2024, டிசம்பர் மாதத்தோடு தமிழ்நாட்டிலுள்ள 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள் மற்றும் சேர்மன்கள் பதவிக் காலம் முடிவடைகிறது. மீதியுள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி போன்ற 9 மாவட்டங்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2027 வரை உள்ளது.

பதவிக்காலம் முடிவடையும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? அல்லது, 2027 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலோடு சேர்த்து நடக்கப்போகிறதா? அல்லது 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பதவிகளை மட்டும் கலைத்துவிட்டு இப்போதே தேர்தல் நடத்தப்படவுள்ளதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

cc

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சீனியர் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பெரும்பாலான அமைச்சர்கள், பதவிக்காலம் முடிவுறாத 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு 27 மாவட்டங்களோடு சேர்த்து ஒரே கட்டமாக தேர்தலை நடத்தலாம், நகர்ப்புற தேர்தலை பின்பு நடத்தலாம் எனச் சொல்லியுள்ளார்கள். சில அமைச்சர்கள் மட்டும், உள்ளாட்சித் தேர்தலை தனித்தனியாகவே நடத்தலாம் என கூறியுள்ளார்கள். ஒரு அமைச்சர் மட்டும், "உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடுமையான அதிருப்தி உள்ளது, அதனால் இந்த 29 மாவட்டங்களில் தேர்தலை நடத்தாமல் தனி அதிகாரிகளின் நிர்வாகத்தில் வைத்திருக்கலாம். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலோடு சேர்த்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கட்டும்' எனக் கூறியுள்ளார். இதில் என்ன முடிவு எடுக்கலா மெனத் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார் முதலமைச்சர்.

முதலமைச்சர் ஆலோசனை நடத்துவது போல், 9 மாவட்டங்களை சேர்ந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஆலோசனை நடத்திவருகின்றனர். இதுகுறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, "27 மாவட்டங்களோடு மீதியுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சியை கலைத்துவிடலாம் என அரசு ஆலோசிப்பதற்கு சம் பந்தப்பட்ட மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்புகள், மாநில கூட்டமைப்பினரோடு ஆலோசனை நடத்தியுள்ளோம். அதில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதித்துவத்தை அரசு கலைக்கும் மசோதாவை கொண்டுவந்தால் அதை ஏற்கக் கூடாது என கவர்னரை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்துள்ளோம். கவர்னரையும் மீறி 9 மாவட்ட உள்ளாட்சிகள் கலைக்கப் பட்டு தேர்தல் அறிவித்தால் நீதி மன்றத்தை நாடுவது என முடிவு செய்துள்ளோம். இதற்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்திவருகிறோம்'' என்றார். சட்டப் போராட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தயாராகிறது, இதற்கு ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், சேர்மன்கள் ஆதரவு தந்து நிதி தந்துள்ளனர்.

இதுகுறித்து ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் பேசியபோது, "உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றிபெற செலவு செய்த பணத்தை சம்பாதிக்க இதுதான் நேரமென கழக ஆட்சி அமைந்ததும் பூந்து விளையாடி விட்டார்கள். திருவண்ணாமலை உட்பட சில மாவட்டங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலையே செய்யாமல் வேலை செய்ததாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் வரவு வைத்து, அந்த பணத்தினை எடுத்துத் தரச்சொல்லி பணித்தளப் பொறுப்பாளர்கள் மூலமாக மக்களை மிரட்டி பணம் வசூலித்தார்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள். இது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியது. இப்படி இன்னும் சில உள்ளன, இது மக்களை நேரடியாக பாதித்துள்ளது. அதேபோல், ஆளும்கட்சியானபின் கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள், நிர்வாகிகள் சம்பாதிப்பதற்கு தலைவர்கள், கவுன்சிலர்கள் விடவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஒ.செ.க்கள் இதில் பெரியதாக கவனம் செலுத்தவில்லை.

"நாடாளுமன்றத் தேர்தலின்போது, பதவியில் இருக்கறவங்கதானே சம்பாதிச்சாங்க, அவுங்களுக்கு நீங்கதானே சப்போர்ட் செய்தீங்க, அவங்களே தேர்தல் வேலையை பார்ப்பாங்க' என மற்ற கீழ்மட்ட நிர்வாகிகள் ஒதுங்கி நின்னாங்க. அவங்கள சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென ஆகிடுச்சி. தீவிரமாக செயல்படும் கட்சியினருக்கு போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஏதாவது ஒர்க் தரலாம் என்றால் ஊராட்சி மன்றத் தலைவர்கள், சேர்மன்கள் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். அதையும் மீறி சில வேலைகள் தந்தாலும் பதவியிலுள்ள அவர்கள் தடை ஏற்படுத்தினார்கள். கட்சியினரை திருப்தி செய்யவேண்டும், இல்லையேல் சட்டமன்றத் தேர்தலின்போது களத்தில் பெரியளவில் நெருக்கடி ஏற்படும் எனத் தலைவருக்கு சொல்லப்பட்டுள்ளது. அதனால் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவைத்து, அடுத்த இரண்டு ஆண்டுகள் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்கு ஊரக உள்ளாட்சிக்கு வரும் பணிகளை பிரித்துத் தந்தால் அவர்கள் பயனடைவார்கள். அதேபோல் மக்களும் பல உள்ளாட்சி பிரதிநிதிகளின் அத்துமீறல்களை மறக்கவும் வாய்ப்புள்ளது, இதனால் சட்டமன்றத் தேர்தலை தெம்பாக எதிர் கொள்ளலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது'' என்கிறார்கள். ஆட்சித்தலைமை என்ன செய்யப்போகிறது, முதலமைச்சர் என்ன முடிவெடுப்பார் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisment