மக்கள் நேரடியாகப் பயன்பெறுகிற அரசு நலத்திட்டங்களை அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் தொடங்கிடவேண்டும். அப்போது தான் அதை உற்பத்தி செய்கிறவர்கள் உரிய காலத்தில், தரமாக உற்பத்தி செய்து அளிக்கமுடியும். அப்படி ஒன்றுதான் ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி - சேலை திட்டம்.
ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு தமிழக அரசின் சார்பாக வேட்டி சேலை வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் கைத்தறி நெசவாளர்களை வாழ்விக்க, அவர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்க கைத்தறியில் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கைத்தறிக் கூடங்களால் இந்த அளவுக்கு துணிகளை உற்பத்தி செய்யமுடியாது என்பதால் விசைத்தறிகள் மூலம் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கைத்தறித் துறை சார்பாக விசைத்தறிக்கூடங்களுக்கும், விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கும் துணி உற்பத்திக்கான ஆர்டர் வழங்கப்பட்டு, அதை கைத்தறித் துறை பெற்றுக்கொள்ளும்.
தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் போலியான விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, மிகக்குறைந்த விலையில் வெளிமார்க்கெட்டில் வேட்டி சேலைகள் வாங்கி, அதை கூட் டுறவு சங்கங்கள் மூல மாக உற்பத்தி செய் யப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது. இதன்மூலம் சம்பந்தப் பட்ட அமைச்சர் தொடங்கி கைத்தறித் துறை அதிகாரிகள்வரை பல கோடி ரூபாய் கொள்ளை லாபம் எடுத்தனர். தற்போதும் சில பகுதிகளில் போலியான கூட்டுறவு சங்கத்தின் பெயரில் விசைத்தறிக் கூடத்தில் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதாக போலி பில்கள் போடப்படுவது நடந்துகொண்டு தான் வருகிறது என விசைத்தறியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆண்டு தொடக்கத்திலேயே விசைத்தறிக் கூடங்களுக்கு உற்பத்திக்கான அரசாணை வழங்காமல் தைப்பொங்கலுக்கு சில மாதங்களுக்கு முன்பு உற்பத்திக்கான ஆர்டர் வழங்குவதால் வெளிமார்க்கெட்டிலிருந்து துணிகளை விலைக்கு வாங்கி, விசைத்தறிக் கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக போலியாகக் காட்டப்படுகிறது. இதன்மூலம் அதிகாரிகள், தரகர்கள் பல கோடி ரூபாய் கொள்ளையடிப்பது வாடிக்கையாகிறது.
இதைத் தடுக்க வேண்டும். உண்மையான விசைத்தறியாளர்களுக்கு துணிகள் உற்பத்தி செய்ய அரசாணை வழங்கவேண்டும். எந்த நோக்கத்திற்காக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறதோ அந்த நோக்கத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து விசைத்தறி சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.
இலவச வேட்டி, சேலைகளை, குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்ட விசைத்தறி சங்கங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து கொடுக்கின்றன. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். வருடம் முழுக்க இவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பியே இருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதத்திலேயே இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்வதற்கான அரசாணை வழங்கப்பட வேண்டும். ஆனால் தேர்தலைக் காரணம் காட்டி மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் ஐந்து லட்சம் விசைத்தறி யாளர்கள், துணி உற் பத்தி செய்யும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். இது பற்றி விசைத்தறி சங்கங் களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சுரேஷ் கூறும்போது "தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ளது நெசவுத்தொழில். இத்தொழிலில் லட்சக்கணக்கான மக்கள் ஈடுபடுகிறார்கள். தமிழக அரசின் இலவச வேட்டி சேலை, மாணவர்களுக்கு இலவசச் சீருடை என துணி உற்பத்தி செய்வதற்கு அரசு ஜூன் மாதம் அரசாணை வழங்கினால்தான் டிசம்பருக்குள் துணி உற்பத்தி செய்து அரசிடம் நாங்கள் ஒப்படைக்க முடியும். ஆனால் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி சில மாதங்கள் தள்ளிப் போய் இறுதி நேரத்தில்தான் அதற்கான ஆர்டர் வழங்குகிறார்கள். இதனால் வெளிமார்க்கெட்டில் இருந்து குறைந்த விலையில் வேட்டி சேலை வாங்கி அதை கூட்டுறவு சங்கம் மூலமாக உற்பத்தி செய்ததாக கணக்கு காட்டுகிறார்கள் அதிகாரிகள்.
விசைத்தறித் தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க, எந்தவிதமான முறைகேடும் நடைபெறாமல் இருக்க, அரசு இதில் கவனம் செலுத்தி இந்த ஜூன் மாதத்திலேயே எங்களுக்கு அரசாணை வழங்கிட வேண்டும் என கைத்தறித் துறை அதிகாரிகளைக் கேட்டு நாங்கள் அரசுக்கு மனு அளித்துள்ளோம்'' என்றார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கைத்தறித்துறை மண்டல அலுவல கம் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். அரசின் நோக்கம், பயனாளிகளான மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்றால், முறைகேடுகள் தடுக்கப்பட்டு, ஆர்டர்கள் வழங்குவது நேர்மையாக நடக்க வேண்டும்.