர் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறாராம்.''’’

""துறை அமைச்சர்களுக்குத் தெரியாமல் சிலர் இப்படி செய்யும் ஏடாகூடங்கள், எங்கெங்கோ பாதிக்கிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, இதேபோல் நெடுஞ்சாலைத்துறையிலும் மேலிடத்திற்குத் தெரியாமல் ஊழல்கள் நடத்துவருகிறது என்கிறார்கள், கோட்டைத் தரப்பிலேயே. அதாவது, அந்தத் துறையில் குறிப்பாக சாலைப் பணிகள் விவகாரத்தில்தான் அதிக ஊழல்கள் நடக்கிறதாம். உதாரணத்துக்குச் சொல்வதானால், சென்னை கோட்டப் பொறியாளர் ரவி, சப்-டிவிசன் ஏ.இ. ராம்நரேஷ் ஆகியோர் ஒரு அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான குறிப்பிட்ட தனியார் கண்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்கு மட்டுமே பணிகளை ஒதுக்குகிறார்களாம். முழுக்க, முழுக்க அந்த நிறுவனத்துக்கு ஆதரவாகவே அவர்கள் இயங்கிவருகிறார்களாம். இவர்கள், தாங்கள் ஆடிவரும் தப்பாட்ட விவகாரங்கள், மேலிடத்திற்குப் போகாமல், சாமர்த்தியமாக மறைத்து விடுகிறார்களாம்.''’’

""சில அமைச்சர்கள் மீது தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறது என்கிறார்களே?''’’

""ஆமாங்க தலைவரே, அதன் சின்ன எதிரொலிதான் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதற்கு சப்பைக் கட்டு கட்டும் அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள், அமைச்சருக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. இதனால் மஸ்தான் அவரது இஸ்லாமியத் தரப்பினரின் கோரிக்கைகளைக்கூட அவரால் கவனிக்க முடியாத நிலை இருந்தது. அதனால்தான் அவரது கட்சிப் பதவியை விலக்கி, அவருக்கு ரிலாக்ஸ் கொடுத்திருக்கிறது அறிவாலயம் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் அறிவாலயத் தரப்போ, தங்கள் பணிகளை சரிவர கவனிக்காத இன்னும் பல அமைச்சர்களுக்கு ஆப்பு இருக்கிறது என்கிறது.''’’

""நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு ஊழல் விவகாரத்தைப் பகிர்ந்துக்கறேன். திருத்தணி முருகன் கோயிலின் பரிவட்டம் கட்டும் நிகழ்வுகளுக்காக, பரிவட்டம் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு லட்சம் பரிவட்டத்தை கோயிலுக்கு இலவசமாகவே தர முன்வந்தது. ஆனால் அந்த டெண்டரை தானே எடுக்கத் திட்டமிட்ட, நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆலயா மோகன், அந்த இலவச பரிவட்டங்களை நிராகரிக்கச் செய்துவிட்டார். ஆலயா மோகனின் நிறுவனம் அந்த பரிவட்டத்தைத் தலா ரூபாய் 126-க்கு சப்ளை செய்வதாக டெண்டரில் குறிப்பிட்டது. இன்னொரு நிறுவனமோ, அதை ரூபாய் 86-க்கு சப்ளை செய்வதாக குறிப்பிட்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கே டெண்டர் போய்விடும் என்பதால், இந்த டெண்டரையே ரத்து செய்ய முயற்சிக்கிறாராம் மோகன்.''’’