""ஹலோ தலைவரே, மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் புதிய விறுவிறுப்பைப் பார்க்க முடிகிறது.''’’
""ஆமாம்பா, உடல்நிலையைக் காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைக் கூட ஏற்கத் தயங்கிய சோனியாகாந்தி, இப்ப நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாரே!''’’
""உண்மைதாங்க தலைவரே, அதே சமயம்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோனியாவா? ராகுலா? என்கிற விவாதமும் இப்ப நடக்குது. சோனியாகாந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தியே இருக்கவேண்டும் என்ற குரல், இப்ப காங்கிரஸில் வலுத்திருக்கு. கடந்த 2019 தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. அதனால் அப்போது நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில், தான் அமர விரும்பவில்லைன்னு ராகுல்காந்தி மறுத்துவிட்டார். அதனால் அந்தப் பதவியில் அப்போது மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டார். இந்தமுறை எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸýக்கு கிடைத்திருப்பதால், ராகுல்காந்தியைத் தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் முதல் குரலை எழுப்பினார், கடலூர் மாவட்ட எம்.பி.யான டாக்டர் விஷ்ணுபிரசாத். இதே கருத்துதான் ஒட்டுமொத்த காங்கிரஸிலும் எதிரொலிக்குது.''’’
“""சரிதாம்பா, அழுத்தமான வாதங்களால் மோடி தரப்பைத் தன்னால் பதற வைக்க முடியும்னு ராகுல், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பலமுறை நிரூபித்திருக்கிறாரே?''’’
""ஆமாங்க தலைவரே.. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, தானே இருக்க வேண்டும் என்கிற விருப்பம் கார்கேவுக்கும் இருக்கிறது. ஆனால், மூத்த எம்.பி.க்கள் பலரும், நீங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள். அதேசமயம் அதிரடிக் கேள்விகளால் வீரதீரமாக மோடியுடன் மோதுவதற்கு சரியான ஆள் ராகுல்தான். அதனால், அவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதோடு, ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானால்தான் நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பும் குரலும், காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளும் தேசிய அளவில் எதிரொலிக்கும் என்றும் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கட்சியும், ராகுல்தான் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, கட்சித் தலைமைக்கு அனுப்பி வருகின்றன. ராகுல் மீதான எதிர்பார்ப்பு, இந்தியா முழுக்க நிலவுது. ஒருவேளை சோனியாவே எதிர்க்கட்சித் தலைவராக அமர விரும்பினாலும் அது நடக்கலாம். எனவே, இப்போதைய நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோனியாவா? ராகுலா? என்ற கேள்வி நீடித்துவருகிறது.''’’
""நாம் தொடர்ந்து சொன்னதுபோல், ரிசல்ட் வந்த உடனேயே அ.தி.மு.க.வில் பல விதத்திலும் பூகம்பம் ஆரம்பிச்சிடுச்சே?''’’
""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில்.. திடீரென பத்திரிகையாளர்களை தன் ஆதரவாளர்களுடன் சந்தித்த அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தால் அ.தி.மு.க. ஜெயித்திருக்கும் என்று பேட்டி கொடுத்தார். இதை எடப்பாடி ரசிக்கவில்லை. பா.ஜ.க.வுடன் இனி உறவே இல்லைன்னு எடப்பாடி பலமுறை அறிவித்திருக்கும் நிலையில், வேலுமணி மேற்படி சொன்னது கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்னு நினைத்த எடப்பாடி, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் படி, கே.பி.முனுசாமியிடமும் ஜெயக்குமாரிடமும் தெரிவித்தார். உடனே அவர்கள் இருவரும் ’"வேலுமணியின் கருத்து எங்கள் கட்சியின் கருத்தல்ல; அது அவரது சொந்தக் கருத்து'’ என்று அதிரடியாக அறிவித்தனர். இதனையடுத்து வேலுமணியின் ஆதரவாளர்கள், சோசியல் மீடியாக்களில் எடப்பாடித் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வேலைகளில் விறுவிறுப்பாக இறங்கினார்கள்.''’’
""இதெல்லாம் எதிர்பார்த்ததுதானே?''’’
""ஆமாங்க தலைவரே, எடப்பாடி -வேலுமணிக்கு இடையிலான மோதல் இப்படி பகிரங்கமாக வெடித்த நிலையில், எடப்பாடியே களத்தில் திடீரென குதித்தார். வேலுமணியைக் கண்டிக்கும் வகையில், ’"அரசியலில் வெற்றி -தோல்வி என்பது சகஜமானது. இதில், கூட்டணி அமைத்திருந்தால், நாங்கள் சேர்ந்திருந்தால் என்றெல்லாம் பேசக்கூடாது'’ என்கிற ரீதியில் வேலுமணிக்கு சுளீர் என்று பதிலடி கொடுத்தார். அதோடு, அவரே வேலுமணியைத் தொடர்பு கொண்டு, அவரை திட்டித் தீர்க்கவும் செய்திருக்கிறார். இந்த நிலையில்தான், பா.ஜ.க. தலைவர்களுடன் கலந்துபேசி ஒரு முடிவிற்கு வரும்வரை தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறாராம் வேலுமணி.''’’
""மாஜி மந்திரிகள் மூவர் கொடுத்த கடும் அதிர்ச்சியில் எடப்பாடி இருப்பதாகவும் சொல்கிறார்களே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வுடன் எந்த உறவும் இனி இல்லை என்று எடப்பாடி அறிவித்த நிலையிலும், அ.தி.மு.க. மாஜி மந்திரிகளான வேலுமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோர், தேர்தல் நேரத்திலும் பியூஸ்கோயல் மூலம் பா.ஜ.க.வுடன் மிக நெருக்கமாகவே நட்பு பாராட்டி வந்திருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல், ரெய்டு நடவடிக்கை எல்லாம் தங்கள் மூவர் மீது மட்டும் இருக்காது என்கிற உத்தரவாதத்தை டெல்லியிடம் வாங்கிக்கொண்டு, பா.ஜ.க.வின் தேர்தல் செலவுக்காக அதே பியூஸ்கோயல் வழியாகவே ரூபாய் 350 கோடிவரை கொடுத்து, உறவு கொண்டாடியிருக்கிறார்களாம். இந்தத் தகவல் இப்போதுதான் எடப்பாடிக்கே கிடைத்ததாம். இதைக்கேட்டு ஷாக்கான அவர், இந்த மூன்று மாஜிக்களையும் அழைத்து, "உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?இது நம்ம கட்சிக்கு நீங்க செய்யும் துரோகம்னு கூட உங்களுக்குத் தோணலையா?' என்றெல்லாம் கடுமையாகத் திட்டித் தீர்த்தாராம். இதுவும் இப்போது அ.தி.மு.க.வில் பலமாகப் புகைந்துகொண்டிருக்கிறது.''’’
""இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு சதவீத வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்குன்னு எடப்பாடி சொல்லியிருக்கிறாரே?''’’
""அது மட்டுமில்லைங்க தலைவரே, ஒற்றை ஆளாக, தனி ஆளாக நான் தற்போது தேர்தலைச் சந்தித்தேன் என்றும் எடப்பாடி பேசியிருக்கிறார். எடப்பாடியின் இந்தப் பேச்சை வெறுப்போடு பார்க்கும் அ.தி.மு.க. சீனியர்களோ,’எங்கள் கட்சியில் 2 கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது கின்னஸ் ரெக்கார்டு என்று கடந்த ஆண்டு எடப்பாடியே பெருமிதமாகச் சொன்னார். ஆனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க. வாங்கிய மொத்த வாக்குகள் 88 லட்சத்து 80 ஆயிரத்து 801 மட்டும்தான். அதாவது,33 தொகுதிகளில் போட்டியிட்டு அ.தி.மு.க. வாங்கிய மொத்த வாக்குகள் இவை. "இவ்வளவு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், குறைந்தபட்சம் ஒன்றரை கோடி வாக்குகளையாவது வாங்கியிருந்தால், அது எடப்பாடி தலைமைக்குக் கிடைத்த வெற்றியாக நினைக்கலாம். அதுமட்டுமல்ல, அவர் மட்டுமே தேர்தலைச் சந்தித்தேன் என்றால், மற்ற நிர்வாகிகளான நாங்கள் என்ன கொத்து வேலைக்குப் போய்விட்டோமா?'’ என்றும் காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.''’’
""இதுதவிர எடப்பாடியை அலட்சியப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறுகிறதாமே?’’
""செங்கோட்டையன் மகன் கல்யாணம் 9ஆம் தேதி நடந்தது. இதில் தாலி எடுத்துக்கொடுக்க எடப்பாடியை அழைப்பதாக சொல்லியிருந்த அவர், கடைசி நேரத்தில் எடப்பாடியைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம். அதேபோல், வேலுமணியின் சகோதரர் திருமணமும் அண்மையில் நடந்தது. அதிலும் எடப்பாடிக்கு பெரிய முக்கியத்துவத்தை வேலுமணி தரப்பு தரவில்லை. திருமணத்திற்கு அழைக்காமல், வரவேற்புக்கு வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்களாம். இவையெல்லாம் எடப்பாடியை மட்டம் தட்டுவதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்கிறார்கள். இப்படிப்பட்ட சங்கடங்களும் எடப்பாடியை மனரீதியாக சங்கடப்படுத்தி வருகிறதாம்.''’’
""நீட் தேர்வு மோசடிக்கு எதிராக தி.மு.க. தொடங்கிய யுத்தத்தை இப்போது ராகுல் கையிலெடுத்திருக்கிறாரே?
""ஆமாங்க தலைவரே, இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் நடந்த மோசடியும், ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முதல் மதிப்பெண் எடுத்ததும் அனைவரையும் யோசிக்க வச்சிருக்கு, இந்த மோசடியை புரிந்துகொண்ட ராகுல் காந்தி, 'நரேந்திர மோடி இன்னும் பிரதமராகக் கூட பதவியேற்கவில்லை. அதற்குள் நீட் தேர்வு முறைகேடு 24 லட்சம் மாணவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் சிதைச்சிருக்கு. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருக்காங்க. ஆனால் கேள்வித்தாள் கசிவை மோடி அரசு மறுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையில் 24 லட்சம் மாணவர்களின் குரலாக வலுவாக ஒலிப்பேன். உங்கள் எதிர்காலத்துக்காகக் குரல் கொடுப்பேன்'னு சபதமே பண்ணியிருக்கார். இதன்மூலம், இந்திய மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமா ராகுல் உருவெடுத்திருக்கார்.""
""டி.சி. அரவிந்தன் டீம் பரணி, சையத் நிவாஸ்னு இரண்டு பேரை போதைக் கடத்தல் வழக்குல தூக்குனது ஞாபகம் இருக்கா...?''’’
""ஆமாங்க தலைவரே, இவங்க இரண்டு பேரோட பின்னணியை போலீஸ் விசாரிச்சதில் நிறைய அதிர்ச்சியான விவகாரங்கள் தெரிய வந்திருக்குது. இவங்க போதைப் பொருள் சப்ளையில பெரிய கையா இருந்திருக்காங்க. சவுக்கு சங்கருக்கான போதைப் பொருள் இவங்கட்ட இருந்துதான் சப்ளை. அதுமட்டுமில்லாம உடையார் வாரிசான செங்ஸ் உடையாருக்கும், இவங்ககிட்ட இருந்துதான் சரக்கு சப்ளையாகுமாம். தமிழ்த் திரையுலகின் போதைப் பழக்கமுள்ள ஆண், பெண் பிரபலங்கள் இவங்க இரண்டு பேரோட வாடிக்கையாளர்கள்தானாம். சவுக்குக்கு இவங்க அறிமுகம் மூலம் நல்லா கல்லா கட்டியிருக்கார். எடப்பாடி, வேலுமணி ரெண்டு பேரோட வாரிசுகள், இந்தப் போதை விவகாரத்துல சவுக்குகிட்ட சிக்கியிருக்காங்க. சரக்கு வாங்கிறதுக்காக, எப்படி பணம் தர்றதுனு தெரியாம சவுக்கு அக்கவுண்டுக்கே பணம் அனுப்பி வகையா சிக்கியிருக்காங்க. போதைப் பொருள் பழக்கத்துல ஸ்கொயர் பண்றதுனு ஒரு வித்தை இருக்கு. அப்படி ஸ்கொயர் பண்ற ஆட்களுக்கு, சவுக்கோட சேர்ந்து இந்த இரண்டு பேரும் சரக்கு சப்ளை பண்றதோட, தமிழகம் முழுவதும் போதைப் பொருள் ராஜ்ஜியத்தை நிறுவ இவங்க அடித்தளம் போட்டதை போலீஸ் மோப்பம் பிடிச்சுடுச்சு. இவங்க சிக்கினதை அடுத்து இதுல தொடர்புடைய இன்னும் பல விஷயங்களும் ஆட்களும் சிக்குவாங்கனு போலீஸ் விசாரணையை ஆழப்படுத்தியிருக்குது.''’’
""நானும் புதுவை மாநிலம் தொடர்பான ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுவை முதல்வருமான ரெங்கசாமி வெளியேறும் முடிவிற்கு வந்திருக்கிறாராம். இதற்குக் காரணம், தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் ரெங்கசாமி அழைக்கப்படவில்லையாம். இதனால் இனி பா.ஜ.க.வுடன் உறவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த அவர், மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைத்துக்கும் கூட, டெல்லி செல்வதைப் புறக்கணித்துவிட்டாராம்.''’’