துணைமுதல்வரான ஓ.பி.எஸ். இந்தமுறையும் போடியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கே அவருக்கு எதிராக சீர்மரபினர் களமிறங்கி, அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.கவின் முதல் பட்டியலில் போடி தொகுதியில் மீண்டும் ஓ.பி.எஸ். என்ற அறிவிப்பு, அங்குள்ள அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே பெரிதாக எந்த உற்சாகத்தையும் தரவில்லை. அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் மட்டுமே அங்குள்ள தேவர் சிலை முன்பாக வெடி வெடித்து இனிப்புகள் வழங்கித் தனியாகக் கொண்டாடினர்.
காரணம், கட்சிப் பொறுப்பிலுள்ள நகரச் செயலாளர் பழனிராஜ். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேதுராமன், ஒன்றியச் செயலாளர் சற்குணம் உள்ளிட்ட அவரது ஒருசில ஆதரவாளர்கள் மட்டுமே, அவர்மூலம் தங்களை வளர்த்துக்கொண்டார்களே தவிர... பெரும்பாலான கட்சிப் பொறுப்பாளர்களும் தொகுதி மக்களும் அவரால் எந்தப் பயனையும் அடையவில்லையாம். அதனால் அ.தி.மு.க.வினரே, இந்த உற்சாகத்தில் கலந்துகொள்ளாமல் கப்சிப் என்று அமைதியாக அமர்ந்துவிட்டார்கள்.
இந்த நிலையில்தான் சீர்மரபினர் தொகுதி முழுக்கச் சென்று "ஓ.பி.எஸ்.சுக்கு ஓட்டுப் போடாதீர்கள்' என்று போர்க்கொடி தூக்கிவருகிறார்கள். குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கல்லுப்பட்டி, அம்மாப்பட்டி, கம்பம் வடக்குப்பட்டி, கூலையனூர். ராசிங்கபுரம் கோடங்கிபட்டி, போடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள சீர்மரபினர், எடப்பாடி அரசைக் கண்டித்து தங்கள் வீட்டு முகப்புகளில் கருப்புக்கொடிகளைப் பறக்கவிட்டுக் கண்டனம் தெரிவித்து வருவதோடு, மண்ணைவாரித் தூற்றியும் சாபம்விட்டும் வருகின்றனர்.
மேலும் சீர்மரபினர் சங்கத்தினர், அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடு தேடிச்சென்று, "நமது சமுதாய மக்களுக்கு சான்றிதழ் வழங்காத ஓ.பி.எஸ்.ஸை தோற்கடிக்க வையுங்கள்' என்றபடி அவர்களின் காலில் விழுந்தும் அதிரடிப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
இது சம்பந்தமாக சீர்மரபினர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தியிடம் கேட்ட போது...’""கடந்த சில வருடங்களாகவே எங்களுக்கான டி.என்.டி. சான்றிதழ் வழங்கக்கோரி பல போராட்டங்களை நடத்தி வருகிறோம் அதோடு ஜாதி அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் இந்த அரசிடம் வைத்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது இந்த அரசு திடீரென வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, மற்ற சமூகத்தினரிடம் பாரபட்சம் காட்டியுள்ளது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
68 சமுதாய மக்கள் இருக்கக்கூடிய சீர்மரபினருக்கு 7 சதவீத இடஒதுக்கீடுதானா? இது எந்த விதத்தில் நியாயம்? அதனால்தான் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.சைக் கண்டித்து இப்படியொரு நிராகரிப்புப் போராட்டத்தில் குதித்திருக்கிறோம். ஓ.பி. எஸ்.சைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று எங்கள் சீர்மரபினர் சமூக மக்கள் மத்தியில், காலில்விழுந்து கேட்டுக் கொண்டு வருகிறோம். இது சம்பந்தமாக ஆடியோவையும் வீடியோவையும் கூட வெளியிட்டு அவற்றையும் பிரச் சார ஆயுதமாக்கி இருக்கிறோம். அவை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது''’என்றவர் தொடர்ந்து பேசினார்.
""இது சம்பந்தமாக ஏற்கனவே ஓ.பி.எஸ்.ஸிடம் நேரில் சென்று பலமுறை வலியுறுத்தியும்கூட அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. எப்படியோ தேர்தல் நேரத்தில் பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் எங்க சீர்மரபினர் சமூகத்தினரை, காசுக்கு அடிபணிகிறவர்கள் என்று எண்ணிவருகிறார். அது ஒருபோதும் நடக்காது. வரும் தேர்தலில் ஓ.பி.எஸ்.சைத் தோற்கடித்து டெபாசிட் இழக்க வைப்போம்.
10.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் எங்களுக்கும் வன்னியர் சமூகத்திற்கும் இருந்து வந்த ஒரு நட்புறவையும் இந்த அரசு கெடுத்து விட்டது. இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டி முதல் நகரம் வரை விரிவடையும்''’என்றார் அழுத்தமாய்.
சீர்மரபினரைப் போலவே உள்ஒதுக்கீடு கிடைக்காத அனைத்து சமூக அமைப்பினர்களும் எடப்பாடி அரசுக்கு எதிராக, இதயத்தில் குமுறும் எரிமலையோடு அணிவகுத்து வருகின்றனர். இதை எப்படி எடப்பாடி அரசு எதிர்கொள்ளப்போகிறது?