ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் நகரில் பெரிய மாடி வீட்டை வாடகைக்கு எடுத்த கார்த்திக் என்ற இளைஞர், அங்கே மந்திரங்களைக் கற்றுக்கொடுப்பதாக அறிவித்தார். அதோடு, பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை எடுப்பதாகக் கூறி, ஏராளமான மக்களை தன்னை நோக்கி வரவழைத்தார். இந்த நிலையில், தனது மந்திர சக்தியை அதிகரிப்ப தாகச் சொல்லிக்கொண்டு, இறந்த பிணத்தை வீட்டுக்குள் வைத்து அவர் ஏழு நாட்கள் பூஜை நடத்த... அக்கம் பக்கத்தினர் அங்கே வீசிய துர்நாற்றத்தால் போலீஸுக்குப் போக, அவர்கள் வந்து சடலத்தை அப்புறப்படுத்தி, அந்த கார்த்திக்கையும் கைது செய்தனர். இது அப்போது பெரும் பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தியது.

dd

அதே கார்த்திக்கிடம் சில நாட்கள் மந்திரம் கற்றுக் கொண்ட ஒருவர், தன் வீட்டுக்குள் 20 அடி ஆழக்கிணறு தோண்டி புதையல் எடுக்க முயன்ற சம்பவம், இப்போது அதே மாதிரியான பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்தக் களேபரம், பெரம்பலூர் அருகிலுள்ள விளாமுத்தூர் கிராமத்தில்தான் அரங்கேறியிருக்கிறது. அங்கே என்னதான் நடந்தது?

விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு, இவர் கார்த்திக்கிடம் மந்திரம் கற்றுக் கொண்டதாகச் சொல்லிக்கொண்டிருந்தாராம். இவரும் தன் குரு கார்த்திக் பாணியில் பில்லி சூனியம் எடுப்பதாக சொல்லிக்கொண்டு திரிந்திருக்கிறார்.

Advertisment

இந்த பிரபுக்கு, செல்வி என்ற மனைவியும், 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபு, மந்திர மாயம் என்று இருந்ததால் அவர் மனைவி, தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற சித்தாள் வேலைக்குச் சென்றுவந்தார்.

இதற்கிடையே பிரபு, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த மந்திரவாதி மாயா என்கிற கிருஷ்ணமூர்த்தியை அணுகியுள்ளார். அவரிடம் குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற என்ன வழி என்று கேட்டுள்ளார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, தனது சிஷ்யர்களுடன் பிரபுவின் வீட்டிற்கு வந்துள்ளார். வந்தவர் அங்கும் இங்கும் வீட்டில் நடந்தபடியே இருந்தவர், பிரபுவிடம் "உனது வீட்டுக்குள் பூமிக்கு அடியில் இரண்டு பானைகளில் தங்கக் காசுகள் இருக்கின்றன. எனவே பூமியை தோண்டினால் நிச்சயம் உனக்கு புதையல் கிடைக்கும். அதன் பிறகு நீ பெரும் பணக்காரனாக மாறிவிடுவாய்'' என்று விபூதி அடித்துச் சத்தியம் செய்துள்ளார். இதை நம்பிய பிரபு, அதற்கு சம்மதிக்க, கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி, அவரது மனைவி நாகம்மாள், துறையூரைச் சேர்ந்த குமார், பிரபாகர் லோகநாதன், வேலு, மணிமாறன். ஆகிய எட்டுபேர் கொண்ட ஒரு டீம் பிரபுவின் வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் கும்ப கலசங்களுடன் தடபுடலான பூஜை போட்டனர். அதன்பிறகு வீட்டுக்குள்ளேயே பெரும் யாகம் நடத்தியுள்ளனர். பின்னர் பிரபுவின் வீட்டு அறைக்குள் பள்ளம் தோண்ட முடிவெடுத்தனர்.

dd

Advertisment

அது நான்கு அடி ஆழத்திற்குப் பிறகு பாறைகள் நிறைந்த பூமி என்பதால், தோண்டுவதற்கு மிகவும் கடினமான இருந்தது. அதனால், பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும் மிஷினை ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு வாடகையாக 60 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டு, 50,000 வரை பணம் கொடுத்துள்ளனர். மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மட்டும் கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, யாருக்கும் தெரியாதவகையில் பூமியின் அடியில் இருந்த பாறைகளை உடைத்து கிணறு தோண்ட ஆரம்பித்தனர். இப்படி ஒரு அடி இரண்டு அடி என 22 அடி ஆழம்வரை தோண்டியும் பூமியிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. மாறாக பூமிக்கு அடியில் இருந்த ஊற்று நீர்தான் வெளியே பீறிட்டு வந்து அனைவர் முகத்திலும் அடித்திருக்கிறது.

இதையடுத்து, வேறு என்ன செய்யலாம் என்று மந்திரவாதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எல்லோரும் தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக் கதவு தட்டப்பட, கதவைத் திறந்த அந்த மந்திர கோஷ்டி அதிர்ந்தது. காரணம், வீட்டுக்கு வெளியே பெரம்பலூர் பொறுப்பு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஏகப்பட்ட போலீஸ் நின்றது.

மந்திரவாதி உட்பட அனைவரையும் சுற்றி வளைத்து அள்ளிச் சென்ற போலீஸ் டீம், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோதுதான், குறுக்கு வழியில் பணக்காரனாக ஆசைப்பட்ட பிரபுவின் விவகாரம் வெளியே வந்தது.

இது குறித்து நம்மிடம் பேசிய காவல் துறையினர், "அதே ஊரைச் சேர்ந்த சிலர், இரவு நேரங்களில் அந்த தெரு வழியாக செல்லும்போது, பிரபு வீட்டுக்குள் பாறை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. கல் குவாரிக்காக மலையை உடைக்கும் மெஷின் பிரபு வீட்டுக்குள் எப்படி என்று சந்தேகப்பட்டு மறைந்திருந்து பார்த்துள்ளனர். அப்போது பிரபுவோடு மந்திரவாதி கிருஷ்ணமூர்த்தி டீம் அங்கே பூஜை செய்வ தெல்லாம் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் சந்தேகப்பட்டு எங்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் புதையல் கிடைக்க, அடுத்து நரபலி என்றெல்லாம் இறங்கியிருந்தால் என்ன ஆவது? சரியான நேரத்தில் அவர்கள் அனை வரையும் மடக்கிவிட்டோம்''” என்கிறார்கள் புன்னகையோடு.

பெரியார் மண்ணில் இன்னும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் பகீரூட்டி வருவது, வெட்கக் கேடு.