wong call

"ஹலோ தலைவரே, விமான நிலைய தங்கக்கடத்தல் விவகாரம் அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''

Advertisment

"ஆமாம்பா, இந்த விவகாரத்தில் சிக்கிய பா.ஜ.க. பிரமுகர் பிரித்வி பின்னணியில் பெரிய நெட் ஒர்க்கே இருக்கிறதாமே?''

உண்மைதாங்க தலைவரே, இந்த பிரித்வி சாதாரண நபரல்ல என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள். அவரது க்ரைம் ரிப்போர்ட் சொல்றது என்னன்னா, பிரித்வியின் அப்பா, சென்னை காளிகாம்பாள் கோயிலின் முக்கிய சேவகர்களில் ஒருவரா இருந்தவராம். பிரித்வியின் வீடும் அந்த காளிகாம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறதாம். படிக்கிற காலத்திலேயே பிரித்வி, லயோலா கல்லூரி மாணவர் சங்கத் தலைவருக்கான தேர்தலில் நின்று, சேர்மனாக ஆனவராம். அப்போதுதான் பா.ஜ.க. தொடர்பு ஏற்பட்டு மாணவர் அணியில் பொறுப்பு வாங்கியிருக்கார். அந்த நாளிலேயே சீனிவாசன் என்பவருடன் சேர்ந்துகொண்டு, கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவது உட்பட பல வேலைகளைச் செய்து ஏராளமாக சம்பாதித்திருக்கிறாராம்.''

Advertisment

"ஆரம்ப காலத்திலேயே பிரித்வி ஆரம்பிச்சிட்டாரா?''

"ஆமாங்க தலைவரே, இவரது நண்பரான அந்த சீனிவாசன், டெல்லி சென்று பிரைம் பாயிண்ட் சீனிவாசனாக உருமாறி பல்வேறு இல்லீகல் பிசினஸில் இறங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் பிருத்வியும் பா.ஜ.க. தொடர்புகளை வைத்து எப்படியோ, அப்போதைய மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறையின் இணை அமைச்சராக இருந்த அர்ஜுன்ராம் மேக்வாலிடம், அவரது இரண்டாம் நிலை உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார். பிறகு, அமைச்சரின் பி.ஏ. என்ற கெத்தில், மேக்வாலின் கீழ் இருந்த கஸ்டம்ஸ் உட்பட அத்தனை அதிகாரிகளிடமும் நெருக்கமான செல்வாக்கை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதோடு கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் ஏர்போர்ட்டிற்குள் எளிதாக சென்று வருவதற்குரிய பாûஸயும் அப்போதே வாங்கிவிட்டாராம். பிறகு, அரசியல் வி.ஐ.பி.க்கள் ஏர்போர்ட் சென்றுவரும் போதெல்லாம் அவர்களை வரவேற்கவும் செண்ட் ஆஃப் செய்யவும் போய், அவர்களையும் வளைத்திருக்கிறார் பிரித்வி.''

"ம்''

"என்னங்க தலைவரே, இதற்கே பெருமூச்சு விட்டா எப்படி? மீதத்தையும் கேளுங்க. இப்படிப்பட்ட தொடர்புகளை வைத்து பல துறைகளிலும் சம்பாதித்து வந்த பிரித்வி, பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள ’பவர்பயிண்ட்’ சீனிவாசனின் இல்லீகல் பிசினஸிலும் கைகோர்த்திருக்கிறார். இதை அறிந்த அமைச்சர் மேக்வால் அவரைத் துரத்தியடித்திருக்கிறார். இதன்பின் மீண்டும் தமிழகம் வந்த பிரித்வி, தமிழக பா.ஜ.க.வில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றிருக்கிறார். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகியாக தமிழகம் வந்த அந்த முன்னாள் காவல்துறை அதிகாரியை நட்பாக்கிக்கொண்டு, தான் டெல்லியில் எதையும் செய்யும் பவர் புள்ளி என்று அவரையும் நம்ப வைத்தவர், ஒரு கட்டத்தில் தமிழக பா.ஜ.க. நிர்வாகியின் டெல்லியின் கையாகவே செயல்பட்டிருக்கிறார் பிரித்வி.''

"இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான போர்டிலும் உறுப்பினராகி டாம்பீகம் காட்டியிருக்கிறார். அந்த சூழலில் செல்வா என்ற ஒருவரும் இவர்கள் கூட்டணியில் சேர, பிரித்வி, பாஜக மாநில நிர்வாகி, செல்வா ஆகிய மூவரும் சேர்ந்து ஏர்போர்ட்டில் சில காரியங்களைச் செய்திருக்கிறார்கள். அப்போது பாஜக மாநில நிர்வாகிதான் பிரித்விக்கு கண்டெய்னர் கிளியரிங் ஏஜன்ஸியை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்த தொடர்பில்தான் தங்கக் கடத்தலும் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட கடத்தல் தங்கம்தாம் அண்மையில் வெயிட்டாகப் பிடிபட்டிருக்கிறதாம். இதைத் தொடர்ந்து பிரித்வி வீட்டிலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், அடுத்ததாக அந்த பா.ஜ.க. நிர்வாகியும் சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதாம். அவர் தன் டெல்லித் தொடர்புகள் மூலம், தன்னைக் காத்துக் கொள்ள போராடிவருகிறாராம். தன் மீதான அரசியல் பகையால், மத்திய அமைச்சர் எல்.முருகன் தரப்புதான், இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்குகிறது என்று அந்த மாநில நிர்வாகி புலம்புகிறாராம்.''

"தலை கிறுகிறுக்குதே, சரிப்பா, தி.மு.க. மேயர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களே?''

"தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மேயர் கல்பனா, நெல்லை மேயர் சரவணன் ஆகிய இருவரும் தற்போது ராஜினாம கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் பதவி விலகவேண்டும் என்று சம்பந்தபட்ட அந்த இரு மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில்தான், இந்த ராஜினாமா படலம் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம், பதவியை வைத்து ஏகத்துக்கும் சம்பாதித்த இந்த மேயர்கள், கவுன்சிலர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையாம். இதைத் தொடர்ந்து பெரும் சச்சரவுகள் வெடித்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு சென்று, நிலைமையைப் புரிந்துகொண்டு, மேயரை நீக்க வேண்டும் என்ற ரீதியில் கவுன்சிலர்களிடம் கடிதம் வாங்கியிருக்கிறார். இதன் பின்னரே மேயர்கள் ராஜினாமா செய்யும் தகவல் வெளியே சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.''

"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் முழுக்க அனலில் தகிக்கிறதே?''

“ஆமாங்க தலைவரே. ஒவ்வொரு அணியும் தனித்தனியா வியூகம் வகுத்து களத்தைக் கலக்கி வருகின்றன. பல வேட்பாளர்கள் களமிறங்கினாலும் அங்கே தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை, வாக்காளர்களை வளைக்க ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு அமைச்சர் தலைமையில் டீம் போட்டு வரிந்துகட்டி பரபரக்குது. இந்தநிலையில், தொகுதிக்கு உட்பட்ட ஆசாரகுப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சூரியத் தரப்பு கொண்டுவந்த 500-க்கும் மேற்பட்ட வேட்டி, சேலை, சட்டை, டீ-சர்ட் உள்ளிட்ட ஜவுளிகளை, பா.ம.க. தரப்பு தடுக்க, இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் டீம், பா.ம.க. தரப்பையே கார்னர் பண்ணியதாம்.''

"ஓகோ..''

"இதுதவிர தி.மு.க. தரப்பு ஓட்டுக்கு பரிசுப் பொருட்கள், மளிகை சாமான்கள்ம், கரன்சின்னு வழங்க சூரியத் தரப்பு திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்க, இதையறிந்த டாக்டர் ராமதாஸýம் அன்புமணியும், இதை எல்லாம் அனுமதிக்காதீங்க. அவங்க கொடுக்குறதை எல்லாம் தடுத்து நிறுத்தி பொதுவெளியில் அம்பலப்படுத்தி, அரசியலாக்குங்கன்னு பா.ம.க.வினருக்கு உத்தரவிட்டிருக்காங்களாம். இதைத்தொடர்ந்து, அங்கே ஒவ்வொரு பகுதியாக பா.ம.க.வினர் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. எளிதில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று நினைக்கும் பா.ம.க. தரப்பு, அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறதாம். இதனால் தேர்தல் நெருங்க நெருங்கப் பயமும் பதட்டமும் தொகுதியில் வியாபித்திருக்கிறது என்கிறார்கள் அங்குள்ள வாக்காளர்கள்.''

"நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரி பா.ம.க. தரப்பு அ.தி.மு.க. வாக்குகளை வளைப்பதில் தீவிரம் காட்டிவருகிறதே?''

"உண்மைதாங்க தலைவரே, அதேபோல் நமது நக்கீரனில் ‘இடைத்தேர்தலில் பா.ம.க.-அ.தி.மு.க. டீல்’ என்ற தலைப்பில் இது குறித்து விரிவான அட்டைப்படக் கட்டுரையும் வெளியானது. அதன்படிதான் எல்லாம் நடக்குது. அ.தி.மு.க. வாக்குகளை அறுவடை செய்யும் வேகத்தில், டாக்டர் ராமதாசும், அன்புமணியும் வெளிப்படையாகவே எம்.ஜி.ஆர். புகழைப் பாடி வருகின்றனர். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. தொண்டர்களிடமும் பா.ம.க. நெருக்கம் பாராட்ட முனைகிறது. இதைப்பார்த்த ’நாம் தமிழர் கட்சி சீமானும், எம்.ஜி.ஆரையும் விஜய்காந்த்தையும் புகழ்ந்து தள்ளி, பா.ம.க.வினருக்குப் போட்டியாக வரிந்துகட்டி நிற்கிறார். இந்த நிலையில் விரைவில் டெல்லி செல்ல இருக்கும் எடப்பாடி, மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை சந்திக்கவிருக்கிறாராம். அதன்மூலம் இரு தரப்புக்கும் இடையிலான உறவை அவர் புதுப்பிக்கவிருக்கிறார் என்கிறார்கள். எடப்பாடியின் இந்த மூவ்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கிவருகிறதாம்.''

"இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. கலகலத்துவருகிறதுன்னு சொல்றாங்களேப்பா?''

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வில் தற்போது ஏகப்பட்ட கோஷ்டிகானங்கள் கேட்குது. தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்திருப்பதாலும் தமிழக பா.ஜ.க. கலகலத்து வருகிறது. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் நீக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கட்சியின் சிந்தனையாளர் பிரிவைச் சேர்ந்த கல்யாணராமன் அண்மையில் நீக்கப்பட்டார். தமிழிசையோடு மோதிய விவகாரத்தில், அடுத்து திருச்சி சூர்யாவுக்கு கட்டம் கட்டினர். இதேபோல் ஊழல் விவகாரத்திலும் பலர் மீது நடவடிக்கை பாயவிருக்கிறதாம். இந்த நிலையில் மாநில பா.ஜ.க. தலைவராக இருப்பவர், படிப்பைக் காரணம் 6 மாதப் பயணமாக லண்டன் செல்கிறார். அதனால் புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவேண்டிய நிர்பந்தத்தில் தேசிய பா.ஜ.க. தலைமை இருக்கிறது. இந்த நிலையில், அந்த மாநில நிர்வாகியால் ’ஹனி டிராப்’ செய்து அவமானப்படுத்தப்பட்ட கே.டி.ராகவன் அல்லது பொன்னார் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற டாக் கமலாலயத் தரப்பில் கேட்க ஆரம்பித்திருக்கிறது.''

"போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளும் குறிவைக்கப்பட்டிருக்கிறார்களே?''

"போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய ஜாபர்சாதிக், இப்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.அவரைக் கைது செய்த, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டீம், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறதாம். ஏற்கனவே ஜாபரிடம் விசாரணை மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில், அவர்களின் நகர்வுகள் வேகம் பெற்றிருக்கிறதாம். தற்போது, தேனியை மையப்படுத்தி அவர்களின் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. அதாவது, தி.மு.க.வின் அயலகப்பிரிவின் தேனி மாவட்ட முக்கிய பொறுப்பாளர் ஒருவரின் நெருங்கிய கூட்டாளிகள் 5 பேரை சமீபத்தில் கோவைக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார்கள்.அந்த திமுக பிரமுகர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓ.பி.எஸ்.ஸின் பினாமியாக வலம் வந்தவராம். பின்னர் ஜாபர்சாதிக் மூலம் தி.மு.க.வுக்குத் தாவி பொறுப்பு வாங்கியதோடு, சில தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் மா.செ. க்களோடும் நெருக்கம் பாராட்டி வந்தாராம். மேலும் அவர்களில் சிலரின் முக்கிய விசயங்களை அவர் ஹேண்டில் பண்ணி வருவதாகவும் சொல்லிவந்தாராம். இதுகுறித்தும் இப்போது துருவி வருகிறார்களாம்.''

"ஒரு காவல்துறை அதிகாரியின் டிரான்ஸ்பர், துறை அதிகாரிகள் பலரையும் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்திருக்கிறது என்கிறார்களே?''

"சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் அரவிந்த் ஐ.பி.எஸ். இவரை உளவுப் பிரிவின் எஸ்..பி.யாக நியமிக்க, டி.ஜி.பி. சங்கர்ஜிவால் முயற்சி செய்தாராம். மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்தவருக்கும் இவருக்கும் இடையில் ஏழாம் பொருத்தம். காரணம், மாநில உளவுப்பிரிவுக்கு சென்னை மாநகர உளவுப்பிரிவு கட்டுப்படாது என்று அரவிந்த் தனி ராஜாங்கம் நடத்தினாராம். இவரது குணநலன்களை அறிந்த மற்ற உளவுத்துறை அதிகாரிகள் இதை எதிர்த்ததோடு, அமைச்சர் உதயநிதியிடமும் இவரைப் பற்றிய புகார்களை அடுக்கினர். இதைத் தொடர்ந்து அரவிந்த் திருச்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.''

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன். நம்மைத் தொடர்பு கொண்ட ஏ.டி.ஜி.பி. மகேஷ்அகர்வால் தரப்பினர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாநில ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் மகேஸ்குமார் அகர்வால் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியானதில்லை. மகேஷ்குமார் அகர்வால் கறாராக செயல்படக்கூடியவர். காவல்துறையினரின் மீதான புகார்களின் அடிப்படையில் ஏறத்தாழ 30 ஆயிரம் சார்ஜ் மெமோக்கள் வரை இவர் கொடுத்திருக்கிறார். இவர் பற்றி தப்பும் தவறுமான தகவல்களை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். அவருக்கு தம்பியே கிடையாது. அப்படியிருக்க அவர் தம்பி பா.ஜ.க.வில் பொறுப்பில் இருப்பதாக சொல்வதில் உண்மையில்லை. இவரால் பாதிக்கப்பட்டவர்களும் இவர் மீது எரிச்சல் கொண்டவர்களும், இல்லாததை எல்லாம் போட்டுக் கொடுத்ததால்தான், அவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அளவில் அகர்வாலுக்கு தெரிந்த அத்தனையும் அவருக்கு மேல் உள்ள டி.ஜி.பி.க்கும் தெரியும். அப்படியிருக்க இவர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது எப்படி சரியாகும்? என்கிறார்கள்.''