kanimozhi

""ஹலோ தலைவரே, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை டெல்லியில் பதவி ஏற்றிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்திலும் நாடாளுமன்ற நிர்வாகிகள் தொடர்பான தேர்வுகள் நடந்து வருகிறது.''’’

Advertisment

""ஆமாம்பா, தி.மு.க.விலும் நாடாளுமன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே?''’’

""உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்ற தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்ற இரு அவைகளுக்குமான தி.மு.க. தலைவராக கனிமொழியும் , லோக்சபா தி.மு.க. தலைவராக டி.ஆர்.பாலுவும், ராஜ்யசபா தி.மு.க. தலைவராக திருச்சி சிவாவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே தன்னை மக்களவைத் தலைவராக நியமிக்க வேண்டும் என கனிமொழி தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டாராம். அதற்கு ஸ்டாலினும் ஒப்புக்கொண்ட நிலையில், டி.ஆர்.பாலு அதற்குச் சம்மதிக்கவில்லையாம். நான்தான் சீனியர்; எனக்குதான் அந்த பதவி வேண்டும் என அவர் கேட்டதோடு, அவர் கொஞ்சம் முறுக்கிக்கொண்டும் போனாராம். அவரை ஆ.ராசா மூலம் சமாதானப்படுத்த முயன்றும், பாலு அமைதியடையவில்லை என்கிறார்கள். அதனால், கனிமொழியை சமாதானப்படுத்திய ஸ்டாலின், மேற்கண்டவாறு நியமனங்களைச் செய்திருக்கிறாராம்.''’’

Advertisment

""சரிப்பா, ஒன்றிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கேட்கப்பட்டும் ஒன்றும் நடக்கவில்லையே?''’’

""ஆமாங்க தலைவரே,மோடியின் அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு இந்தமுறை தமிழிசை உள்ளிட்டவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தரப்பு வேண்டுகோள் வைத்திருந்ததாம். அமித்ஷா, ராஜ்நாத்சிங், பியூஸ்கோயல், ஜே.பி.நட்டா அடங்கிய தேர்வுக்குழுவினர் இது குறித்து விவாதித்தபோது, தமிழிசைக்கு எதற்கு அமைச்சர் பதவி? என்ற அமித்ஷா, அவரை நிராகரித்துவிட்டு, தமிழக பா.ஜ.க. நிர்வாகியின் பெயரைப் பரிந்துரைப் பட்டியலில் சேர்த்திருக்கிறார். ஆனால் மோடியோ, மாநில நிர்வாகியின் பெயரைப் பார்த்ததும் எரிச்சலானதோடு, அவர் பற்றிய கடும் விமர்சனங்களையும் வைத்திருக்கிறார்.இந்த விவகாரத்தில் ஒத்த கருத்து ஏற்படாததால், தமிழகத்துக்கு உபரியாக பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு தமிழிசைதான் காரணம் என்று கருதிய அமித்ஷா, ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில் வைத்தே, தமிழிசையிடம் கடுமை காட்டியிருக்கிறார் என்கிறார்கள். அமித்ஷாவின் இந்த செயல், நாடார் சமூக மக்கள் மத்தியில் இங்கே கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.''’’

""ஒன்றிய இணையமைச்சராகப் பொறுப்பேற்ற எல்.முருகனின் உதவியாளர் பற்றி இப்போதே புகார் கிளம்பியிருக்கிறதே?''’’

""தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் இருந்தபோது அவருடைய அரசியல் உதவியாளராக இருந்தவர் கவியரசு. தற்போதும் முருகனின் கூடுதல் பி.ஏ.வாக அவர் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இப்போது இவரைப் பற்றி உள்துறைக்கும், சி.பி.ஐ.க்கும் கடுமையான புகார் போயிருக்கிறது. குறிப்பாக, முருகனின் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி 25 கோடிக்கும் அதிகமாக இவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்றும், இவரது மனைவி ஒரு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்றும் புகார்கள் குவிந்திருக்கிறதாம். தற்போது இந்த புகாரை விசாரிக்கச் சொல்லி மத்திய உளவுத்துறைக்கு அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறதாம்.'' ’’

""பா.ஜ.க. தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் ஒரு ஆடியோ பரபரப்பைக் கிளப்புதே?''’’

""ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, தேர்தலில் பா.ஜ.க.வை மண்ணைக் கவ்வ வைத்திருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி நெல்லை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தமிழ்செல்வனும், அங்குள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான உடையாரும் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ, வெளியாகி பரபரப்பைப் பற்றவச்சிக்கிட்டு இருக்குது. அந்த உரையாடலின்போது இந்து மக்கள் கட்சி உடையார், "தமிழ்நாட்ல நாப்பது தொகுதியிலும் ஜெயிக்காமல் போயிட்டோமே. வேதனையா இருக்குய்யா. நம்ம ஆட்கள் வேலயே செய்யலயா.. உள்ளடி வேல செஞ்சுட்டாங்களா? நயினார் கொடுத்த பணத்த வீட்ல கொண்டுபோய் வச்சிக்கிட்டாங்களா?'’என்றெல்லாம் கேட்க, பா.ஜ.க. தமிழ்ச்செல்வனோ, "வேலய ஒழுங்கா செய்யலன்றதுதான் உண்மை. அவர் (நயினார்) கட்சிக்காரர்களைப் பாத்துக் குடுக்கல. கிராமங்கள்லயும் குடுக்கல. வேண்டிய ஆட்க, சொந்தக்காரங்கன்னு ஒரு டீம் போட்டுருந்தாரு. அது கொலாப்ஸ் ஆயிடிச்சி...'’என்ற ரீதியில் பதில் சொல்கிறார்.''’’

""சரி...''’’

""அப்ப அந்த உடையார் ’ஏற்கனவே ஒரு மாவட்டத் தலைவர் கட்சிய அழிச்சாரு. அதே நெலம இன்னைக்கி நயினாருக்கு வந்துருக்கு. நயினாரோடு இருப்பவங்க வாங்கிச் சாப்புட்டுட்டுப் போய்ட்டாங்க. கரு.நாகராஜன் எங்க இருந்தாரு? அவரு சரத்குமார் கட்சியில இருந்தாரு. மாநிலப் பொறுப்பில இருக்கும் கேசவவிநாயகம் என்ன செய்துட்டாரு? மாநில தலைவரா இருப்பவரோட வளர்ச்சி பிடிக்கலை. அதனால தமிழகத்தில் பா.ஜ.க.வை அழிக்கிறாக.’ என்றெல்லாம் சொல்வதோடு, முத்தாய்ப்பாக "கலவரம் செஞ்சாத்தான் பா.ஜ.க. தமிழ்நாட்ல கால் ஊன்ற முடியும்'’என்று அதிரடியாக கலவரத்தைத் தூண்டுவதுபோல் பேசுகிறார். இந்த ஏடாகூட உரையாடல்தான் இப்போது அரசியல் அரங்கில் பதட்டப் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்துக்குப் போனதால், அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பாளை இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், இந்து மக்கள் கட்சி உடையாரை கைது செய்திருக்கிறார். இந்த தகவலை அறிந்ததும் உடையாரை, தங்கள் இந்து மக்கள் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார், அதன் தலைவரான அர்ஜுன் சம்பத்.''’’

""நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40-ஐ தி.மு.க. தட்டித் தூக்கினாலும், முதல்வர் ஸ்டாலின் இன்னும் மனக்குறையோடுதான் இருக்கிறாராமே?''’’

""உண்மைதாங்க தலைவரே, இந்த ஏகோபித்த வெற்றிக்கு இடையிலும், பல சட்டமன்றத் தொகுதிகள் திமுகவுக்கு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறதாம். குறிப்பாக தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தோடு 22 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், அவர்களின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள் மொத்தம் 132 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. அதில், நான்கு தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் அதிக வாக்குகள் பெற்றிருக்கின்றன. இந்த நான்கும் கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாஜி தங்கமணி காட்டிய வேகமே இதற்குக் காரணம் என்கிறார்கள். அதேபோல், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கிய பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வை விட பா.ம.க. அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது.''’’

""ஆமாப்பா...''’’

""அதேபோல், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் களமிறங்கிய பகுதிகள்னு பார்த்தால் 10 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதிலும், வடமாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் பெற்ற வாக்குகளைவிட அ.தி.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதுபோல், விருதுநகரில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வும், திருமங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரசை விட அதிகம் பெற்றிருக்கிறது. இதற்கிடையே, கொங்கு பகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் தி.மு.க.வுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்து, சற்று ஆறுதலைத் தந்திருக்கின்றன.''’’

""தி.மு.க.வுக்கு எங்கே வாக்கு குறைந்தாலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்னு ஸ்டாலின் முன்னதாகவே எச்சரித்திருந்தாரே?''’’

""ஆமாங்க தலைவரே, அதனால் தி.மு.க. கூட்டணிக்கு குறைந்த வாக்குகள் கிடைத்த பகுதிகளில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்குமோ என்கிற பதட்டத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, கொங்கு பகுதியில் அ.தி.மு.க. கூடுதல் வாக்கு பெற்ற நான்கு தொகுதிகளில் மூன்று, நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் வருகின்றன. இங்கு தி.மு.க. மா.செ.வாக இருப்பவர் மதுரா செந்தில். டிரான்ஸ்போர்ட் தொழில் செய்துவரும் இவர், இடையில் தி.மு.க.வுக்கு வந்தவர். இவர், அ.தி.மு.க. மாஜி மந்திரி தங்கமணிக்கு ஈடு கொடுத்து தேர்தல் பணியைச் செய்யாததால்தான், இந்த ஓட்டுச்சரிவு என்கிறார்கள், அங்குள்ள தி.மு.க. உடன்பிறப்புகள். இதுவும் தி.மு.க. தலைமைக்குப் புகாராகப் போயிருக்கிறதாம்.''’’

""விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக ரெடியாகுதே?''’’

""ஆமாங்க தலைவரே, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடக்கும்னு தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அங்கே நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நடக்கவிருக்கிறது. இந்த நான்கு அணியிலும் இப்ப, இது தொடர்பான பரபரப்பைப் பார்க்க முடியுது. தி.மு.க.வோ, கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலாளரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவருமான அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தனது மகன் சிகாமணியை நிற்கவைக்கும் ஆசையில் அமைச்சர் பொன்முடி காய்களை நகர்த்தியபோதும், நாம் ஏற்கனவே பேசிக்கொண்டது போல, தி.மு.க.வில் உள்ள வன்னியர் சமூகத்தினரின் குரலுக்கு அறிவாலயம் மதிப்பை அளித்திருக்கிறது. அதேசமயம், இந்தத் தொகுதி தொகுதி அடங்கியிருக்கும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை நியமித்திருக்கிறார் ஸ்டாலின்.''’’

""மற்ற கட்சிகளில் இடைத்தேர்தல் மூவ்கள் எப்படி இருக்கிறது?''’’

""தி.மு.க. வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் யாரை நிறுத்துவது என்ற பரபரப்பில் இருக்கிறது இக்கட்சி. இதுகுறித்து மாஜி மந்திரி சி.வி.சண்முகத்திடம் விவாதித்த எடப்பாடி, "வேட்பாளர் குறித்து நீங்களே முடிவெடுங்கள்' என்று பொறுப்பை சண்முகத்திடமே ஒப்படைத்திருக்கிறாராம். இங்கே சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், ஒ.செ. பன்னீர், மாஜி மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற நிலை இருக்கிறது. 2019 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல்வரை அனைத்து தேர்தல்களிலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. தோல்வியையே சந்தித்து வருவதால், இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் வேகத்தில் இருக்கிறது இலைத் தரப்பு. மற்ற கட்சிகளிலும் வேட்பாளர் குறித்த ஆலோசனை நடந்துவருகிறது.''’’

""தமிழக லோக் ஆயுக்தா அமைப்பின் சேர்மன் பதவி நிரப்பப்பட்டிருப்பது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறதே?''’’

""காலியாக இருந்துவந்த தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் சேர்மனாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டாக்டர் ராஜாராம் என்பவரை நியமித்திருக்கிறது தி.மு.க. அரசு. இந்த சேர்மன் பதவியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கும் நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை எப்படி நியமித்தார்கள் என்று, கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அது மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வின் அதிகபட்ச விசுவாசியாக இருந்துகொண்டு, தி.மு.க. அனுதாபிகளாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராகவே செயல்பட்டவராம் ராஜாராம். அவரை சேர்மன் பதவியில் நியமிக்கலாமா? என்கிற குரல் தி.மு.க. தரப்பிலேயே எதிரொலிக்கிறது.''’’

""காவல்துறையை சிறுவர்களே மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதே?''’’

""ஆமாங்க தலைவரே.. திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன், சமீபத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கு பழிவாங்கப் போவது போல், இன்ஸ்டாகிராமில் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாரின் புகைப்படத்தைப் பதிவிட்டு,’"விரைவில் தலைகள் சிதறும்'’என்று, "கொம்பன் பிரதர்ஸ்'’என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது காவல்துறை மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த மிரட்டலை விடுத்ததாக குருவம்பட்டி, மதுரை மாவட்ட கண்ணனூர், மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவன் என 17 வயதைத் தாண்டாத மூன்று சிறுவர்களைக் கைது செய்திருக்கிறது போலீஸ். மேலும் இதில் தொடர்புடைய சமயபுரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனையும் தேடிவருகிறார்கள். சிறுவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் வயதுக்கு மீறிய க்ரைம் சிந்தனை, பலரையும் பகீரில் ஆழ்த்தியிருக்கு.''’’

""என் காதுக்கு வந்த ஒரு தகவலை நான் பகிர்ந்துக்கறேன். தேர்தல் பரபரப்புக்கு நடுவிலும், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறாராம். குறிப்பாக, அந்த அமைச்சர் வட மாவட்டத்திலும், டெல்டா மாவட்டதிலும் இயங்கிவரும் மூன்று சர்க்கரை ஆலைகளை, இனிக்க இனிக்க வாங்கி இருக்கிறாராம். அதோடு அந்த மூன்று ஆலைகளையும் நிர்வகிக்க ராம நாமத்தைக் கொண்ட ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்.யை செயல் அலுவலராக நியமித்து, அவருக்கு பல லட்சம் ரூபாய் சம்பளத்தையும் நிர்ணயித்து, தாராளம் காட்டியிருக்கிறாராம்.''’’